Published:Updated:

சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

கொலை செய்யப்பட்ட மீனாட்சி, தர்மலிங்கம்
கொலை செய்யப்பட்ட மீனாட்சி, தர்மலிங்கம்

சென்னையில் சொத்துக்காக மாமாவுக்கு மதுவில் கலந்து விஷத்தையும், தங்கைக்கு ஜூஸையும் கொடுத்து கொலை செய்த வழக்கில், ஏற்கெனவே மைதிலி என்பவர் கைதுசெய்யப்பட்டார். தற்போது மைதிலியின் சகோதரி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை, மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). பூ வியாபாரி. இவரின் மனைவி மீனாட்சி (40). கடந்த 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9 -ம் தேதி தர்மலிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அடுத்து ஜனவரி 13-ம் தேதி மீனாட்சியும் இறந்தார். இந்தத் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. அதனால், மீனாட்சியின் அக்காள் லதா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு லதாவிடம் தர்மலிங்கத்தின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் மீனாட்சி உயிரிழந்தார். அவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலமுருகன், மைதிலி
பாலமுருகன், மைதிலி

இதற்கிடையில் தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், இருவரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகக் கூறி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையில் இருவரும் விஷத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``மீனாட்சிக்கு லதா, மைதிலி (37) என இரண்டு தங்கைகள். மைதிலியின் கணவர் பிரவீன் குமார், கோவையில் பிசினஸ் செய்துவருகிறார். இந்தத் தம்பதியருக்கு சரவணன் என்கிற பிஷாக் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். கோவையில் பிரவீன்குமார் தங்கியிருந்ததால், பூக்கடையில் வேலை பார்த்த பாலமுருகன் (29) என்பவருடன் மைதிலிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கத்தை மீனாட்சியும் தர்மலிங்கமும் கண்டித்திருக்கிறார்கள். அதனால் ஆத்திரமடைந்த மைதிலியும் பாலமுருகனும் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். தர்மலிங்கத்துக்கு மது அருந்து பழக்கம் இருந்தது. அதனால் சில மாதங்களாக மதுவில் மெல்ல மெல்லக் கொல்லும் விஷத்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதேபோல மீனாட்சிக்கு உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். தர்மலிங்கம் உயிரிழந்தபோது, அவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்றே உறவினர்கள் கருதினர். அடுத்த சில நாள்களிலேயே மீனாட்சி உயிரிழந்ததும் உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

லதா
லதா

தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், கொடுத்த புகாரின்பேரில் மீனாட்சியின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்தபோதுதான் விஷத்தால் அவர் உயிரிழந்த தகவல் தெரியவந்தது. ஆனால், யார் கொலை செய்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை. தர்மலிங்கமும் மீனாட்சியும் இறந்த பிறகு அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 17 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதை கவனித்து, பணம் எடுத்தவர்கள் குறித்து விசாரித்தோம். அப்போது மைதிலியும் அவரின் ஆண் நண்பர் பாலமுருகனும் பணத்தை எடுத்ததைக் கண்டுபிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது விஷம் கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். அதனால் பாலமுருகன், மைதிலி இருவரையும் ஓராண்டுக்குப் பிறகு கைதுசெய்து சிறையிலடைத்தோம். இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது என தர்மலிங்கத்தின் சகோதரர் குமார் தெரிவித்தார். அது தொடர்பாக விசாரித்தபோது மைதிலியின் கணவர் பிரவீன்குமார், அவரின் மகன் சரவணன் ஆகியோரைக் கைதுசெய்தோம். அவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள்" என்றனர்.

இதையடுத்துதான் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்மலிங்கம், மீனாட்சி கொலை தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை மயிலாப்பூர் போலீஸாரிடமிருந்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் டி.எஸ்.பி கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீஸார் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, மீனாட்சியின் இன்னொரு தங்கையான லதாவுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லதாவை போலீஸார் கைதுசெய்தனர்.

கொலை
கொலை
representational image
``தம்பியின் மரணத்துக்கு பழிக்குப்பழி; மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை" - சென்னையில் நடந்த கொடூரம்

இது குறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியின் தங்கை லதாவைக் கைதுசெய்திருக்கிறோம். அவரிடம் விசாரித்தபோது, ``எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அக்காளுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னுடைய குழந்தைகளைத் தத்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். அவர்கள் என் குழந்தைகள் மீது அன்பாக இருந்தனர். ஆனால், முறைப்படி தத்தெடுக்கவில்லை. அக்காளும் மாமாவும் இறந்த பிறகு அவர்களின் பெயரிலிருந்த சொத்துகள், பணத்தை குடும்பத்தினர் பராமரித்துவருகின்றனர். அக்காள் மீனாட்சிக்கு நான் 13 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். அந்தப் பணம் அக்காளின் வங்கிக் கணக்கில் இருக்கிறது. அதற்காக அவர், எனக்கு 5 லட்சம் ரூபாய்க்கான செக்கைக் கொடுத்திருந்தார். அக்காள் இறந்த பிறகு அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாயை எடுத்தேன். அதனால்தான் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டேன்' என்று கூறியிருக்கிறார்.

லதா கூறியதுபோல மீனாட்சியின் வங்கி கணக்கில் 13 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படவில்லை என்பதை போலீஸார் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினர். அதனால், லதாவைக் கைது செய்தோம். மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சையிலிருந்தபோது தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், அக்காளுக்கு ஜூஸைக் கொடுத்ததாக லதா விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்திருக்கிறார். லதாவுக்கு உதவிய இன்னொருவரைத் தேடிவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு