Published:Updated:

`ரூ.7,500 செலுத்தினால் மாதம் ரூ. 20,000 சம்பளம்!' - டிப்ளமோ இன்ஜினீயரை ஏமாற்றிய 4 பேர்

சென்னை அரும்பாக்கத்தில் 7,500 ரூபாய் செலுத்தி பொருள்களை வாங்கினால் மாதம் 20,000 ரூபாய் சம்பளம் என விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்ட மேலாளர், ஊழியர்கள் என 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

pandian
pandian

சென்னை கொளத்துார், தணிகாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). டிப்ளமோ இன்ஜினீயர். இவர், சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது எனது குடும்ப நண்பர் ஒருவரிடம் வேலை தொடர்பாகப் பேசினேன். உடனே அவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் நிறுவனம் குறித்து என்னிடம் தெரிவித்தார். மேலும், அந்த நிறுவனத்தில் மாதம் 20,000 ரூபாய் சம்பளம் எனத் தகவல் கூறினார்.

raja
raja

உடனடியாக அந்த நிறுவனத்துக்கு பயோடேட்டாவுடன் சென்று வேலைக்கு விண்ணப்பித்தேன். அப்போது, வேலையில் சேர வேண்டும் என்றால் நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களை 7,500 ரூபாய் செலுத்தி பெற வேண்டும் என்று கூறினார். அதை நம்பி நானும் பணம் கொடுத்துப் பொருள்களை வாங்கினேன். நிறுவனத்தின் மேலாளர் பாண்டியன் மற்றும் ஊழியர்கள் ராஜா, ராஜ்குமார், ராஜ்கமல் ஆகிய 4 பேர் எனக்கு அறிமுகமாகினார்கள்.

நான் செலுத்திய பணம் 7,500 ரூபாயை இரண்டு வாரத்துக்குள் திரும்பத் தந்துவிடுவதாக எனக்கு அவர்கள் வாக்குறுதி அளித்தனர். மேலும், இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிடும் நபர்களுக்கு ஏற்ப கமிஷனாக பணம் கிடைக்கும் என்று எனக்கு ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதை நம்பி இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். அவர்கள் 15,000 ரூபாய் செலுத்தினார்கள். நான் செலுத்திய 7,500 ரூபாய்க்கு ஜூஸ் பாட்டில்கள், ஷாம்பூ, சோப், டீ பாக்கெட் ஆகியவற்றை கொடுத்தனர்.

rajkumar
rajkumar

அந்த நிறுவனத்தில் என்னைப் போல பலர் பணம் செலுத்தி வேலைக்குச் சேர்ந்திருந்தனர். அந்த நிறுவனத்தில் எப்படி மற்றவர்களிடம் பேச வேண்டும் என எனக்கும் அங்குள்ளவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறுவனத்தின் பொருள்களை வாங்க வைப்பது, அதிகளவில் வேலைக்கு ஆள்களை சேர்த்து விடுவது எப்படி? போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டது.

வேலைக்குச் சேர்ந்து 2 வாரங்களுக்குப்பிறகு நான் செலுத்திய 7,500 ரூபாயை தரவில்லை. பணத்தைக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன்பிறகு என்னைப்போல வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது பலர் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

rajkamal
rajkamal

அதன் பேரில் சூளைமேடு போலீஸார் விசாரணை நடத்தியதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலை தேடும் வாலிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நிறுவனத்தின் மேலாளர் பாண்டியன் மற்றும் ஊழியர்கள் ராஜா, ராஜ்குமார், ராஜ்கமல் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.