Published:Updated:

`வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவர்; என்னைப் பகைத்தால் அவ்வளவுதான்!' - போலீஸிடம் சிக்கிய இளைஞர்

சென்னையில் ஹோட்டல் அதிபரை மிரட்டிய வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது (Representational Image)
கைது (Representational Image)

சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஹோட்டல் நடத்திவருபவர் முஸ்தபா. இவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `நான், ராயப்பேட்டை ஜி.பி.ரோடு பகுதியில் ஹோட்டல் நடத்திவருகிறேன். ஹோட்டலுக்கு விஜயகுமார் என்பவர் அடிக்கடி வருவார். அவரிடம் பணம் கேட்டால், `நான் பெரிய அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்ட நபர். அதனால் பணம் கொடுக்க முடியாது' என்று கூறுவார். அதை மீறி பணம் கேட்டால், `இனி இந்த இடத்தில் நீ கடை நடத்த முடியாது. மாநகராட்சியில் கூறி உன் கடையை சீல் வைத்துவிடுவேன்' என்று மிரட்டுவார்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

இதனால் விஜயகுமாரிடம் பணம் கேட்பதில்லை. இந்த நிலையில், 3-ம் தேதி கடைக்கு வந்த விஜயகுமார், என்னை அழைத்தார். உடனே நான் அவரின் அருகே சென்றேன். அப்போது, `அடுத்த வாரம் முக்கிய தலைவரின் பிறந்தநாள் வருகிறது. பேனர் வைக்க 10,000 ரூபாய் கொடு' என்று கூறினார். உடனே நான், `பணம் இல்லை' என்று கூறினேன். `பணம் கொடுக்கவில்லை என்றால் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும்' என்று கூறினார்.

பின்னர் அவர் என்னை சரமாரியாக தாக்கிவிட்டு என் சட்டைப் பையிலிருந்த 2,000 ரூபாயை எடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது, `மாலை 5 மணிக்கு வருவேன். மீதமுள்ள 8,000 ரூபாயை எடுத்துவை. இல்லையென்றால் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டிவிட்டு விஜயகுமார் சென்றார். எனவே, விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

கைது
கைது

இதையடுத்து அண்ணாசாலை போலீஸார் விஜயகுமாரிடம் விசாரித்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து அவரை கைது செய்தனர். விஜயகுமாரிடம் விசாரித்தபோது, அவர் வருத்தப்படாத வாக்காளர் சங்கத் தலைவராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

வின்னர் படத்தில் நடிகர் வடிவேலு, `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற பெயரில் சங்கம் வைத்திருப்பார். அதுபோல விஜயகுமாரும் சங்கம் வைத்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், விஜயகுமார், அப்படியொரு சங்கத்தின் தலைவராக உள்ளரா என்றும் விசாரணை நடந்துவருகிறது.