Published:Updated:

`வடசென்னைக்கு நான்தான் தாதா!' - ரவுடிகளின் `ஸ்கெட்ச்'; முறியடித்த இன்ஸ்பெக்டர்

எஸ்.மகேஷ்

இன்ஜினீயரிங் படிக்கும் காதலியை விக்கி தனியாகத்தான் பைக்கில் அழைத்துவருவார். அப்போது அவரின் கதையை முடித்துவிடலாம் என்று குள்ளபிரகாஷ் ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள்
குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள்

சென்னை புளியந்தோப்பில் விக்கி என்கிற விக்னேஷை கொலை செய்ய ஒரு டீம் ஸ்கெட்ச் போட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது.

ரவுடிகளைப் பிடித்த இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் தனிப்படையினர்
ரவுடிகளைப் பிடித்த இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் தனிப்படையினர்

விக்கியைக் கொலை செய்ய திட்டமிட்ட ரவுடி குள்ளபிரகாஷ் தலைமையிலான கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பழைய ஆட்டுத்தொட்டி சாலையில் உள்ள கட்டடத்தின் மாடியில் குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். அங்கு சென்ற தனிப்படை போலீஸார் துப்பாக்கி முனையில் குள்ளபிரகாஷை பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளிகள் மாடியிலிருந்து குதித்துத் தப்பினர்.

குள்ளபிரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தபோது புளியந்தோப்பைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்ட தகவலைத் தெரிவித்தார். இதனால், விக்னேஷை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். இதற்கிடையில் குள்ளபிரகாஷின் கூட்டாளிகளான சதீஷ், பிரேம்குமார், அருண், சந்துரு ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். அப்போது அவர்களின் கையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்

காவல் நிலையத்தில் குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சம்பவத்தன்று இன்ஜினீயரிங் மாணவியின் காதலன் விக்கி என்கிற விக்னேஷை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட தகவல் எங்களுக்குக் கிடைத்தது. விக்னேஷின் எதிரிகள் யாரென்று விசாரித்தபோது, குள்ளபிரகாஷ் குறித்த தகவல் தெரியவந்தது. இதனால் குள்ளபிரகாஷ் பதுங்கியிருக்கும் இடத்தை விசாரித்தபோது அவரும் அவரின் கூட்டாளிகளும் இரவு 11 மணியளவில் மாடியில் பதுங்கியிருந்த தகவல் தெரியவந்தது. குள்ளபிரகாஷ் மீது வேப்பேரி, பெரியமேடு, புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளான சதீஷ், பிரேம்குமார், அருண், சந்துரு ஆகியோரை கடுமையாக டார்ச்சர் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சந்துரு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது சந்துருவை விக்கி தாக்கியுள்ளார். அதோடு சந்துருவின் குடும்ப விவகாரத்திலும் விக்கி தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளார். இதனால் சந்துருக்கும் விக்கிக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

விக்னேஷ்
விக்னேஷ்

அதோடு வடசென்னையில் நான்தான் தாதா என்று விக்கி கூறியதோடு குள்ளபிரகாஷ் போன்ற ரவுடிகளைத் தாக்கியுள்ளார். விக்கியால் பாதிக்கப்பட்டவர்கள்தான் செல்வகுமார், பிரேம்குமார், அருண். இதனால்தான் குள்ளபிரகாஷ் தலைமையில் இந்தக் கும்பல், விக்கியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவியை விக்கி காதலித்துவருகிறார். அவரைத் தினமும் காலை புளியந்தோப்பில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு பைக்கில் விக்கி அழைத்துவருவார். அந்தச் சமயத்தில் விக்கியைக் கொலை செய்ய குள்ளபிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் நள்ளிரவில் கூடியுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ரவியை பாராட்டும் கமிஷனர் விஸ்வநாதன்
இன்ஸ்பெக்டர் ரவியை பாராட்டும் கமிஷனர் விஸ்வநாதன்

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொலை திட்டத்தை முறியடித்ததோடு குள்ளபிரகாஷ், அவரின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். விக்கி மீது செம்பியம் காவல் நிலைய காவலரைத் தாக்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது" என்றார்.

இந்தத் தகவலறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது `உங்கள் பணி தொடரட்டும்' என்று இன்ஸ்பெக்டர் ரவியை வாழ்த்தியுள்ளார்.