Published:Updated:

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

ஜாமீனில் வெளியில் வந்த என் கணவர், சில ஆண்டுகளுக்குமுன் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் தேடினோம். ஆனால், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

மேனகா
மேனகா

அயனாவரத்தின் அந்தக் குறுகிய தெருவுக்குள் கடந்த 18-ம் தேதி மாலை 3 மணியளவில் கறுப்பு நிற காரும் வெள்ளை நிற காரும் வந்து நின்றன. ஒரு காரிலிருந்து இறங்கிய பெண் ஒருவர், குறிப்பிட்ட வீட்டுக்குள் நுழைந்தார். அங்கிருந்த மூதாட்டி ஒருவரின் கையைப்பிடித்து இழுத்த அவர், காரை நோக்கி நடந்தார். மூதாட்டியோ, `என்னை விட்டுவிடு, உன்னுடன் நான் வர மாட்டேன்' என்று கூறினார். இதனைக் கவனித்த அப்பகுதியில் உள்ளவர்கள், அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர், `இவர் என் மாமியார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்' என்று கூறியபடி காருக்குள் அந்த மூதாட்டியை ஏற்றினார். அடுத்த சில நிமிடத்தில் இரண்டு கார்களும் அங்கிருந்து புறப்பட்டன.

பத்மினி
பத்மினி

இதுகுறித்து மூதாட்டியின் தங்கை மகள் அமுதாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் நீண்ட தயக்கத்துக்குப் பிறகுதான் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்தபோது, கடத்தப்பட்ட மூதாட்டியின் பெயர் பத்மினி என்றும் அவரைக் கடத்தியது பத்மினியின் மருமகள் மேனகா என்பதும் தெரியவந்தது. சொத்துக்காக பத்மினி கடத்தப்பட்டார் என்ற தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிக்குமார், உத்ரகுமார் ஆகியோர் பத்மினியைத் தேடினர். கடந்த 18-ம் தேதி இரவு முதல் 21-ம் தேதி வரை 3 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு பத்மினி உயிரோடு மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய குற்றத்துக்காக மருமகள் மேனகா கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸாரிடம் மேனகா அளித்த வாக்குமூலத்தில், `என்னுடைய சொந்த ஊர் பெரியபாளையம் அருகே உள்ள கொமக்கம்பேடு கிராமம். எனக்கும் படப்பையைச் சேர்ந்த செந்திலுக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னுடைய மாமனார் சுப்பராயனுக்கு உதவியாக செந்தில் இருந்துவந்தார். சுப்பராயன் செய்துவந்த கான்ட்ராக்டர் பணியை செந்தில் செய்துவந்தார். இந்தச் சமயத்தில் சுப்பராயனின் பெயரில் இருந்த சொத்துகளை என் கணவருக்கும் கொழுந்தனார் (ராஜ்குமாருக்கும்) பிரித்துக் கொடுத்தார். அப்போது படப்பை மெயின் ரோட்டில் உள்ள இடத்தை ராஜ்குமாருக்கு சுப்பராயன் கொடுத்தார். அதை என் கணவர் தட்டிக் கேட்டார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.

`3 நாள்; ஒரே ஒரு இட்லி; துப்பாக்கி மிரட்டல்!'- சென்னையில் சொத்துக்காக மாமியாரைக் கடத்திய மருமகள்

இந்தச் சமயத்தில் ராஜ்குமார், 2014-ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்திலை மணிமங்கலம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது எனக்கு ஆதரவாக ராஜேஷ்கண்ணா என்பவரின் மனைவி இருந்தார். ஜாமீனில் வெளியில் வந்த என் கணவர், சில ஆண்டுகளுக்குமுன் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரைப் பல இடங்களில் தேடினோம். ஆனால், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.

இந்தச் சமயத்தில் என் மாமனார் சுப்பராயன் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் எனக்கு உதவி செய்த ராஜேஷ் கண்ணாவை போலீஸார் கைது செய்தனர். தற்போது அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தச் சமயத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக என் மாமியார் அவரின் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து வந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லத்தான் கடந்த 18-ம் தேதி காரில் வந்தேன். ஆனால், அவரைக் கடத்தியதாகப் புகார் கொடுத்துவிட்டனர். இதனால்தான் அயனாவரத்தில் மாமியாரை விடுவதற்காக வந்தபோது போலீஸிடம் சிக்கிக் கொண்டேன்' என்று கூறியுள்ளதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேனகாவிடம் விசாரணை நடந்தபோது, `செந்தில் எங்கே?' என்று போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர், `காணவில்லை' என்று மட்டும் பதிலளித்துள்ளார். அதன்பிறகு, `மாமியார் பத்மினியை எதற்காக காரில் கடத்தினீர்கள்?' என்று கேட்டதற்கு, `நான் அவரை ஏன் கடத்த வேண்டும். வீட்டுக்குத்தான் காரில் அழைத்துச் சென்றேன்' என்று கூறியுள்ளார்.

உடனே போலீஸார், `வீட்டுக்கு அழைத்துச் சென்றால் ஏன் உங்கள் மீது புகார் கொடுக்க வேண்டும். மேலும், உங்கள் மீது வழக்கு பதிவு செய்ததும் நீங்கள் ஏன் காவல் நிலையத்துக்கு வரவில்லை?' என்று போலீஸார் கேட்டதற்கு, எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.

`110 காஸ்ட்லி மொபைல்கள்;  ஆஃபரில் சேல்ஸ்!' -பிரபல செல்போன் கடையைப் பதறவைத்த 6 ஊழியர்கள்

பத்மினியை மேனகா கடத்தியது குறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``கடந்த சில தினங்களுக்கு முன் பத்மினிக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை இரண்டாவது மகன் ராஜ்குமாரின் மைத்துனர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அவர், உன் பெயரில் உள்ள சொத்துகளை என் தங்கையின் குழந்தைகளுக்கு (பேரன், பேத்திகளுக்கு) எழுதித்தரவில்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இந்த போன் அழைப்புக்குப் பிறகு மேனகா, பத்மினியிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், ராஜ்குமாரின் மனைவி குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். அதற்கு பத்மினியும் அப்பாவியாக எனக்கும் ஒரு போன் அழைப்பு வந்தது என்று தெரிவித்துள்ளார். இதனால் ராஜ்குமாரின் மனைவி குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று பத்மினியிடம் மேனகா கூறியுள்ளார். ஆனால், அதற்கு பத்மினி சம்மதிக்கவில்லை. இதன்பிறகுதான் பத்மினியை மேனகா, காரில் கடத்தினார்" என்கின்றனர்.

இதற்கிடையில் பத்மினி பேசுவதாக அயனாவரம் போலீஸாருக்கு போன் அழைப்புகள் வந்துள்ளன. அப்போது `நான் நலமாக இருக்கிறேன் என்னைத் தேட வேண்டாம்' என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு, `நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?' என்று போலீஸார் கேட்டவுடன், அந்தச் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

கரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'! இனி என்ன நடக்கும்? #VikatanExclusive

சுப்பராயன் கொலை வழக்கில் கைதான ராஜேஷ் கண்ணா, `என் மனைவிக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி சுப்புராயன் பணம் வாங்கினார். ஆனால், வேலையும் வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால்தான் அவரைக் கொலை செய்தேன்' என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய மூத்த மகன் செந்திலைக் காணவில்லை என்று பத்மினி கொடுத்த புகாரும் கிடப்பில் உள்ளது. இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட புகார்கள் தூசி தட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.