Published:Updated:

``வசதியாக வாழ ஆசைப்பட்டேன்; காருக்கு இஎம்ஐ செலுத்த திருடினேன்"- டிபன் கடை ரேவதி வாக்குமூலம்

`காருக்கு இஎம்ஐ செலுத்த திருடினேன்' என்று டிபன் கடை நடத்தும் ரேவதி போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

பைக்கில் செல்லும் ரேவதி
பைக்கில் செல்லும் ரேவதி

சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாளைத் தாக்கி தங்கச் செயினைப் பறித்த வழக்கில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரேவதி, அவரின் முதல் கணவரின் தம்பி ராஜேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரிடம் ரேவதியும் ராஜேஷும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரேவதி, போலீஸாரிடம், ``வில்லவாக்கம், மேஸ்திரி தெருவில் வசித்துவருகிறேன். என்னுடைய முதல் கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஒரு குழந்தையுடன் தவித்த என்னை 2வதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜெயச்சந்திரன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் எனக்கும் ஒரு குழந்தை உள்ளது. ஜெயச்சந்திரன், ஐ.சி.எஃப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக வேலைபார்த்துவருகிறார்.

ரேவதி
ரேவதி

இல்லற வாழ்க்கையில் எனக்கு நிம்மதியில்லை. குடும்பச் செலவுக்கு ஜெயச்சந்திரன் சரியாகப் பணம் தர மாட்டார். அதனால், அம்மாவுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் வீட்டின் அருகே காலையில் டிபன் கடை நடத்திவருகிறேன். அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. என் முதல் கணவரின் தம்பி ராஜேஷ், கிடைத்த வேலைகளைச் செய்துவருகிறார். அவரும் வறுமையில் இருந்தார்.

வசதியாக வாழ ஆசைப்பட்டு நான் புதிய டூவீலரை லோனில் வாங்கினேன். ஏற்கெனவே காருக்கு மாதந்தோறும் இஎம்ஐ ரூ.12,000 செலுத்திவந்தேன். தற்போது பைக்கிற்கும் இஎம்ஐ சேர்த்து மாதம் ரூ.15,000 வரை செலுத்த வேண்டியதிருந்தது. ஆனால் போதிய வருமானம் இல்லாததால் இஎம்ஐ செலுத்த முடியாமல் சில மாதங்கள் சிரமப்பட்டேன்.

செய்தித்தாள்களில் வந்த திருட்டுச் செய்திகளைப் பார்த்து பைக்கில் சென்று திருடலாம் என முடிவு செய்தேன். கடந்த 5-ம் தேதி பைக்கில் நான் மட்டும் தனியாக கள்ளிக்குப்பத்துக்குச் சென்றேன். அப்போது அந்தப்பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நிறைய தங்கச் செயினை அணிந்து கடையில் தனியாக இருந்தார். அவரை நோட்டமிட்டுவிட்டு வீட்டுக்குவந்தேன்.

பைக்கில் ரேவதி, ராஜேஷ்
பைக்கில் ரேவதி, ராஜேஷ்

அந்தப் பெண்ணிடம் செயின் பறிக்கும் திட்டத்தை ராஜேஷிடம் கூறினேன். இதையடுத்து இருவரும் பைக்கில் சென்று அந்தப் பெண்ணிடம் செயினைப் பறிக்க முடிவு செய்தோம். அப்போது வாகனத்தில் பதிவு எண் மூலம் கண்டுபிடித்துவிடாமலிருக்க போலி நம்பர் பிளேட்டை மாட்டினோம். பின்னர், சிசிடிவியில் சிக்காமலிருக்க சேலைக்கு மேல் ரெயின் கோர்ட் மற்றும் தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டேன். ராஜேஷையும் ரெயின் கோர்ட், ஹெல்மெட் அணிய கூறினேன். ஆனால் அவர் அணியவில்லை.

கடந்த 6-ம் தேதி மதியம் 2 மணியளவில் கள்ளிக்குப்பத்துக்குச் சென்றோம். ராஜேஷ், பொருள் வாங்குவதைப்போல அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார். பிறகு தங்கச் செயினை அறுத்தார். அப்போது ராஜேஷ் கையில் பாதித் தங்கச் செயினும் அந்தப் பெண்ணின் கையில் மீதிச் செயினும் மாட்டிக் கொண்டது. கிடைத்ததுவரை லாபம் என்று அங்கிருந்து தப்பிவந்தோம். பின்னர் அந்தச் செயினை பட்டாளத்தில் உள்ள அடகு கடையில் வைத்து ரூ.68,000 வாங்கினேன்.

அதை பைக், கார் ஆகியவற்றுக்கு இஎம்ஐ செலுத்தினேன். போலீஸார் எங்களைக் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு பைக்கில் வந்தேன். ஆனால் பைக்கின் நிறத்தை வைத்தும் நான் அணிந்திருந்த வளையலை வைத்தும் போலீஸார் என்னைப்பிடித்துவிட்டனர்" என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜேஷ்
ராஜேஷ்
`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

ராஜேஷிடம் விசாரித்ததில்,``எனக்கு நிரந்தர வேலை இல்லை. மனைவி, குழந்தைகளுடன் அயனாவரத்தில் குடியிருந்துவருகிறேன். என் அண்ணனின் மனைவி ரேவதி. அண்ணன் அவரைப் விட்டு பிரிந்து சென்றாலும் எங்களுக்குள் சுமுக நட்பு இருந்துவந்தது. இந்தச் சமயத்தில் அண்ணி ரேவதி, கள்ளிக்குப்பம் பகுதியில் செயின் பறிக்கும் திட்டத்தைக் கூறியதும் நானும் அவரோடு சென்றேன். அண்ணி ரேவதி, பைக்கில் தயாராக இருந்தார். நான்தான் அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்து செயினைப் பறித்துவிட்டு வந்ததும் இருவரும் அங்கிருந்து தப்பினோம். ஆனால், ரேவதியால் நான் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில்,``ரேவதியின் பின்னணி குறித்து விசாரித்தபோது எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சியாகவே இருந்தன. ரேவதி மீது இதற்கு முன் ஏதாவது வழக்குகள் உள்ளதா என்று விசாரணை நடந்துவருகிறது. வசதியாக வாழ நினைத்த ரேவதிக்கு டிபன் கடை மற்றும் 2வது கணவரிடமிருந்து பணம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த மூன்று மாதங்களாக லோனில் வாங்கிய காருக்கும் பைக்கிற்கும் இ.எம்.ஐ செலுத்த முடியவில்லை.

பைக்கின் நிறத்தை வைத்தும் நான் அணிந்திருந்த வளையலை வைத்தும் போலீஸார் என்னைப்பிடித்துவிட்டனர். என் வாழ்க்கை திசைமாறி பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால்தான் நான் இந்தநிலைமைக்கு வந்துவிட்டேன்
ரேவதி

இதனால் லோன் கொடுத்தவர்கள் பைக்கையும் காரையும் பறிமுதல் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர். அதனால்தான் செயின் பறிப்பில் ரேவதி ஈடுபட்டுள்ளார். ரேவதி சிக்கியதும் ராஜேஷைப் பிடிக்க முடிவு செய்தோம். போலீஸைப் பார்த்ததும் ராஜேஷ் தப்பி ஓடினார். அப்போது அவர் தவறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டது. அதற்கு சிசிச்சை அளித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.