Published:Updated:

`டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்க சம்மட்டி, உளி போதும்!' - வேலூர் சமையல் மாஸ்டரின் `பகீர்' பின்னணி

போலீஸாரிடம் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்
போலீஸாரிடம் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்

டாஸ்மாக் கடைகளில்தான் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்பதால் சுவரில் துளைபோட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் சமையல் மாஸ்டர் குபேரன்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் வசூலாகும் பணத்தைக் கணக்கிட்டு கடைகளுக்குள்ளே வைத்துச் செல்வது வழக்கம். அதனால், அந்தக் கடைகளை குறி வைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்தன. டாஸ்மாக் கடை கொள்ளைச் சம்பவத்தில் வேலூர் கருகம்புத்துரைச் சேர்ந்த குபேரன் என்கிற சிவாவை (42) மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், எஸ்.ஐ அகஸ்டின் தலைமையிலான போலீஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையடித்தப் பணத்தில் 13,40,000 ரூபாயை போலீஸார் மீட்டுள்ளதோடு கொள்ளையடிக்கப் பயன்படுத்தும் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்
டாஸ்மாக் கொள்ளையன் குபேரன்

சமையல் மாஸ்டரான குபேரன் என்கிற சிவா எப்படி டாஸ்மாக் கொள்ளையனாக மாறினார் என்பதை நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.`` கிழிந்த சட்டை, சலவை செய்யாத அழுக்கு லுங்கி, முகத்தில் தாடியோடுதான் வலம் வருவார் டாஸ்மாக் கொள்ளையன் குபேரன் என்கிற சிவா. ஆனால், இவர் குடியிருக்கும் வீடோ சொகுசுப் பங்களா போன்ற வசதியைக் கொண்டது. அவர் பயன்படுத்தும் காரும் சொகுசு ரகத்தைச் சேர்ந்தது. திருவள்ளூரில் சில நாள்கள், வேலூரில் சில நாள்கள் என மாறி மாறி குடியிருந்த குபேரன், உண்மையில் என்ன வேலை செய்கிறார் என்பது அவரின் குடும்பத்தினருக்குக்கூட தெரியாது. ஆனால், அவரின் கையில் லட்சக்கணக்கான ரூபாய் எப்போதும் இருந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டுதான் முதல் தடவையாக சென்னை வடபழனி, கோடம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துள்ளார் குபேரன். அந்தப் பணத்தை தன்னுடைய மனம் போல செலவழித்துள்ளார். ஆசைத் தீர மது வாங்கிக் குடித்துள்ளார். பிறகு பெண்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளார். பணம் செலவானதும் மீண்டும் சென்னைக்கு வந்து டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துள்ளார். அந்தப் பணத்திலும் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

Vikatan
குபேரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு குல்லா
குபேரனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட குரங்கு குல்லா

தொடர்ந்து டாஸ்மாக் கடைகளின் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்தால் சத்தம் வராமல் சுவரில் துளையிடுவதில் எக்ஸ்பர்ட்டாக மாறியுள்ளார் சமையல் மாஸ்டர் குபேரன். இதற்காக அவர் சில டெக்னிக்குகளையும் பயன்படுத்தியுள்ளார். கொள்ளையடிக்கும் இடத்தில் தண்ணீர் குழாய்கள் இருந்தால் அதை திறந்துவிட்டுவிடுவார். தண்ணீர் விழும் சத்ததில் சுவரில் துளையிடும் சத்தம் வெளியில் கேட்காது.

மேலும், கொள்ளையடிக்கச் செல்லும்போது உதவிக்கு என யாரையும் அழைத்துச் செல்லமாட்டார். தனியொருவனாகவே கொள்ளையடிப்பார். மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்துவிட்டு பஸ், ரயில், ஆட்டோவில் சென்ற குபேரனைக் கண்டுபிடிக்க 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி-க்களை தனிப்படை போலீஸார் பார்த்துள்ளனர். ரயில், பஸ், ஆட்டோ, நடந்து என குபேரன் செல்லும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் அவரைப் பின்தொடர்ந்து போலீஸார் அவரைப் பிடித்துள்ளனர்.

லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் குபேரன், தன்னுடைய லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை. எப்போதும் லுங்கி, சட்டையுடன் வலம்வந்துள்ளார். அதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டை, திருவான்மியூர், தரமணி, கோடம்பாக்கம், வடபழனி, புதிய வண்ணாரப்பேட்டை, திருவள்ளூர் மப்பேடு உட்பட பல இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குபேரன் கொள்ளையடித்துள்ளார். அந்தப் பணத்தில் வேலூரில் ஹோட்டல் வைக்க இடம் ஒன்றை குபேரன் சமீபத்தில் வாங்கியுள்ளார். புத்திசாலித்தனமாக குபேரன், தன்னுடைய அண்ணன் பெயரில்தான் அனைத்து சொத்துகள், வீடு, கார் என எல்லாவற்றையும் வாங்கியுள்ளார். அதனால் அவரின் அண்ணனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம்.

`கிழிந்த சட்டை; குரங்கு குல்லா; `நோ' செல்போன்!' - `கோடீஸ்வர' டாஸ்மாக் கொள்ளையன் சிக்கிய கதை
குபேரனின் வேலூர் வீடு
குபேரனின் வேலூர் வீடு

குபேரனுக்கு போதிய கல்வியறிவு இல்லை என்றாலும் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவராகவே இருந்துள்ளார். போலீஸாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க செல்போனை அவர் பயன்படுத்துவதில்லை. மேலும், சிசிடிவிக்காக தலையில் குரங்கு குல்லா அணிந்த குபேரன், கைரேகை பதிவாகமலிருக்க கையுறைகளையும் பயன்படுத்திவந்துள்ளார். சுவரில் துளையிடுவதற்கான ஆயுதங்களை கையோடு எடுத்துச் சென்றுவிட்டு அதை திரும்ப எடுத்துவந்துள்ளார். இதனால்தான் குபேரன், 7 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவந்துள்ளார். மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த பணத்தோடு குபேரன் வெளியில் வருவதில் தொடங்கி அவர் பயணித்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் பின்தொடர்ந்து அவரைக் கைது செய்துள்ளோம்'' என்றார்.

குபேரனிடம் எதற்காக டாஸ்மாக் கடைகளில் மட்டும் கொள்ளையடிக்க தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்வியை போலீஸார் கேட்டபோது, `இன்னைக்கு டாஸ்மாக் கடைகளில்தான் லட்சக்கணக்கில் பணமிருக்குது. வீடுகளில் யாரும் அவ்வளவு பணம் வைப்பதில்லை. மேலும், டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிக்க இந்தச் சம்மட்டியும் உளியும் போதும்' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

வேலூரில் பெயருக்கு ஏற்ப குபேரனாக வாழ்ந்த டாஸ்மாக் கொள்ளையனின் கைதுக்குப்பிறகு அவரின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

அடுத்த கட்டுரைக்கு