Published:Updated:

``என் இல்லற சந்தோஷத்தைக் கெடுத்தது`கிக் பாக்ஸர்'தான்'' - ரவுடியின் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சென்னை அம்பத்தூரில், `கிக் பாக்ஸர்' ஹரிதாஸ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்கள் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஹரிதாஸ்
கொலை செய்யப்பட்ட ஹரிதாஸ்

சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (42). இவர்மீது கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள், அம்பத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில ஆண்டுகள் வரை அம்பத்தூர் ரவுடிகள் பதிவேட்டில் ஹரிதாஸின் பெயர் இருந்தது.

திருவள்ளுவர் நகரில் ஹரிதாஸை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் பிரபலமானவர். மேலும், அவர் `கிக் பாக்ஸர்' என்பதால், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களை எளிதில் சமாளிப்பார். ரவுடியிஸத்தை விட்டுவிட்டு தற்போது ஆட்டோ ஓட்டிவந்தார். ஆனால் கத்தியை எடுத்தவன் கத்தியால்தான் சாவான் என்பது ஹரிதாஸின் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது.

``என் இல்லற சந்தோஷத்தைக் கெடுத்தது`கிக் பாக்ஸர்'தான்'' - ரவுடியின் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தச் சமயத்தில் அம்பத்தூர் ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி பிளாட்பாரங்களில், ஹரிதாஸ் கைகாட்டுபவர்கள்தான் கடை வைக்க முடியும். அந்த அளவுக்கு ஹரிதாஸுக்கு செல்வாக்கு இருந்தது. அவரின் வளர்ச்சியைப் பிடிக்காத அவரின் நண்பர்கள், எதிரிகள், அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

கடந்த 7-ம் தேதி, அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் பாருக்கு ஹரிதாஸ் மது அருந்தச் சென்றார். அப்போது, அவரின் நண்பர்கள் சிலரும் அந்தப் பாரில் இருந்தனர். திடீரென அவர்கள் கத்தி, அரிவாளால் ஹரிதாஸை சரமாரியாக வெட்டினர். மதுபோதையில் இருந்தபோதிலும் ஹரிதாஸ் தனியொருவனாக அவர்களைச் சமாளித்தார். இந்தச் சமயத்தில், வெளியில் இருந்த சிலர் பாருக்குள் நுழைந்தனர். அவர்களும் ஹரிதாஸை வெட்டினர். இதனால் நிலைக்குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

ஹரிதாஸை கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பாருக்குள் இந்தச் சம்பவம் நடந்ததால், மதுபோதையில் இருந்தவர்கள் போதை தெளிந்து அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். பார் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொலை நடந்த பார், போர்க்களம் போல காட்சியளித்தது. மதுபாட்டில்களும் சேர்களும் உடைந்தன. இந்தத் தகவல் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிதாஸின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை வழக்கில் கைதான பி.கே. என்கிற கரிகாலன்
கொலை வழக்கில் கைதான பி.கே. என்கிற கரிகாலன்

சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் வந்து விசாரித்தனர். கொலையாளிகளைப் பிடிக்க இணை கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், விஜயகுமார், பொற்கொடி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமரன், ரமேஷ் மற்றும் காவலர்கள், கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வுசெய்தனர். விசாரணையில், கொலை செய்தவர்களின் விவரங்கள் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனால், அவர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

தனிப்படை போலீஸாருக்கு கொலையை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்படி, கொலையாளிகள் குறித்து முக்கிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொலை வழக்கில் ஹரிதாஸின் நண்பர்களான பி.கே என்று அழைக்கப்படும் கரிகாலன், அவரின் சகோதரர் மணி, சேத்துப்பட்டு செந்தில், நெப்போலியன், தாஸ், டார்வின், கோழிகுஞ்சு சுரேஷ் , ரஞ்சித் ஆகிய 8 பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கிக் பாக்ஸர் ஹரிதாஸ் கொலைக்கான காரணமும் தெரியவந்தது.

கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் என்கிற மணி
கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் என்கிற மணி

யார் இந்த ஹரிதாஸ்?

அம்பத்தூர் ரயில் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிளாட்பாரத்தில் கடை வைக்க வேண்டும் என்றால், அதற்கு ஹரிதாஸின் அனுமதி வேண்டும். அதோடு, அவருக்கு தினமும் வியாபாரிகள் மாமூல் கொடுக்க வேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பகுதியில் வியாபாரிகள் கடை வைக்க முடியாது.

ஹரிதாஸிக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மகள் நர்ஸ், மகன் ஆட்டோ ஓட்டிவருகிறார். அந்தப் பகுதியில் உள்ள கோயில் திருவிழா ஹரிதாஸ் தலைமையில்தான் சில ஆண்டுகளாக நடந்துவந்துள்ளது. விழாவுக்கு வசூலான பணத்தில் ஹரிதாஸின் நண்பர்கள் சிலர் கணக்கு கேட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கும் ஹரிதாஸிக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. அதோடு, பிளாட்பார கடைகள் வைப்பதில் ஹரிதாஸிக்கு எதிராக ஒரு டீம் களமிறங்கியுள்ளது. இப்படிப் பல தரப்பில் ஹரிதாஸுக்கு பலருடன் முன்விரோதம் இருந்தது.

மூன்று காரணங்கள்

ஆரம்ப காலத்தில் ஹரிதாஸ்வுடன் இருந்த சிலர், அவருக்கு எதிரிகளாகினர். அதற்கு, ஹரிதாஸின் அசுரவளர்ச்சிதான் முக்கியக் காரணம். அதனால், ஹரிதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் அவரின் கொலைக்கான முதல் காரணம் என்கின்றனர் போலீஸார்.

இரண்டாவதாக, ஹரிதாஸை நம்பி செயல்பட்டவர்களை அவர் கைவிட்டுவிட்டதாகக் கைதானவர்கள் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் ஹரிதாஸ், அவர்களைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுள்ளார். 'அதற்கு முன் ஹரிதாஸை நாங்கள் கொலைசெய்துவிட்டோம்' என கைதானவர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலை வழக்கில் கைதான சேத்துப்பட்டு செந்தில்
கொலை வழக்கில் கைதான சேத்துப்பட்டு செந்தில்

மூன்றாவதாக, ஹரிதாஸுக்கு போலீஸ் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு இருந்துள்ளது. அதனால், ஹரிதாஸ் வைப்பதுதான் அங்கு சட்டமாக இருந்ததால் அவரால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனால், ஹரிதாஸ் உயிரோடு இருந்தால் நாம் வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து, அவரைக் கொலை செய்ய மூன்று மாதங்கள் திட்டமிட்டு காரியத்தை முடித்துள்ளனர். இது தவிர இன்னும் சில காரணங்களும் உள்ளன.

இந்த வழக்கில் கைதான ரவுடி ஒருவர், ஹரிதாஸால் சில ஆண்டுகளுக்கு முன் தாக்கப்பட்டுள்ளார். அவர், போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், `என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியாததற்கு ஹரிதாஸ்தான் காரணம். சில ஆண்டுகளுக்கு முன் ஹரிதாஸ் என்னுடைய முதுகுத் தண்டுவடத்தில் தாக்கியதால், நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அதன்பிறகு, என் இல்லற வாழ்க்கை எனக்கு துன்பமானது. அந்த விரக்தியில்தான் ஆத்திரம் தீர அவரைக் கொலைசெய்தேன்' என்றும் கூறியுள்ளார்.