Published:Updated:

`147, 148 ஐ.பி.சி-ன்னா என்ன தெரியுமா?' - வகுப்பெடுத்த காவல் துறை; உறுதிமொழி எடுத்த `ரூட் தல' மாணவர்கள்

எஸ்.மகேஷ்

சென்னை காவல்துறைக்கு `ரூட் தல' மாணவர்கள் பெரும் தலைவலியாக இருந்துவருகின்றனர். அரும்பாக்கம் சம்பவத்துக்குப் பிறகு `ரூட் தல' மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களை அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

ரூட் தல மாணவர்களுடன் ஆலோசனை நடத்தும் துணை கமிஷனர்
ரூட் தல மாணவர்களுடன் ஆலோசனை நடத்தும் துணை கமிஷனர்

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து (திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்) மாணவர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் கல்லூரிகளுக்கு வருகின்றனர். அவர்கள் வரும் பேருந்து ரூட் மற்றும் ரயில் ரூட் அடிப்படையில்தான் `ரூட் தல' உருவாக்கப்படுகின்றனர். ரயில்களிலும் பேருந்துகளிலும் குழுவாக வரும் மாணவர்கள் சேர்ந்து `ரூட் தல' என்று ஒரு மாணவனைத் தேர்வு செய்கின்றனர். அந்த`ரூட் தல' மாணவன் சொல்வதை அந்தக் குழு கேட்க வேண்டும். கேட்காத மாணவர்கள் மிரட்டப்படுவதுண்டு. இதுதவிர ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இன்னொரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே கெத்து காட்டுவது தொடர்பாக மோதல் ஏற்படுவதுண்டு. இந்த மோதலுக்கு தலைமை வகிப்பதும் `ரூட் தல' மாணவன்தான்.

ரூட் தல மாணவர்கள்
ரூட் தல மாணவர்கள்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லூரி, கடற்கரை பகுதியில் உள்ள கல்லூரி, ராயப்பேட்டையில் உள்ள கல்லூரி, நந்தனத்தில் உள்ள கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் பேருந்து, ரயில்களில் வரும்போது அடிக்கடி மோதிக்கொள்வது வாடிக்கையான நிகழ்வாகப் போய்விட்டது. `பஸ் டே' என்ற பெயரில் அரசுப் பேருந்தின் மேற்கூரையில் ஏறி சாகசப் பயணம் மேற்கொள்வது, பேருந்துக்குள் பாட்டுப்பாடி, நடனமாடி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற செயல்களிலும் `ரூட் தல' மாணவர்கள் குரூப்ஸ் ஈடுபடுவதுண்டு.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுபோல 'ரூட் தல' மாணவர்களின் அராஜகத்தால் நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவந்தனர். அடிக்கடி மாணவர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் மோதிக் கொள்வதைப் பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். சம்பவம் நடக்கும்போது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் மோதல் சம்பவங்கள் தொடர்கதையாகிவந்தன.

மீட்டிங்கில் ரூட் தல மாணவர்கள்
மீட்டிங்கில் ரூட் தல மாணவர்கள்

சமீபத்தில் பெரம்பூரிலிருந்து திருவேற்காடு செல்லும் அரசுப் பேருந்தில் வழித்தடம் எண் 29 இ 'ரூட் தல' மோதலில் மாணவர்களுக்குள் பயங்கர மோதல் சம்பவம் ஏற்பட்டது. அப்போது பேருந்துக்குள் பட்டாக்கத்தி, அரிவாள், கிரிக்கெட் மட்டை, டியூப் லைட் போன்ற ஆயுதங்களால் மாணவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் நெஞ்சைப் பதற வைத்தன. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு `ரூட் தல' மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்தில் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். தங்கள் பகுதிகளிலிருந்து எந்தெந்த வழித்தடங்களில் மாணவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர், அவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். `ரூட் தல' மற்றும் மாணவர்களுக்கு போலீஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் பெற்றோர்களும் அந்தந்த காவல் துறை துணை ஆணையர் அலுவலகங்களுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் துணை ஆணையர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மாணவர்களுக்கு அறிவுரைகளைக் கூறினர்.

உறுதிமொழி எடுக்கும் `ரூட் தல' மாணவர்கள்
உறுதிமொழி எடுக்கும் `ரூட் தல' மாணவர்கள்

அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 பேருந்து வழித்தடங்களில் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர். அவர்களிடம் துணை ஆணையர் ஈஸ்வரன் பேசியதாவது, ``கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. குறிப்பாக `ரூட் தல' பிரச்னையில் ஈடுபடக் கூடாது. அதை மீறினால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ஐ.பி.சி. 147, 148 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 147-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 148-ல், சட்டவிரோதமான கூட்டத்தில் பயங்கரமான ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாக்கக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். எனவே, மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் செல்லும் வழித்தடங்களில் மாணவர்கள் யாராவது பிரச்னை செய்தால் அது ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கெட்டப் பெயரை ஏற்படுத்தும். அத்தகைய மாணவர்கள் குறித்து உடனடியாக காவல்துறை அல்லது கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவியுங்கள்" என்றார்.

துணை கமிஷனர் ஈஸ்வரன்
துணை கமிஷனர் ஈஸ்வரன்

இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், கைகளை நீட்டியபடி ``கல்லூரி மாணவர்களாகிய நாங்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் எந்தவித விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். எங்களின் பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம். தவறினால் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுகிறோம் என்று உறுதியளிக்கிறோம்" என்று சத்தமாக கூறினர். துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்த மாணவர்களிடம், ஏன் இப்படி தலைமுடி வைத்துள்ளீர்கள்? என்று ஈஸ்வரன் கேட்க, அதற்கு மாணவர்கள் தலைமுடியையும் சரியாக வைத்துக்கொள்கிறோம் என்று பதிலளித்தனர்.

கத்தியை சுழற்றிய `ரூட் தல' மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

`அம்பத்தூர் காவல் சரகத்தில் 5 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. பூந்தமல்லியிலிருந்து செல்லும் பிராட்வே அரசுப் பேருந்து வழித்தடம் 53, ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசுப் பேருந்து வழித்தடம் 40 ஏ, பெரம்பூரிலிருந்து திருவேற்காடு பகுதிக்குச் செல்லும் அரசுப் பேருந்து வழித்தடம் பஸ் 29 இ பட்டாபிராமிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசுப் பேருந்து வழித்தடம் எண் 27 ஹெச், பூந்தமல்லியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லும் அரசுப் பேருந்து வழித்தடம் எண் 25 ஜி ஆகிய 5 வழித்தடங்களில் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் 30 பேர் எங்களிடம் உறுதிமொழியை பத்திரமாகக் கொடுத்துள்ளனர். இதில் 10 மாணவர்கள் மீது வழக்குகள் உள்ளன' என்கின்றனர் போலீஸார்.

கையில் கட்டுடன் ரூட் தல மாணவர்கள்
கையில் கட்டுடன் ரூட் தல மாணவர்கள்

`ரூட் தல' மாணவர்கள் இனிமேல் நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று போலீஸாரிடம் கூறியுள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த மீட்டிங் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்துக்குப்பிறகு சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் தொடர்ந்து கண்காணிக்கவும் உள்ளனர். `ரூட் தல' மோதலைத் தடுக்க சென்னை போலீஸாருடன் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.