Published:Updated:

சென்னை: ஜூ.வி செய்தி எதிரொலி - போலீஸ், உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி கூட்டு நடவடிக்கை!

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

ஜூனியர் விகடன் செய்தி எதிரொலியால் சென்னை போலீஸ், உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி ஆகியவை கூட்டாகச் சேர்ந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கையெடுக்கத் தயாராகியிருக்கின்றன.

ஜூனியர் விகடனில் கடந்த இதழில் `குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி வெளியானதும், தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங்பேடி, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டம்
கூட்டம்

இந்தக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒழிப்பதற்கு சென்னை பெருநகர காவல் துறையில் DABToP (Drive against banned tobacco products) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸார், தனிப்படையினர் மூலம் சென்னை பெருநகர காவல் எல்லைகளில் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தியும் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபவர்களைக் கண்டறிந்து கைதுசெய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்குதலைக் கண்டறிய காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்தக் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதற்கு சட்ட வழிவகை செய்ய ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்விதமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, புகையிலை போன்ற பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஏற்கெனவெ சங்க உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக வணிக சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

குற்றங்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ, பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவி மைய எண் 1913, தேசிய அவரசகால உதவி எண் 112 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய எண்களுக்கோ பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கமிஷனர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் மருத்துவர் சேரன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் விஷீ மஹஜன், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார், வியாபாரிகள் சங்க தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகச் செய்திக்குறிப்பில், ``தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, மாவா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட போதை தரும் புகையிலைப் பொருள்களை கடத்துதல், பதுக்குதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் தடை உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீஸார், சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துவருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 8,814 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9,832 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டதோடு, 333 டன் குட்காவும் 9 டன் மாவாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களிடமிருந்து 90 பைக்குகள், 18 மூன்று சக்கர வாகனங்கள், 63 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள்கள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்ட ஐந்து பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களிலிருந்து குட்கா, ஹான்ஸ், ஜர்தா போன்ற புகையிலைப் பொருள்களை கடத்திவருபவர்களைக் கண்டறிந்து கைது செய்யப்பட்டுவருகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூ.வி கவர் ஸ்டோரி எதிரொலி... “ஊருக்குள் ஒரு குட்கா பாக்கெட் கிடைக்கக்கூடாது!” - அதிரடி காட்டிய மா.சு
அடுத்த கட்டுரைக்கு