Published:Updated:

அம்மாவை அவதூறாகப் பேசிய தாய்மாமன்! - கொலை செய்த மருமகன்

சென்னையில் பெற்ற தாயை அவமானமாகப் பேசிய தாய்மாமனை கொலை செய்த மருமகன் கோகுல்ராஜை போலீஸார் கைது செய்தனர்.

மருமகன் கோகுல்ராஜ்
மருமகன் கோகுல்ராஜ்

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (60). இவரின் மனைவி சரஸ்வதி (54). இவர்களின் மகன் கோகுல்ராஜ் (31). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் (60). நேற்றிரவு மது அருந்திய எத்திராஜ், தன்னுடைய சகோதரி சரஸ்வதியை அவதூறாகப் பேசியுள்ளார். அதை கோகுல்ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அம்மாவை அவதூறாகப் பேசிய தாய்மாமன்! - கொலை செய்த மருமகன்

இதனால் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், தாய்மாமன் என்றுகூட பாராமல் எத்திராஜை கற்களால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த எத்திராஜை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், எத்திராஜ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எத்திராஜின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாய்மாமனைக் கொலை செய்த குற்றத்துக்காக கோகுல்ராஜை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கோகுல்ராஜ் அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய தாய்மாமன் எத்திராஜ், மது அருந்தினால் என் குடும்பத்தினரை அவதூறாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதை பல தடவை நான் கண்டித்தும் அவர் திருந்தவில்லை. சம்பவத்தன்று இரவு தெருவில் நின்றபடி எத்திராஜ், என் அம்மாவையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் அசிங்கமாக திட்டினார்.

 `குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன்

இதனால் வீட்டிலிருந்து வெளியில் வந்த நான் அவரை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்படி கூறினேன். போதையில் இருந்த அவர், வீட்டின் வாசலில் நின்றபடி அம்மாவின் நடத்தையை கேவலப்படுத்தும் வகையில் பேசினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு எத்திராஜை விரட்டினேன். அப்போது அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விரட்டிச் சென்ற நான், கல்லை எடுத்து அவரின் முகத்தில் போட்டேன். அதன்பிறகு அங்கிருந்து வந்துவிட்டேன். என் அம்மாவை மாமா அவதூறாகப் பேசாமல் இருந்திருந்தால் நான் அவரைக் கொலை செய்திருக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.