Published:Updated:

சென்னை: கஞ்சா பொட்டலங்களுடன் இருந்த நாட்டு வெடிகுண்டு! - ஆந்திராவில் நடந்தது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்த இடம்
ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்த இடம்

ஆந்திராவில் பதுங்கியிருந்த கஞ்சா கும்பலின் தலைவனைப் பிடிக்க சென்னை மதுரவாயல் எஸ்.ஐ சுதாகர் தலைமையில் போலீஸார் சென்றனர். அவீட்டுக்குள் போலீஸார் சோதனை செய்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் எஸ்.ஐ., காவலர் காயமடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை அடுத்த பூந்தமல்லி, புளியம்பேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூந்தமல்லி போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்து 18 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட எட்டுப் பேரை போலீஸார் கைதுசெய்தனர். சம்பவம் நடந்த இடம் மதுரவாயல் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதி என்பதால் பூந்தமல்லி போலீஸார், கஞ்சாவையும், கைது செய்தவர்களையும் மதுரவாயல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். போலீஸாரின் விசாரணையில் கைதுசெய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, ஆந்திராவிலிருந்து சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. அதனால் ஆந்திராவில் பதுங்கியிருக்கும் கஞ்சா கும்பலின் தலைவனைப் பிடிக்க மதுரவாயல் போலீஸார் திட்டமிட்டனர்.

காயமடைந்த காவலர்
காயமடைந்த காவலர்

இதையடுத்து போலீஸ் எஸ்.ஐ சுதாகர் தலைமையில் காவலர் வெயில்முத்து, மிலன், ஊர்காவலர் படையைச் சேர்ந்த மூன்று பேர் ஆந்திராவுக்கு காரில் சென்றனர். கஞ்சா கும்பலின் தலைவனை அடையாளம் காட்ட கைதுசெய்யப்பட்ட ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தனர். இந்தச் சமயத்தில் ஆந்திரா மாநிலம் தடா பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள் கஞ்சா கும்பலின் தலைவன் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டுக்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. அதனால் போலீஸார் அந்த வீட்டைச் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதை எஸ்.ஐ சுதாகரும், காவலர் வெயில்முத்துவும் எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு பார்சல் கீழே விழுந்தது. அந்த பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில் எஸ்.ஐ சுதாகரும், காவலர் வெயில்முத்துவும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை மற்ற காவலர்கள் சென்னைக்கு அழைத்துவந்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தத் தகவல் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் நடந்த இடம் தடா என்பதால் அங்குள்ள காவல் நிலையத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக தடா போலீஸார் விசாரணை நடத்திவருவதாக இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தெரிவித்தார். மேலும், வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ சுதாகரும், காவலர் வெயில்முத்துவும் நலமாக இருப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து அண்ணாநகர் காவல் சரக போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா சப்ளை செய்யப்பட்டுவருகிறது. அதனால் ஆந்திராவிலிருந்து கஞ்சா சப்ளை செய்யும் கும்பலைப் பிடிக்க மதுரவாயல் போலீஸார் ஆந்திர மாநிலம் தடாவுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. காயமடைந்த எஸ்.ஐ., காவலரிடமும், சம்பவ இடத்திலிருந்த போலீஸாரிடமும் விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

Vikatan
சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்

ஆந்திராவுக்கு கஞ்சா கும்பலின் தலைவனைப் பிடிக்க சென்ற தகவலை அண்ணாநகர் சரக காவல் உயரதிகாரிகளிடம் தெரிவிக்காமல், தனிப்படை போலீஸார் சென்றதாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை சென்னை போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆந்திராவில் கஞ்சா கும்பலின் தலைவன் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து கஞ்சா, ஆயுதங்கள் ஆகியவற்றை போலீஸார் எடுத்துவரும்போதுதான் ஒரு பார்சல் கீழே விழுந்து வெடித்ததாக ஆந்திராவுக்குச் சென்ற தனிப்படை போலீஸார் உயரதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஏற்கெனவே நகை கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற இடத்தில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அப்போது வெளி மாநிலங்களுக்கு குற்றவாளிகளைப்பிடிக்க செல்லும்போது உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் டீம் செல்ல வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த உத்தரவு தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாக சென்னை தனிப்படை போலீஸார் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு