Published:Updated:

`அண்ணனுக்காக மயங்கிய தங்கை; மகனுக்காக நடித்த குடும்பம்!'- சென்னையில் சிக்கிய பின்னணி

சொந்த வீட்டிலேயே அண்ணன் திருடியதை மறைக்க மயங்குவதுபோல நடித்த சிறுமி மற்றும் அவரின் குடும்ப சுயரூபம் செல்போன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

நாடகமாடிய குடும்பம்
நாடகமாடிய குடும்பம்

சென்னை, அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (45). ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி சிவகாமி (38), இந்தத் தம்பதிக்கு 15 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர். சம்பவத்தன்று தங்கராஜும் சிவகாமியும் வெளியில் சென்றுவிட்டனர். வீட்டில் சிவகாமியின் அம்மா புஷ்பா மற்றும் குழந்தைகள் இருந்தனர். புஷ்பா, வீட்டில் குளிக்கச் சென்றார்.

அந்தச் சமயத்தில் 13 வயது சிறுமி வீட்டின் ஹாலில் மயங்கிக் கிடந்தார். பதற்றத்துடன் 15 வயது சிறுவன் காணப்பட்டார். குளித்துவிட்டு வெளியில் வந்த புஷ்பா, என்ன நடந்தது என்று அதிர்ச்சியோடு பேரனிடம் கேட்டார்.

அம்பத்தூர்
அம்பத்தூர்

அப்போது அவர், `தங்கச்சி மயங்கிக் கிடக்கிறாள், பீரோ உடைக்கப்பட்டுள்ளது பாட்டி' என்று கூறினான். அதனால் நிலைமையைப் புரிந்துகொண்ட பாட்டி புஷ்பா, பேத்தியின் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்விழித்த பேத்தி, `வீட்டுக்கு வந்த ஒருவர், என் முகத்தில் கர்சீப்பை வைத்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறினார். இதையடுத்து பீரோவை சோதித்துப் பார்த்த புஷ்பா, பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தங்கராஜுக்கும் சிவகாமிக்கும் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளை நடந்தவுடன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார் புஷ்பா. உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், சப்-இன்ஸபெக்டர்கள் சையது முபாரக், வானமாமலை மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மயக்கமடைந்த சிறுமியிடம் முதலில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், பாட்டி புஷ்பாவிடமும் தன்னுடைய அண்ணனிடமும் கூறிய அதே தகவலை போலீஸாரிடமும் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! - மக்கள் மனதில் இடம்பிடித்த சிதம்பரமுருகேசனின் சீக்ரெட்
கொள்ளை நடந்த இடம்
கொள்ளை நடந்த இடம்

சிறுமி கூறியதைக் கேட்ட போலீஸார், உடனடியாக அவருக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்தனர். பின்னர், `நாங்கள் இருக்கிறோம்... கவலைப்படாதே' என்று போலீஸார் சிறுமியைத் தைரியப்படுத்தினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி கூறியதுபோல அங்கு யாரும் வந்துச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. அதனால் அதே பகுதியைச் சேர்ந்தவர், கொள்ளையனாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சையது முபராக், சிறுமியின் வீட்டின் அருகில் வேலை பார்த்த 4 பேரிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், நீங்கள் சொல்வதுபோல எந்தச் சம்பவங்களும் இங்கு நடந்தது போல தெரியவில்லை. அந்த வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. அங்கிருந்து யாரும் இவ்வழியாக நடந்துச் செல்லவும் இல்லை என்று கூறினர். அப்போதுகூட சிறுமி மற்றும் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வரவில்லை.

representational image
representational image

சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் போலீஸார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது அதில் ஒரு வீட்டினர், எங்கள் வீட்டிலும் பட்டப்பகலில் லேப்டாப், செல்போன் திருட்டு போய் சில மாதங்களாகின்றன. ஆனால் நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து அந்தச் செல்போனின் ஐஎம்இஐ நம்பரை வாங்கிய போலீஸார் அதை ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது அந்தச் செல்போனை ஒருவர் பயன்படுத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, இன்னொருவரிடமிருந்து குறைந்தவிலைக்கு அந்தப் போனை வாங்கியதை அவர் கூறினார். அதைத்தொடர்ந்து செல்போனை விற்ற நபரிடம் விசாரித்தபோது, சிறுமியின் அண்ணனான 10-ம் வகுப்பு மாணவன், தன்னிடம் விலைக்கு விற்ற தகவலைக் கூறினான். இது, போலீஸாருக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து செல்போன் குறித்து விசாரித்தபோது அதை விற்றது சிறுமியின் அண்ணன் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். இருப்பினும் அந்தத் தகவலை வெளியில் சொல்லவில்லை.

கொள்ளை நடந்த பகுதி
கொள்ளை நடந்த பகுதி

இதையடுத்து சிறுமி, அவரின் அண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரிடம் தனித்தனியாக போலீஸார் விசாரித்தனர். அப்போதும் முதலில் கூறிய தகவல்களை அனைவரும் ஒரே மாதிரியாகக் கூறினர். அப்போதுதான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், `நீங்கள் அனைவரும் நடித்தது போதும், உண்மை எங்களுக்குத் தெரிந்துவிட்டது' என்று கூறினார். அதனால் அந்தச் சிறுவன், தைரியமாக மீண்டும் அதே பல்லவியைக் கூறினான்.

இதனால் போலீஸார் எதிர்வீட்டில் திருடிய செல்போனை சிறுவனிடம் காண்பித்தனர். அதைப்பார்த்து சிறுவனின் முகம் மாறியது. அதைப்பார்த்த சிறுவனின் அப்பா, அம்மா, பாட்டி மற்றும் சிறுமி ஆகியோரும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு ஒவ்வொருவரும் நடந்த உண்மைகளை போலீஸாரிடம் கூறினர்.

அம்பத்தூர் காவல் நிலையம்
அம்பத்தூர் காவல் நிலையம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``சம்பந்தப்பட்ட சிறுமியும் அவரின் அண்ணனும் கூறியதை முழுமையாக நம்பினோம். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நம்பித்தான் அடுத்தடுத்த விசாரணையில் ஈடுபட்டோம். பக்கத்து வீட்டிலிருந்து செல்போனைத் திருடிய சிறுமியின் அண்ணனான 10-ம் வகுப்பு மாணவனைக் காப்பாற்ற அவரின் குடும்பத்தினர் நாடகமாடியுள்ளனர்.

அந்த மாணவன், செல்போனை மட்டுமல்லாமல் லேப்டாப்பையும் திருடியுள்ளார். அதை விற்று ட்ரோன் வாங்கி விளையாடி வந்துள்ளார். மகனிடம் ட்ரோன் வாங்கும் அளவுக்கு பணம் கிடைத்தது எப்படி என்று விசாரித்தபோதுதான் எதிர்வீட்டில் திருடிய தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், அதை அனைவரும் சேர்ந்து மறைத்து மகனைக் காப்பாற்ற நாடகம் போட்டுள்ளனர்.

இந்தச் சமயத்தில் பாட்டி புஷ்பா, கும்மிடிப்பூண்டியிலிருந்து பணத்தைக் கொண்டு வந்து பீரோவில் வைத்துள்ளார். அதைப்பார்த்த அந்த மாணவனுக்குத் திருட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இந்தமுறை தன்னுடைய திருட்டுக்கு தங்கையின் உதவியைக் கேட்டுள்ளார். தங்கையிடம் உனக்கு செல்போன் வாங்கித் தருகிறேன். அதற்காக நான், சொல்வதைப் போல நீ நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த 13 வயது சிறுமியும் அண்ணன் கூறியதுபோல நடித்து குடும்பத்தினரையும் மற்றவர்களையும் நம்ப வைத்துள்ளார்.

கொள்ளை நடந்த இடம்
கொள்ளை நடந்த இடம்

பீரோவிலிருந்த 36,000 ரூபாய் பணத்தை மட்டும் திருடிய மாணவன், அதை நண்பனிடம் கொடுத்து வைத்துள்ளார். பணம் மட்டும் காணவில்லை என்று கூறினால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று கருதிய மாணவனின் குடும்பத்தினர், 10 சவரன் நகை மற்றும் 36,000 ரூபாயை 45,000 ரூபாய் என்று பொய்யாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

எங்கள் விசாரணையில் பணத்தைத் திருடியது மாணவன் என்பது தெரிந்தது. நகைகளைப் பாட்டி புஷ்பாவே, கும்மிடிப்பூண்டியில் அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் குடும்பத்தினரை கடுமையாக எச்சரித்து விட்டுவிட்டோம். அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடிய குற்றத்துக்காக மாணவன் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மாணவனிடமிருந்து டிரோனை பறிமுதல் செய்துள்ளோம்" என விவரித்தவர்கள்,

``கொள்ளை நடந்ததுபோல இருக்க பத்தாம் வகுப்பு மாணவன், கம்பியை எடுத்து பீரோவை உடைத்துள்ளார். பின்னர் பீரோவிலிருந்த பொருள்களை வெளியில் எடுத்து வீசியுள்ளார். மயக்கமடைந்ததுபோல நடித்த தங்கையைப் பார்த்து அந்த மாணவன், கதறி அழுது கூச்சலும் போட்டுள்ளார். அதை வைத்துதான் சிறுமியும் மாணவனும் கூறியதை உண்மையென நம்பினோம். அதே நேரத்தில் அந்த வீட்டில் உள்ளவர்கள் நகைகளை அடகு வைத்துவிட்டு திருட்டுப் போனதாக நாடகமாடி காவல்துறையை முட்டாளாக்கத் திட்டமிட்டுள்ளதை முறியடித்துள்ளோம்" என்றனர்.

பேட்டியளிக்கும் தங்கராஜ்
பேட்டியளிக்கும் தங்கராஜ்
``நீங்க யாரு... வீட்ல யாருமில்ல" - கொள்ளையனைத் தடுத்த சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

மாணவனிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர், ``என்னுடைய நண்பர்கள் எல்லாம் செல்போன், டேப்லெட், டிரோன் ஆகியவற்றைக் கொண்டு விளையாடுகிறார்கள். எனக்கும் விளையாட ஆசையாக இருந்தது. ஆனால், அதை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வீட்டில் வசதியில்லை. அதனால்தான் திருடினேன்" என்று கூறியுள்ளார்.

மாணவனுக்கும் மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் புத்திமதி கூறியுள்ளனர்.