Published:Updated:

வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக ரூ.19,85,000 திருட்டு!- ரகசிய கேமராவால் சிக்கிய சென்னைப் பெண்

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளச்சாவி மூலம் பணத்தைத் திருடி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருட்டு
திருட்டு

சென்னை அபிராமபுரம் 4-வது தெருவில் உள்ள பங்களா வீட்டில் குடியிருப்பவர் தொழிலதிபர் பெரியண்ணன். இவரின் வீட்டின் படுக்கையறையில் உள்ள பீரோவிலிருந்து பணம் திருட்டு போனது. ஆரம்பத்தில் பெரியண்ணன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பீரோவிலிருக்கும் பணம் எப்படி குறைகிறது என்று தெரியாமல் பெரியண்ணன் குழப்பமடைந்தார்.

வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் படுக்கையறையில் கேமரா இல்லை. இதனால் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை பெரியண்ணன் ஆய்வு செய்தார். அப்போது, வீட்டுக்குள் வெளிநபர் யாரும் வந்து செல்லவில்லை. இதனால் யார் மீதும் சந்தேகப்படுவது என்று தெரியாமல் பெரியண்ணன் திகைத்தார். இருப்பினும் பீரோவில் வைக்கப்படும் பணம் மட்டும் குறைந்துகொண்டே இருந்தது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

இதனால் பணத்தைத் திருடுபவரை கையும் களவுமாகப் பிடிக்க பெரியண்ணன் திட்டமிட்டார். இதற்காக வீட்டின் படுக்கையறையில் ரகசிய பெண் கேமரா ஒன்றை பீரோவை நோக்கி பெரியண்ணன் வைத்தார். அதை தினமும் ஆய்வு செய்தார். இந்தச் சமயத்தில்தான் பெரியண்ணன் வீட்டில் வேலை செய்யும் பெண் உஷா, படுக்கையறைக்குள் வரும் காட்சி பதிவாகியிருந்தது. அதோடு அவர் பீரோவை சாவி மூலம் திறப்பதைப் பார்த்து பெரியண்ணன் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் பீரோ சாவி, தன்னிடம் இருக்கும் போது உஷா எப்படி பீரோவைத் திறக்கிறார் என்று யோசித்தார் பெரியண்ணன். இதனால் உஷாவைப் பிடிக்க பெரியண்ணன் திட்டமிட்டார்.

வழக்கம் போல வீட்டு வேலை முடிந்து உஷா வீட்டுக்குத் திரும்பினார். அவர் சென்ற பிறகு ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளோடு அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் வீட்டில் வேலை செய்யும் உஷா என்பவர் 19,85,000 ரூபாயைத் திருடிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்தாஸ், மாதையன், தலைமைக் காவலர் சரவணன் மற்றும் தனிப்படை போலீஸ் பிரிவில் உள்ள பிரதீப், அன்பு, ஞானபிரகாசம் ஆகியோர் உஷாவின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு உஷாவிடம் விசாரித்தனர். அப்போது அவர், தான் திருடவில்லை என்று பிடிவாதமாகக் கூறினார். உடனடியாக போலீஸார் கையோடு கொண்டு சென்ற வீடியோவை உஷாவிடம் காண்பித்தனர். அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பணத்தைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.

`தங்கத்துக்குப் பதில் தகரம்’ - திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட உஷாவிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அவர் கூறிய தகவல்களைக் கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர். அதாவது, கடந்த 5 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைத் திருடி அதில் 40 சவரன் தங்க நகைகளை உஷா வாங்கி வைத்திருந்தார். அதோடு வீட்டிலும் லட்சக்கணக்கில் பணத்தைப் பதுக்கி வைத்திருந்தார். உஷாவிடமிருந்து 18 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``தொழிலதிபர் பெரியண்ணன் ஆதாரத்துடன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் சென்னை மந்தவெளிப்பாக்கத்தில் உள்ள உஷாவின் வீட்டுக்குச் சென்றோம். ஆனால் அவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்ற தகவல் கிடைத்தது. இதனால் உஷா எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்தோம். அப்போதுதான் அவர் தரமணியில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்றபோது அவர் தாம்பரத்தில் இருக்கும் தகவல் தெரிந்தது. தாம்பரத்திலும் அவர் இல்லை. இந்தச் சமயத்தில் உஷாவின் மகளின் செல்போன் நம்பர் எங்களுக்கு கிடைத்தது. வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று உஷாவின் மகளிடம் பேசினோம். உடனே அவர், உஷா இருக்கும் இடத்தை தெரிவித்தார். அங்கு சென்று உஷாவைப் பிடித்தோம்.

போலீஸ்
போலீஸ்

பெரியண்ணன் தொழிலதிபர் என்பதால் அவரின் வீட்டின் படுக்கையறையில் உள்ள பீரோ மற்றும் லாக்கரில் நகை, பணம் எப்போதும் இருக்கும். பெரியண்ணன் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் பணம், நகைகளை எடுக்கும்போது உஷா அதைப் பார்த்துள்ளார். உஷாவின் குடும்பச் சூழல் காரணமாகப் பணத்தைத் திருட அவர் திட்டமிட்டார். இதற்காக பெரியண்ணன் வீட்டின் பீரோ மற்றும் லாக்கரின் சாவி மற்றும் பெட் ரூம் சாவி ஆகியவற்றுக்கு டூப்ளிக்கேட் மூலம் உஷா சாவிகளைத் தயாரித்தார். பெரியண்ணன் வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் படுக்கையறையைக் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே செல்லும் உஷா, அங்குள்ள பீரோ மற்றும் லாக்கர்களையும் கள்ளச்சாவி மூலம் திறந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை மட்டும் கடந்த 5 ஆண்டுகளாகத் திருடிவந்துள்ளார். பணம் திருடப்படுவதை பெரியண்ணன் குடும்பத்தினர் கணக்கு பார்க்கவில்லை. ஆயிரம் ரூபாயில் தொடங்கிய உஷாவின் திருட்டு லட்சம் ரூபாய் வரை சென்றதால்தான் பெரியண்ணன் குடும்பத்தினர் கணக்குப்பார்க்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் உஷா, சிக்கிக் கொண்டார்" என்றார்.