Published:Updated:

சென்னை: நீட் தேர்வில் பெற்ற 27 மார்க், 610-ஆக மாறியது எப்படி?! - தந்தை, மாணவியைத் தேடும் போலீஸ்

 நீட் தேர்வு
நீட் தேர்வு

சென்னையில் நடந்த மருத்துவக் கவுன்சலிங்கில் கலந்துகொண்ட மாணவி, நீட் தேர்வு மார்க்கை மாற்றியது தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத மாணவியையும் அவரின் தந்தையையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் பாலசந்திரன், பல் டாக்டர். இவரின் மகள் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்த மருத்துவக் கவுன்சலிங்கில் கடந்த 7-ம் தேதி கலந்துகொண்டார். அப்போது தீபா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழக மருத்துவக் கலந்தாய்வுக்குழு தலைவர் செல்வராஜ் பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பாலசந்திரனிடமும் தீபாவிடமும் விசாரணை நடத்த இருவருக்கும் சம்மன் அனுப்பினர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்

அதனால் இரண்டாவது தடவையாக போலீஸார் சம்மன் அனுப்பினர். அதற்கும் அவர்கள் ஆஜராகவில்லை. அதனால் சென்னை போலீஸார், ராமநாதபுரம் மாவட்ட போலீஸார் மூலம் விசாரித்தபோது பாலசந்திரனின் வீடு பூட்டியிருப்பது தெரியவந்தது. குடும்பத்தோடு பாலசந்திரன் தலைமறைவாகிவிட்டதால், அவரையும் மாணவியையும் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இது குறித்து பெரியமேடு போலீஸார் கூறுகையில், ``சென்னை நேரு விளையட்டு உள் அரங்கத்தில் இந்த ஆண்டுக்கான மருத்துவ கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற டாக்டர் பாலசந்திரனின் மகள் சமர்ப்பித்த நீட் மதிப்பெண் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது. அவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆனால், கலந்தாய்வில் 610 மதிப்பெண்கள் பெற்றதாகச் சான்றிதழ் சமர்ப்பித்திருக்கிறார். கம்ப்யூட்டர் மையம் மூலம் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நீட் தேர்வு:`மீள முடியாத வேதனையுடன் கேட்கிறோம்... கைவிடுங்கள்!’ - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன்
நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் மதிப்பெண்கள் சான்றிதழ்களை டவுன்லோடு செய்ய, பலகட்ட நடைமுறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி மாணவி தரப்பில் 610 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியின் சான்றிதழ்களை டவுன்லோடு செய்து அதில் பெயரையும் போட்டோவையும் மாற்றியிருக்கின்றனர். மாணவி தீபா மற்றும் அவரின் தந்தையிடம் விசாரித்த பிறகே கம்ப்யூட்டர் மையத்தில் உதவியவர் யாரென்று தெரியவரும். மருத்துவக் கலந்தாய்வுக்குழுத் தலைவர் செல்வராஜ், இன்னும் சில மாணவிகள் குறித்த தகவல்களையும் கொடுத்திருக்கிறார். அது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு