Published:Updated:

`மறுமணத்துக்கு முன் மலர்ந்த நட்பு; நகையை இழந்த சென்னைப் பெண்!' - அதிர்ச்சி கொடுத்த 2 செல்போன்கள்

அஜ்மல் நிஷாரின் செல்போனில் இருந்த போட்டோ
அஜ்மல் நிஷாரின் செல்போனில் இருந்த போட்டோ

சென்னையில் மறுமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி விவாகரத்து செய்த பெண்ணிடமிருந்து நகை, பணத்தை ஏமாற்றியதாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரின் தந்தை வடக்கு கடற்கரை காவல்நிலையத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

என் மகள் திருமணமாகி கணவரை இழந்த நிலையில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் இணையதளம் மூலம் வரன் தேடினோம். அப்போது அஜ்மல் நிஷார் (30) என்பவர் எங்களுக்கு பழக்கமானார். என் மகளை மறுமணம் செய்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். பின்னர் அவர், என் மகளிடம் போனில் தொடர்ச்சியாகப் பேசி வந்துள்ளார்.

`கோழிப் பண்ணையில் லேப்டாப்; சீக்ரெட் வீடியோக்கள்!' -எப்படியெல்லாம் ஏமாற்றுவார் இன்ஜினீயர் சுஜி?

என் மகளிடம் அஜ்மல், தான் கஸ்டம்ஸ் மூலம் டிவி, ஏசி ஆகிய எலெக்ட்ரானிக் பொருள்களை வாங்கி பர்மா பஜாரில் விற்பனை செய்து வருவதாகக் கூறியுள்ளார். `இன்னும் நிறைய முதலீடு செய்தால் தொழில் வளர்ச்சியடையும், நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம், அதற்கு நீதான் பணம் உதவி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். என் மகளை நம்பவைத்து அவளை அடிக்கடி சந்தித்து 15 சவரன் தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். மேலும், என் மகளைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்ததோடு, `நான் உன்னிடம் நகை வாங்கிய விஷயத்தை வேறு யாரிடமும் சொன்னால் உன் குடும்பத்துக்குதான் அவமானம்' என்று கூறியுள்ளார்.

உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் மேலும் பணம் தேவை என்று அஜ்மல் நிஷார் பயமுறுத்தியதால் என் மகள் வங்கி மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு என் மகளைத் திருமணம் செய்து கொள்ளாமல் அஜ்மல் நிஷார் ஏமாற்றியது குறித்து என் மகள் என்னிடம் தெரிவித்தார்.

உடனே நான், அஜ்மல் நிஷாரை தொடர்பு கொண்டு என் மகளைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பணமும் நகையும் வாங்கிக்கொண்டு ஏமாற்றியது பற்றி கேட்டேன். அதற்கு அவர், `உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள். உங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியாது, அவரிடம் வாங்கிய நகைகளைத் திரும்பி கொடுக்க முடியாது' என்று மிரட்டினார். அதனால், நடந்த சம்பவத்தை எனக்கு தெரிந்த மண்ணடியைச் சேர்ந்த ரகுமானிடம் கூறினேன்.

அஜ்மலின் செல்போனைப் பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் போட்டோஸ், வீடியோஸ் இருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அஜ்மல் நிஷாரை ஒப்படைத்தோம். ஆனால், காவல்துறையினர் அஜ்மல் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணின் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
த.மு.மு.க நிர்வாகி ரகுமான்

இதையடுத்து அஜ்மல் நிஷாரை அழைத்து விசாரித்ததில் அவர் பணமும் நகைகயையும் கொடுக்காமல் ஏமாற்றுவது தெரியவருகிறது. எனவே, என் மகளை மறுமணம் செய்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்து அவரிடம் இருந்து பணத்தையும் நகையையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய அஜ்மல் நிஷார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் வடக்கு கடற்கரை போலீஸார் அஜ்மல் நிஷார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அஜ்மல் நிஷார், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, `நான் சென்னை எம்.கே.பி.நகரில் குடியிருந்து வருகிறேன். எனக்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சிறிது நாள்களிலேயே நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் தற்போது கடந்த மூன்று மாதங்களாகத் திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் பகுதியில் உள்ள மேன்சனில் அறை எண் 110-ல் தங்கியுள்ளேன்.

எஃப்.ஐ.ஆர்
எஃப்.ஐ.ஆர்

கஸ்டம்ஸ் மூலம் ஏசி, டிவி வாங்கி பர்மா பஜாரில் விற்பனை செய்துவருகிறேன். கடந்த மார்ச் மாதம், இணையதளம் மூலம் கணவரை இழந்த அந்தப் பெண் எனக்கு பழக்கமானார். நான் அவரை மறுமணம் செய்துகொள்வதாகக் கூறி போனில் பேசி வந்தேன். அவரிடம் இருந்து வியாபார வளர்ச்சிக்காக 15 சவரன் தங்க நகைகள், இரண்டரை லட்சம் ரூபாய் வாங்கினேன். சில நாள்களாக நகைகளையும் பணத்தையும் கேட்டு என்னை அந்தப் பெண் தொந்தரவு செய்து வந்தார். நான் பணத்தையும் நகைகளையும் கொடுத்து விடுவதாகக் கூறி வந்தேன்.

ஆனால், 18-ம் தேதி நான் தங்கியிருந்த அறை எண் 110-க்கு ஆறு பேர் வந்தனர். அப்போது அவர்கள், நகை, பணத்தை என்னிடம் கேட்டனர். அவர்களிடம், `நான் பணம், நகைகளை வாங்கியது உண்மைதான். ஊரடங்கு முடிந்ததும் கொடுத்துவிடுகிறேன்' என்று கூறினேன். ஆனால், என்னை அறையில் வைத்து அடித்து வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிக் கொண்டு பெண்ணுக்கு ஆதரவாகப் பேசிய ஒருவரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் அடைத்து வைத்தனர்.

`அரசியல் தொடர்பு.. பாதிக்கப்பட்ட 90 பெண்கள்..!' - சுஜி வழக்கின் விசாரணையால் கொதிக்கும் சி.பி.எம்

அங்கிருந்தவர்கள், `வாங்கின பணத்தையும் நகைகளையும் செட்டில் பண்ணு, இல்லைன்னா நீ உயிரோடு திரும்பிப் போக முடியாது' என்று மிரட்டினர். அவர்களிடமும் ஊரடங்கு முடிந்ததும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன். இந்தச் சமயத்தில் அங்கிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகாரளித்தேன். எனவே, என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாகவும் போலீஸார், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆதரவாகப் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் தரப்பில் நம்மிடம் பேசிய த.மு.மு.க நிர்வாகி ரகுமான், ``பெண்ணின் தந்தை தெரிவித்த தகவலின்படி அஜ்மல் நிஷாரிடம் விசாரித்தோம். அப்போது அவரின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகளில் பெண்கள் பேசினர். உடனே அஜ்மலின் செல்போனை பார்த்தபோது அதில் ஏராளமான பெண்களின் போட்டோஸ், வீடியோஸ் இருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அஜ்மல் நிஷாரை ஒப்படைத்தோம். ஆனால், காவல்துறையினர் அஜ்மல் நிஷார் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணின் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அஜ்மல் நிஷார் குறித்து போலீஸார் விசாரித்தால் அவர் குறித்த முழு தகவல்கள் தெரியவருவதோடு செல்போன்களிலிருக்கும் மர்மமும் விலகும்" என்றனர்.

`கோழிப் பண்ணையில் லேப்டாப்; சீக்ரெட் வீடியோக்கள்!' -எப்படியெல்லாம் ஏமாற்றுவார் இன்ஜினீயர் சுஜி?

இதுகுறித்து அஜ்மல் தரப்பில் பேசியவர்கள், ``நகை, பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், பெண்ணின் தரப்பினர் அஜ்மல் குறித்து தவறான தகவல்களை போலீஸாரிடம் கூறிவருகின்றனர். ஆதாரம் இருந்திருந்தால் போலீஸார் அஜ்மல் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்" என்றனர்.

வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தபோது, ``பெண்ணின் அப்பா கொடுத்த புகாரின் பேரில் அஜ்மல் நிஷார் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அஜ்மல் நிஷார் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அஜ்மல் நிஷார் குறித்து பெண்ணின் தரப்பினர் கூறிய தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. அஜ்மல் நிஷாரின் 2 செல்போன்களில் உள்ள போட்டோஸ், வீடியோக்கள் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு