Published:Updated:

`பாஸ்தாவில் கலந்த மயக்க மருந்து!'- தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள சமையல் மாஸ்டர்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதலாளி குடும்பத்துக்கு மயக்கம் கலந்த உணவை பரிமாறி நகை, பணத்தைக் கொள்ளையடித்த நேபாளத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமையல் மாஸ்டர் சுஜன்
சமையல் மாஸ்டர் சுஜன்

சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசலு (54). இவர் சௌகார்பேட்டையில் ஆயில் பிசினஸ் செய்துவருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சீனிவாசன் குடும்பத்தினரோடு நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு அனைவரும் மயங்கினர். நள்ளிரவில் மயக்கம் தெளிந்த சீனிவாசலு, பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், 35,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன. மேலும், சீனிவாசலு குடும்பத்தினருக்கு சமையல் செய்து கொடுத்த நேபாளத்தைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சுஜனும் மாயமாகியிருந்தார். இதனால் அவர் மீது சீனிவாசலுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்
பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்

முதலுதவி சிகிச்சைக்குப்பிறகு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு நேற்று காலை தொழிலதிபர் சீனிவாசலு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை விவரமாக கூறினார். அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் சுஜனைத் தேடினர். சீனிவாசலு வீட்டில் காவலாளியாக வேலை செய்யும் கிருஷ்ணா மூலம் சுஜனுக்கு ஸ்கெட்ச் போட்ட போலீஸார் நேற்றிரவு அவரைக் கைது செய்துள்ளனர். சுஜனிடமிருந்து 15 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``நேபாளம், பாகி பரசூர் மாவட்டம் பர்வித் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜன் (24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சீனுவாசலு வீட்டில் சமையல் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். அப்போது சீனிவாசலு குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார். வேலையைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சுஜன் சென்றுள்ளார். அதன்பிறகு வேலை தேடி சென்னை வந்த சுஜன், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலைபார்த்துவந்துள்ளார்.

கோடிகளில் கொள்ளை... நடிகைகளுடன் கும்மாளம்!

கடந்த 18-ம் தேதி சீனிவாசலு வீட்டுக்கு சுஜன் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் சீனிவாசலுவின் வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷமடைந்துள்ளனர். அப்போது சுஜன், `நீங்கள் எல்லோரும் என் கையால் சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. அதனால் இன்று இரவு உங்களுக்குப் பிடித்தமான உணவை நானே சமைத்து தருகிறேன்' என்று கூறியுள்ளார். அதற்கு சீனிவாசலு குடும்பத்தினரும் ஓகே சொல்லியுள்ளனர். அதன்பிறகு சமையலறைக்குச் சென்ற சுஜன், உணவுகளைத் தயாரித்து சீனிவாசலு குடும்பத்தினருக்கு அன்போடு பரிமாறினார்.

அதை அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில்தான் அனைவருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குப்பிறகு மயக்கம் தெளிந்த சீனிவாசலு மற்றும் அவரின் குடும்பத்தினர் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுஜனும், சீனிவாசலு வீட்டில் காவலாளியாக பணியாற்றும் கிருஷ்ணாவும் நண்பர்கள். இதனால் கிருஷ்ணா மூலம் சுஜனை கைதுசெய்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்கின்றனர்.

நீங்கள் எல்லோரும் என் கையால் சாப்பிட்டு ரொம்ப நாளாகிவிட்டது. அதனால் இன்று இரவு உங்களுக்குப் பிடித்தமான உணவை நானே சமைத்து தருகிறேன்
சுஜன்

போலீஸாரிடம் சுஜன் அளித்த வாக்குமூலத்தில் ``சீனிவாசலு வீட்டில் வேலை பார்த்தவரை எனக்கு கவலை இல்லை. சில காரணங்களுக்காக வேலையிலிருந்து நின்றேன். சொந்த ஊருக்குச் சென்ற பிறகு வேலைதேடி சென்னை வந்தேன். மீண்டும் சீனிவாசலு வீட்டில் வேலை பார்க்க விரும்பவில்லை. இதனால் நுங்கம்பாக்கத்தில் வேலை செய்தேன். ஆனால், அந்த வேலை எனக்குப்பிடிக்கவில்லை.

இதனால், மீண்டும் நேபாளத்துக்குச் செல்ல முடிவு செய்தேன். கையில் பணம் இல்லை. இதனால் சீனிவாசலு வீட்டுக்குச் சென்றேன். அங்கு என்னை எல்லோரும் அன்போடு வரவேற்றனர். என் மீது அந்தக் குடும்பத்தினர் இன்னமும் நம்பிக்கையாக இருப்பதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அவர்களுக்குப் பிடித்த உணவை சமைத்தபோதுதான் எனக்குள் அந்த எண்ணம் உருவானது. கையில் வைத்திருந்த மயக்கப் பொடியை பாஸ்தாவில் கலந்தேன். அதை சாப்பிட்டதும் அனைவரும் மயங்கிவிழுந்தனர். அந்தச் சமயத்தில் பணம், நகைகளை எடுத்துக்கொண்டு ரயில் மூலம் ஊருக்குச் செல்ல முடிவு செய்தேன். ஆனால், போலீஸிடம் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.