பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள்மீது காவிச்சாயம் பூசி அவமதித்த சம்பவங்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் `காவியை, `களங்கம்’ எனக் குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக்கொடியை ஏற்றப் போகிறார்' எனப் பேசியிருந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, எஸ்.வி.சேகர்மீது நடவடிக்கை எடுக்கும்படி நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஆன்லைனில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் ஒன்றை அளித்தார். `இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நிபுணர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியிருந்தார். இந்தநிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் நடிகர் எஸ்.வி.சேகர் மீது தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.