சென்னை வடபழனி காவல் நிலையத்தில் கடந்த 14.1.2022-ம் தேதி திருவல்லிக்கேணி, ராம் நகரைச் சேர்ந்த பென்சிலைய்யா என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்துவருகிறேன். 13.1.2022-ம் தேதி என் மகன் கிருஷ்ணபிரசாந்த் வடபழனியில் உள்ள மாலுக்குச் செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவே என் மகனைக் கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பென்சிலைய்யா, அவரின் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். பென்சிலைய்யாவின் மகன் கிருஷ்ணபிரசாந்த், வடபழனியில் உள்ள மாலுக்குச் உறவினர் ஒருவரைச் சந்திக்க சென்றிருக்கிறார். அதன்பிறகு உறவினர், இன்னும் கிருஷ்ணபிரசாந்த் வரவில்லை என்று பென்சிலைய்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகே கிருஷ்ணபிரசாந்த்தை குடும்பத்தினர் தேடியிருக்கின்றனர். அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பென்சிலைய்யா, காவல் நிலையத்தில் புகாரளித்தார். விசாரணையில் பென்சிலைய்யாவின் வாட்ஸ் அப் நம்பருக்கு அவரின் மகன் கிருஷ்ணபிரசாந்தின் செல்போன் நம்பரிலிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதில் `உங்கள் மகனைக் கடத்தி வைத்துள்ளோம். 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்போம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்பார்த்த போலீஸார், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு கிருஷ்ணபிரசாந்த்தின் செல்போன் நம்பரின் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது அது, தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இருப்பது தெரியவந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உடனடியாக கிருஷ்ணபிரசாந்த்தை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸார் செகந்திரபாத்துக்குச் சென்றனர். பின்னர் தெலங்கானா போலீஸாரின் உதவியோடு கிருஷ்ணபிரசாந்த்தை 15.1.2022-ம் தேதி மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தோம். அவரிடம் விசாரித்தபோது கிருஷ்ணபிரசாந்த்துக்கு சரியான வேலை இல்லை என்று தெரிந்தது. மேலும் அவருக்கு குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது.

அதனால் பென்சிலைய்யாவிடமிருந்து பணத்தை பெற திட்டமிட்ட கிருஷ்ணபிரசாந்த், தன்னை யாரோ கடத்தி விட்டதாக நாடகமாடியிருக்கிறார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கடத்தல் நாடகமாடிய கிருஷ்ணபிரசாந்த்தை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர்.