Published:Updated:

`சூதுகவ்வும்' பட பாணியில் 9 கட்டளைகள்! - டார்கெட் வைத்து செல்போன் திருடிய ஆந்திர கும்பல் தலைவன்

சென்னையில் கைதான திருட்டுக் கும்பலின் தலைவன் ரவி, தன்னுடைய கூட்டாளிகளுக்குச் செல்போன்களைத் திருடுவது குறித்து 9 ஐடியாக்களை சொல்லிக்கொடுத்துள்ளார்.

Arrested Persons
Arrested Persons

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களை செல்போன் திருட சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த ரவி. அவரை பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். ரவியுடன் சேர்த்து அவரின் கூட்டாளிகள் 10 பேரையும் போலீஸார் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

Arrested Persons
Arrested Persons

ரவியிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவர், ``ஆந்திரா, விஜயவாடாவைச் சேர்ந்த ரவி, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். கார்பென்டர் வேலைக்காக சென்னை வந்தார். ஆனால், அவருக்கு வேலை கிடைக்காததால் பசியோடு சென்னையில் தங்க இடமின்றி தவித்துள்ளார். அப்போதுதான் முதல் முதலில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஒருவரிடமிருந்து செல்போனைத் திருடியுள்ளார் ரவி. அதை விற்ற பணத்தில் சாப்பிட்டுள்ளார். செல்போனைத் திருடிவிற்றால் பணம் எளிதில் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து செல்போன்களைத் திருட ஆரம்பித்துள்ளார்.

வாரம் முழுவதும் திருடும் செல்போன்களைத் தங்கியிருக்கும் வீட்டில் வைத்துவிடுவார். பிறகு ஆந்திராவுக்கு அதை எடுத்துச் சென்று விற்றுவிடுவார். அந்தப் பணத்தில் விருப்பம்போல சந்தோஷமாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துள்ளார். செல்போனைத் திருடும்போது பல தடவை சிக்கியுள்ளார். ஆனால், அந்த இடத்திலேயே மன்னிப்புக் கேட்டு தப்பிவிடுவார் ரவி. இதனால் ரவி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

Arrested Persons
Arrested Persons

இதனால் ரவி, சுதந்திரமாக சென்னையில் செல்போன்களைத் திருடிவந்துள்ளார். அவரின் சொந்த ஊரில் ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களையும் செல்போன் திருட்டில் ஈடுபடுத்தினால் பல செல்போன்களைத் திருடி தினமும் லட்சங்களில் பணம் சம்பாதிக்கலாம் என்று ரவி திட்டமிட்டுள்ளார். இதற்காக வேலையில்லாத இளைஞர்களிடம் செல்போன் திருடினால் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைக் கூறியுள்ளார். ரவியின் பேச்சை நம்பிய இளைஞர்களும் சென்னை வந்துள்ளனர். சென்னையில் அவர்கள் தங்க வீடு வாடகை எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்கு மாத வாடகையாக 5,000 ரூபாய் செலவழித்துள்ளார். அந்த வீட்டிலேயே செல்போன்களைத் திருட பயிற்சியும் அளித்துள்ளார்.

`சூதுகவ்வும்' பட பாணியில் அந்தப் பயிற்சியில் 9 ஐடியாக்களைத் தன்னுடைய கூட்டாளிகளுக்கு ரவி சொல்லிக் கொடுத்துள்ளார். அதில் 1. வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதுபோல செல்போன்களைத் திருட டிப்டாப்பாகச் செல்ல வேண்டும். 2. தெலுங்கு பத்திரிகைகள், கைக்குட்டை ஆகியவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். 3. கூட்டமாக இருக்கும் பஸ்சில் ஏறுபவர்களின் மேல்சட்டைப் பையில் உள்ள செல்போன்களை முதலில் நோட்டமிட வேண்டும். 4. பிறகு அந்த நபரின் அருகில் பேப்பர் படிப்பதைப்போல நடிக்க வேண்டும்.

ஒரு வாரம் பயிற்சி; ரூ.1,000 சம்பளம்; 2 நாள் விடுமுறை!- ஆந்திரா டு சென்னை வந்த 10 செல்போன் திருடர்கள்

5. செல்போனை வைத்திருப்பவரின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் முகத்தை பேப்பரைக் கொண்டு மறைக்க வேண்டும். அந்தச் சமயத்தில்தான் செல்போனைத் திருட வேண்டும். 6. பேப்பர் மூலம் செல்போனைத் திருட முடியவில்லை என்றால் கைக்குட்டை மூலம் அடுத்து முயற்சி செய்ய வேண்டும். 7. செல்போனை வைத்திருப்பவரின் அருகில் கைக்குட்டையை தவறுதலாக விழுவதைப்போல கீழே போட வேண்டும். 8. பிறகு அதை எடுத்துத்தரும்படி சைகையில் சொல்ல வேண்டும். (ஏனெனில், அவர்களுக்குத் தமிழ் தெரியாது). 9. கைக்குட்டையை எடுக்க குனியும்போது சட்டைப்பையிலிருக்கும் செல்போனைத் திருட வேண்டும் என்று ரவி தன்னுடைய கூட்டாளிகளிடம் கூறியுள்ளார்.

தன்னுடைய கூட்டாளிகளால் ரவி ஏமாறாமல் இருக்க புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளார். இதற்காக செல்போன் திருட்டுக் கும்பலில் உளவாளிகளைப்போல சிலரை ரவி நியமித்து வைத்துள்ளார். தினமும் திருடும் செல்போன்கள் குறித்த விவரங்களை ரவியிடம் அந்த இளைஞர்கள் கொடுத்து கணக்கு காண்பிக்க வேண்டும். அப்போது அவரின் நம்பிக்கை உரியவர்களின் பதிலுக்காக ரவி காத்திருப்பார். அவர்கள் கண்களால் சிக்னல் கொடுத்த பிறகே, செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு சம்பளத்தைக் கொடுப்பார். செல்போன் திருடுபவர்கள் தன்னை ஏமாற்றுவது தெரிந்தால் உடனடியாக அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவார்.

Ravi
Ravi

கடந்த ஓராண்டாக ரவி சென்னையில் செல்போன் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். அதை வைத்துப்பார்க்கும்போது அவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் திருடிய செல்போன்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். வாரத்துக்கு 100 செல்போன்கள் இவர்களின் டார்க்கெட்டாக இருந்துள்ளது" என்றார்.