Published:Updated:

`20 வீடுகளுக்குப் பூட்டு; ரூ.62 லட்சம் கொள்ளை!’ - சென்னை ஆடு வியாபாரிகள் அதிர்ச்சி

கொள்ளை
கொள்ளை

சென்னைப் புளியந்தோப்பில் 20 வீடுகளுக்கு வெளியில் தாழ்பாள் போட்ட கொள்ளையர்கள், 62 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர்.

வியாபாரிகள்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் முனீர் பாஷா (44). சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் முகம்மது ஏஜாஸ் (50). இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து லாரியில் வரும் ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்னையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் அலுவலகம் சென்னைப் புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, பாடிசன் சந்துவில் செயல்பட்டுவருகிறது. புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டியில் வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செய்து அதை லாரிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுத்து அனுப்பி வந்தனர்.

கொள்ளை
கொள்ளை

ஊரடங்கு காரணமாக லாரிகள் ஓடவில்லை. அதனால் வசூல் செய்த பணத்தை முனீர் பாஷா, முகம்மது ஏஜாஸ் ஆகியோர் தங்களின் அலுவலகத்தில் பீரோவில் வைத்திருந்தனர். இந்தநிலையில் இவர்களின் அலுவலகத்தில் கொள்ளை நடந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இருவரும் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கொள்ளை

பின்னர், கொள்ளைச் சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் ஜெய்சிங் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. முனீர்பாஷா கொடுத்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகில் உள்ள வீடுகளின் வெளிப்புறத்தில் தாழ்பாள் போடப்பட்டுள்ளது. மேலும் கடப்பாரையால் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கத்தி முனையில் பூசாரி குடும்பம்; 100 பவுன் நகைக் கொள்ளை! -திண்டுக்கல் அதிர்ச்சி
கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கடப்பாரை
கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கடப்பாரை

இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் கூறுகையில், ``புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஆடுகளை இங்கு விற்பனை செய்து அந்தப்பணத்தை வெளிமாநில வியாபாரிகளுக்குக் கொடுக்கப்படும். ஊரடங்கு காரணமாக வசூல் செய்த பணத்தை வெளிமாநில வியாபாரிகளிடம் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அந்தப் பணத்தை அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்துள்ளனர்.

சிசிடிவி

இந்தத் தகவலைத் தெரிந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். சிசிடிவியில் 2 பேர் நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கொள்ளையடிக்கும்போது அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வெளியில் வராமலிருக்க அவர்களின் வீடுகளுக்குப் பூட்டு போடப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகக் கொள்ளையர்கள் திட்டம்போட்டுக் கொள்ளையடித்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு! கோவை இளைஞரைத் தாக்கி மகளைத் தூக்கிச்சென்ற பெற்றோர்
கொள்ளை
கொள்ளை

கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கடப்பாரையைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியில் ஆடு வியாபாரிகளிடம் 62 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு