Published:Updated:

அன்று ரூ.28 லட்சம்; இன்று ரூ.35 லட்சம் - தொடர்ந்து சிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த ஆந்திர இளைஞர்கள்!

பிடிப்பட்ட பணம்
பிடிப்பட்ட பணம்

ரயிலில் 35 லட்சம் ரூபாயைக் கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதனால் அண்டை மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் தினமும் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகியிருக்கிறது. அதைத் தடுக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எஃப்) போலீஸார் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸில் சந்திரசேகர் என்ற இளைஞர் தன்னுடைய இடுப்பில் 28 லட்சம் ரூபாயை துணியில் கட்டி மறைத்துக் எடுத்து வந்தார். அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் பிடித்து வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பிடிப்பட்ட இளைஞருடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்
பிடிப்பட்ட இளைஞருடன் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்

இந்தச் சம்பவம் நடந்து அடுத்த சில தினங்களுக்குள் 35 லட்சம் ரூபாயுடன் ஆந்திராவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் சென்னை சென்ட்ரலில் சிக்கியிருக்கிறார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இன்று காலை ஹைதராபாத்திலிருந்து வந்த சிறப்பு ரயிலில் எஸ்.10 என்ற முன்பதிவு பெட்டியில் பயணித்த இளைஞர் ஒருவர், பிளாட்பாரத்தில் நடந்து வந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான போலீஸார் இளைஞரிடம் விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பையை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அதில் பெரிய பேப்பர் பண்டல் ஒன்றிருந்தது. அதுகுறித்து இளைஞரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

சென்னை: 'தொப்பைக்குள் ரூ.28 லட்சம் பணம்?! ஆந்திர இளைஞன் போலீஸிடம் சிக்கியது எப்படி?'

இதையடுத்து அந்தப் பேப்பர் பண்டலை போலீஸார் பிரித்துப் பார்த்தனர். அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அதை போலீஸார் எண்ணிப்பார்த்தபோது 35 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருந்தது. பணம் குறித்து இளைஞரிடம் விசாரித்தபோது அவரிடம் எந்தவித ஆவணமும் இல்லை. அதனால் போலீஸார் பணத்தையும் இளைஞரையும் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

பணத்துடன் ஆந்திர மாநில இளைஞர்
பணத்துடன் ஆந்திர மாநில இளைஞர்

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கூறுகையில், ``பணத்தைக் கொண்டு வந்தவரின் பெயர் மஞ்சுமாத்தி சுப்பாராவ் (28). இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 1-ம் தேதி 28 லட்சம் ரூபாயுடன் சிக்கிய சந்திரசேகரும் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். ஒரே இடத்திலிருந்து லட்சக்கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து அடுத்தடுத்து இருவர் சிக்கியிருப்பது சந்தேகத்தை அளிக்கிறது. பணம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில்தான் இந்தப் பணம் என்ன காரணத்துக்காக கொண்டு வரப்பட்டது என் விவரம் தெரியவரும்" என்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபாட்டில்களைப் பிடிக்க கண்காணிப்பில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் லட்சக்கணக்கில் பணத்துடன் ஆந்திர இளைஞர்கள் சிக்கி வருகின்றனர். அவர்கள் கொண்டு வருவது ஹவாலா பணமா என்ற சந்கேமும் போலீஸாருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு