Published:Updated:

`பழைய கட்டடத்தை இடிக்கும்போது கிடைத்த தங்கக்கட்டி..! - சென்னை வியாபாரிக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

தங்கக்கட்டி
தங்கக்கட்டி ( representational image )

சென்னையைச் சேர்ந்த வியாபாரியிடம், திருச்சியில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது தங்கக்கட்டி கிடைத்ததாகக் கூறி ஏமாற்றிய கணவன், மனைவியை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை நீலாங்கரை, வைத்தியலிங்கம் சாலை 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவர், சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலையில் ஆயில் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு வெங்கடேசன் என்பவர் ஆயில் வாங்க வருவார். அப்போது பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் நட்பாகப் பழகியுள்ளார். வெங்கடேசன், கட்டட வேலை செய்து வருவதாகக் கூறியுள்ளார். சோழிங்கநல்லூரில் குறிப்பிட்ட ஒரு முகவரியில் குடும்பத்தோடு குடியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 `ஒரு நாளைக்கு 4 டன்; டார்க்கெட் வைத்து திருட்டு!’ - சென்னையில் சிக்கிய காயிலாங் கடை வியாபாரிகள்
மோசடி
மோசடி

சில சந்திப்புகளிலேயே பொன்னுரங்கமும் வெங்கடேசனும் நீண்ட கால நண்பர்கள்போல பழகிவந்துள்ளனர். இந்தச் சமயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லை எனக் கூறிய வெங்கடேசன், தன்னுடைய குடும்பக் கஷ்டத்தை பொன்னுரங்கத்திடம் பகிர்ந்துள்ளார். பின்னர், தன்னிடம் தங்கக் கட்டி உள்ளது, அதை உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது விற்றுக் கொடுங்கள் என்று பொன்னுரங்கத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பொன்னுரங்கமும் உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து தங்கக்கட்டியைப் பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் காட்டியுள்ளார். அப்போது, `உங்களுக்கு எப்படி இந்தத் தங்கக்கட்டி கிடைத்தது' என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேசன், திருச்சியில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது கிடைத்ததாகக் கூறியுள்ளார். அதைப் பொன்னுரங்கமும் நம்பியுள்ளார். இதையடுத்து தங்கக்கட்டியை எடை போட்டபோது 450 கிராம் இருந்துள்ளது.

ஒருகட்டத்தில் பொன்னுரங்கத்திடம், `நீங்களே இந்தத் தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு பணம் கொடுங்கள்' என்று வெங்கடேசன் கூறியுள்ளார். அதற்கு பொன்னுரங்கம், `என்னிடம் அவ்வளவு பணம் இல்லை' என்று கூறி மறுத்துள்ளார். பின்னர், வெங்கடேசன், `எனக்கு பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதனால் பாதி விலைக்கு இந்தத் தங்கக்கட்டியை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று ஆசையைத் தூண்டியுள்ளார். அதனால் பொன்னுரங்கம் மனம் மாறி, தங்கக்கட்டியை வாங்கிக்கொள்ள சம்மதித்துள்ளார். அதன்பிறகு தங்கக்கட்டிக்கு வெங்கடேசன், 8 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். உடனே பொன்னுரங்கம், `அவ்வளவு பணம் என்னிடம் இல்லை' என்று கூறியுள்ளார்.

மோசடி
மோசடி

இதையடுத்து இருவரும் பேரம் பேசியுள்ளனர். பிறகு தங்கக் கட்டிக்கு 5 லட்சம் ரூபாய் எனப் பேரம் பேசி முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு பொன்னுரங்கம், தங்கக்கட்டியிலிருந்து ஒரு துண்டை எடுத்து சோதித்துப் பார்த்தபோது அது சுத்தமான தங்கம் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பொன்னுரங்கம், முதல் தவணையாக 3 லட்சம் ரூபாயை வெங்கடேசனிடமும் அவரின் மனைவி பவானியிடமும் கடந்த 20.3.2020-ல் கொடுத்துள்ளார். தங்கக் கட்டியைக் குறைந்த விலைக்கு வாங்கிய மகிழ்ச்சியிலிருந்தார் பொன்னுரங்கம்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மார்ச் மாதத்தில் அரசு அறிவித்ததால் 23.3.2020-ல் குடும்பத்தோடு பொன்னுரங்கம் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது தங்கக் கட்டியையையும் பத்திரமாக எடுத்துச் சென்றுள்ளார். அங்கு தனக்கு தெரிந்த நகைக் கடையில் தங்கக்கட்டியை சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது அது தங்கக்கட்டியல்ல, தங்க முலாம் பூசிய பித்தளை எனத் தெரியவந்தது. இதனால் பொன்னுரங்கம் அதிர்ச்சியடைந்தார்.

Vikatan

இதையடுத்து வெங்கடேசனை, செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என பதில் வந்துள்ளது. ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் இருந்ததால், உடனடியாக சென்னைக்கு பொன்னுரங்கத்தால் வர முடியவில்லை. இதையடுத்து 27-ம் தேதி சென்னை வந்த பொன்னுரங்கம், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தங்கக் கட்டி எனக் கூறி தன்னை ஏமாற்றிய வெங்கடேசன் மற்றும் அவரின் மனைவி பவானி மீது புகாரளித்தார். அதன்பேரில் செம்மஞ்சேரி போலீஸார் வழக்குபதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அருள் படத்தில் நடிகர் வடிவேலிடம் வெள்ளி முலாம் பூசிய செங்கலை நடிகர் சிங்கமுத்து ஏமாற்றி விற்பனை செய்யும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதைப்போல ஆயில் கடை நடத்தி வந்த பொன்னுரங்கத்திடம் ஆசை வார்த்தை கூறி தங்க மூலாம் பூசிய பித்தளைக் கட்டியை வெங்கடேசன் ஏமாற்றி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடித் தம்பதி குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு