Published:Updated:

`போன் பண்ணினால் கஞ்சா வரும்!' - டோர் டெலிவரி செய்து கைதான சென்னை ஐ.டி ஊழியர்

மொபைல் பேங்கிங் சேவையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்… மொபைல் கஞ்சா சேவையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னையில் மொபைல் மூலமாக ஆர்டர்களைப் பெற்று கஞ்சா வியாபாரம் செய்துவந்த மூவரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கஞ்சா விற்பனை கனஜோராக நடைபெறுவதை, சில வாரங்களுக்கு முன்னர் நமது ஜூனியர் விகடன் இதழில் செய்தியாக்கியிருந்தோம். திருவல்லிக்கேணி, ராயபுரம், எண்ணூர், துரைப்பாக்கம், தரமணி பகுதிகளில் கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதையும் இதில் மாதம்தோறும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் புரள்வதையும் குறிப்பிட்டிருந்தோம். ரோட்டோரத்தில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவர்கள், இன்று மொபைல் மூலமாக ஆர்டர் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

சில தினங்களுக்கு முன்னர், மொபைல் ஆர்டர் மூலம் கஞ்சா விற்கப்படுவதாக சென்னை தெற்கு இணைக் கமிஷனர் மகேஸ்வரிக்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை ஒன்றை மகேஸ்வரி அமைத்துள்ளார். புகாரில் குறிப்பிட்டுள்ள நம்பரைத் தொடர்புகொண்ட தனிப்படை போலீஸார், தங்களுக்கு கஞ்சா பாக்கெட் வேண்டுமென கேட்டுள்ளனர். மறுமுனையில் பேசியவர்கள், `நீங்க என்ன சொல்றீங்கனு புரியல சார். தப்பான நம்பருக்கு கால் பண்ணியிருக்கீங்க’ எனச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளனர்.

ஒருவேளை நமக்கு வந்த தகவல் தவறோ? என போலீஸார் குழம்பிய வேளையில், இவ்விவகாரம் குறித்து அறிந்திருந்த தரமணி போலீஸ் ஏட்டு ஒருவர், `சார், அவங்ககிட்ட `கோட் வேர்டு’ சொன்னாதான் ஆர்டர் எடுத்துப்பானுங்க. முதல்ல அது என்ன கோட் வேர்டுன்னு கண்டுபிடிங்க’ என்று ஆலோசனை வழங்கியுள்ளார். மீண்டும் போலீஸார் விசாரித்து 'கோட் வேர்டு' மூலமாகத் தொடர்பு கொள்ளவும், `பாக்கெட் 300 ரூபாய் சார். எங்க டெலிவரி செய்யணும்?’ என்று கேட்டுள்ளது மறுமுனை குரல். போலீஸார் குறிப்பிட்ட இடத்துக்கு சரியான நேரத்தில் பைக்கில் வந்திறங்கிய நவநாகரிக இளைஞர் ஒருவர், பேப்பரில் மடித்து எடுத்துவரப்பட்ட கஞ்சா பொட்டலத்தை நீட்டியுள்ளார்.

கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

``சார், சீக்கிரமா பணத்தை எடுங்க. அடுத்த டெலிவரிக்குப் போகணும்” என டோர் டெலிவரி பார்ட்டி பறக்க, மாறுவேடத்திலிருந்த தனிப்படை போலீஸார் அவரை அமுக்கிவிட்டனர். தரமணி காவல்நிலையத்தில் வைத்து அவரை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்டவர் பெயர் லிண்டன் தோனி. அபிராமபுரத்தைச் சேர்ந்த இவர், தரமணியைச் சேர்ந்த கமலக்கண்ணன், அரவிந்தன் ஆகியோருடன் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதில், கமலக்கண்ணன் ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். இவ்விருவரையும் தரமணி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தரமணி போலீஸாரிடம் பேசியபோது, ``கமலக்கண்ணனின் ஐ.டி நண்பர்கள் சிலருக்கு கஞ்சா போதைப் பழக்கம் இருந்துள்ளது. அந்த நண்பர்களின் வேண்டுகோளால், தனது ஏரியாவிலுள்ள கஞ்சா வியாபாரிகளிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கி நண்பர்களுக்கு விற்று வந்தவர், இவ்வியாபாரத்தில் கணிசமாக ஒரு தொகை கிடைப்பதை பார்த்து இத்தொழிலில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.

கஞ்சா டோர் டெலிவரி
கஞ்சா டோர் டெலிவரி

தன்னுடைய கஸ்டமர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருப்பவர்கள் என்பதால், அவர்களிடமிருந்து போன் மூலமாக ஆர்டர்களைப் பெற்று டோர் டெலிவரி செய்வதற்காகவே புதிய சிம்கார்டு ஒன்றை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். இந்த நம்பருக்கு போன் செய்து `கோர்ட் வேர்ட்’டை சொன்னால் போதும், வீட்டுக்கே டோர் டெலிவரி செய்துவிடுவார்கள். இந்த ரகசிய கோர்ட் வேர்டை தன் நண்பர்கள், அவர்கள் மூலமாக அறிமுகமான கஸ்டமர்களிடம் மட்டுமே கமலக்கண்ணன் பகிர்ந்துள்ளார்.

நாளுக்கு நாள் இவரின் வியாபார எல்லைகள் விரிவானதால், இதில் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர்தான் எங்களுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். தென்சென்னையில் கஞ்சா வியாபாரம் செய்துவரும் ஒரு ரவுடிக் கும்பல், ஐ.டி. ஊழியர்களிடம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த கமலக்கண்ணனைப் பயன்படுத்தியுள்ளது. கமலக்கண்ணனுக்கு யார் கஞ்சா சப்ளை செய்தது? அவர் யாருக்கெல்லாம் டோர் டெலிவரி செய்தார்? என விசாரித்து வருகிறோம்” என்றனர்.

போதை நகரம்! - தள்ளாடும் தமிழ்நாடு...
கஞ்சா பொட்டலம்
கஞ்சா பொட்டலம்

சென்னையில் ஐ.டி ஊழியர் ஒருவரே கஞ்சா வியாபாரத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டு கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு