Published:Updated:

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க தனி காவல் படை - பின்னணி காரணம் இதுதான்!

பெண்கள் சிறப்பு போலீஸ் படை
பெண்கள் சிறப்பு போலீஸ் படை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிப்பதற்காகவே சென்னை மாநகர காவல்துறையில் பெண்கள் போக்குவரத்து காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். போலீஸிடம் பிடிபட்டு 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும் என்பதால், போதை ஆசாமிகள் வாகனத்தைத் தொடவே அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒருசில பெரிய இடத்துப் பெண்கள் போதை தள்ளாட்டத்துடன் வாகனம் ஓட்டுவதையும் போலீஸிடம் பிடிபட்டால் தங்கள் குடும்பப் பின்னணியைச் சொல்லி தப்பிக்க பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க தனி காவல் படை - பின்னணி காரணம் இதுதான்!

கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் `பப்’பில் இருந்து வெளியே வந்த சில பெண்கள், தங்கள் பி.எம்.டபிள்யூ காரில் அடையார் நோக்கி சீறிப் பறந்துள்ளனர். ஆழ்வார்ப்பேட்டை மேம்பாலம் அருகே அவர்களை மடக்கிய போக்குவரத்துக் காவல்துறை, வாகனம் ஓட்டிய பெண்ணிடம் மூச்சு சோதனை நடத்த முயன்றுள்ளது.

``என்னையவே செக் பண்றீங்களா, நான் யார் தெரியுமா, என் அப்பா யார் தெரியுமா. ஒரு லேடிகிட்ட இப்படிதான் மிஸ்பிகேவ் பண்ணுவீங்களா?” என அப்பெண் கூச்சல் போட, போலீஸாருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பின்னர், உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோன்று கடந்த நவம்பர் மாதம் வேளச்சேரியில் மிகப்பெரும் வைர வியாபாரியின் மனைவி ஒருவரும் போலீஸ் வாகன சோதனையில் சிக்கியுள்ளார். ``என்னோட கார் வேல்யூ தெரியுமா உங்களுக்கு, என்னைய யார்னு நினைச்சுட்டு இருக்கீங்க. காமன் கிரிமினல்ஸ ட்ரீட் பண்ற மாதிரி என்னையும் ட்ரீட் பண்றீங்க. 10,000 ரூபாய் என்னோட ஒன் ஹவர் பாக்கெட் மணி. இதுக்காகவா என்னைய நடுரோட்டுல நிக்க வச்சிருக்கீங்க” என்று போதையில் சலம்ப, அவரைக் கட்டுப்படுத்துவதற்குள் போலீஸார் திணறிவிட்டனர். இங்கும் மகளிர் காவல்நிலையத்தில் இருந்து பெண் போலீஸார் வரவழைக்கப்பட்ட பின்னர்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இச்சம்பவங்களைப் போக்குவரத்து காவல் இணை ஆணையர்கள் எழிலரசன், ஜெய்கௌரி மூலமாகக் கூடுதல் ஆணையர் அருணின் பார்வைக்கு காவல் அதிகாரிகள் கொண்டு சென்றனர். மொபைல் உலகத்தில் இதுபோன்ற சச்சரவுகளை யாராவது படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் போலீஸுக்குத் தான் அவமானம் என வாதிடப்பட்டது. இதன் பின்னர்தான், போக்குவரத்து காவல் பிரிவில் பிரத்யேக மகளிர் படையை உருவாக்குவது எனத் திட்டம் வகுக்கப்பட்டது.

போக்குவரத்து மகளிர் காவல் படையைத் தொடங்கி வைக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
போக்குவரத்து மகளிர் காவல் படையைத் தொடங்கி வைக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைப் பிடிக்க தனி காவல் படை - பின்னணி காரணம் இதுதான்!

நேற்று டிசம்பர் 18-ம் தேதி மாலை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில், பெண்கள் போக்குவரத்து காவல் பிரிவை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை உயரதிகாரி ஒருவர், ``சென்னை மாநகரில் நான்கு போக்குவரத்து துணைச் சரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சரகத்திலும் நான்கு பெண் போலீஸ் படைகள் செயல்படும். ஒரு போலீஸ் படைக்கு ஒரு உதவி பெண் ஆய்வாளர், ஒரு பெண் ஏட்டு, இரண்டு பெண் போலீஸார் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஷிப்ட் முறையில் செயல்படும் இப்பெண் போலீஸார் பெண்களின் வாகனங்களை சோதனையிடுதல், பெண்கள் நடத்தும் போராட்டங்களில் பாதுகாப்பு அளித்தல், பெண்கள் கல்லூரி, பள்ளிகளின் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களைக் கையாளவும், தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் இவர்களுக்கு பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

``எங்களுக்கு குடியுரிமை ஏன் அவசியம்?'' - முகாம் வாழ் ஈழத் தமிழர்கள் அடுக்கும் காரணங்கள்

இதனிடையே, சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள பேட்டரியில் செயல்படும் `செக்வே ஹோவர் போர்டு’ வாகனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த வாகனத்தில் வாக்கி டாக்கி, ஸ்பீக்கர் போன், முதலுதவி சிகிச்சைக்கான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மீது ஏறி பயணிக்கும்போது எட்டடி உயரத்தில் 500 மீட்டர் சுற்றளவிலுள்ளவர்களை சுலபமாகக் கண்காணிக்க முடியும். குறுகிய பாதைகளில் ரோந்து பணியை மேற்கொள்ளவும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த ‘செக்வே ஹோவர் போர்டு’களை சென்னை போலீஸ் களமிறக்கியுள்ளது.

செக்வே ஹோவர் போர்டு வாகனங்கள்
செக்வே ஹோவர் போர்டு வாகனங்கள்

மும்பையில் செப்டம்பர் 26, 2011-ல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இதே போன்ற `ஹோவர் போர்டு’ வாகனங்களை மும்பை போலீஸ் பயன்படுத்தியது. ஆறு மணிநேரம் மட்டுமே சார்ஜ் நிற்பது, நாளடைவில் செயலிழக்கும் பேட்டரிகள், சமூக விரோதிகளை விரட்டிப் பிடிக்க முடியாதது போன்ற இடர்பாடுகளால் இவ்வாகனங்களை கிடப்பில் போட்டனர். 2017-ல் இந்த வாகனம் மீண்டும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு மீண்டும் குப்பைக்குப்போனது. இதுபோன்ற தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு நடுவில், முதல்முயற்சியாக சென்னை மாநகர போலீஸார் ‘ஹோவர் போர்டு’களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 10 `ஹோவர் போர்டு’ வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் பயன்பாடு வெற்றியடைந்தால் மட்டுமே திட்டத்தை விரிவுப்படுத்தவுள்ளதாகவும் உயரதிகாரிகள் நம்மிடம் விளக்கமளித்தனர்.

சிறுசேரி ஐ.டி பார்க்கில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை என்பதையும் சாலை விளக்குகள் எரியாததால் புதரில் இருந்து மர்மக் குரல்கள் எழுந்து பெண்களை அச்சுறுத்துவதையும் நாம் விகடனில் செய்தியாக்கியிருந்தோம். இதன் தொடர்ச்சியாக மூன்று ரோந்து வாகனங்களையும் 56 சிசிடிவி கேமராக்களையும் சிறுசேரி ஐ.டி பார்க்கில் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு என பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணை சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ளது. 75300 01100 என்கிற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் www.facebook.com/chennai.police, என்கிற ஃபேஸ்புக் முகவரி மூலமாகவும் புகார் அளிக்கலாம். dccwc.chennai@gmail.com என்கிற இ-மெயில் மூலமாகவும் புகாரிளிக்கும் வசதியை சென்னை போலீஸ் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு