Published:Updated:

`கோபிதான் மாஸ்டர் மைண்ட்..!'- மக்களின் பணத்தோடு விளையாடும் போலி கால்சென்டர்கள்

பென்ஸ் கிளப்பில் செயல்பட்ட போலி கால் சென்டர்
பென்ஸ் கிளப்பில் செயல்பட்ட போலி கால் சென்டர்

`சென்னை முகவரியில் உள்ள செல்போன் நம்பர்களுக்கு கால் பண்ணக் கூடாது. ஒரு நபருக்கு 3 லட்சம் ரூபாய் டார்கெட்டோடு செயல்படும் போலி கால்சென்டர்களுக்கு கோபிதான் மாஸ்டர் மைண்ட்' என்கிறது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

டிஜிட்டல் இந்தியாவில் எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. அதனால் இணைய குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சிசிபி என்ற அழைக்கப்படும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணம் இழந்தது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்தன. அந்தப் புகார்களில் கால் சென்டரிலிருந்து பேசிய பெண், இன்சூரன்ஸ், லோன் எனச்சொல்லி பணத்தை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்வையிடும் போலீஸ் அதிகாரி அன்பு
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்வையிடும் போலீஸ் அதிகாரி அன்பு
Vikatan

இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்குத் தகவல் தெரிந்ததும் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் நாகஜோதி, கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் டீம் நடத்திய விசாரணையில் போலி கால் சென்டர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியில் தெரியவந்தன.

சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆவடி, ஆலந்தூர், வடபழனி, வேளச்சேரி என 7 இடங்களில் கால் சென்டர் என்ற பெயரில் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அலுவலகம் நடத்திவரும் தகவல் கிடைத்ததும் போலீஸ் டீம் அங்கு சென்று அதிரடி வேட்டை நடத்தியது. அப்போது இந்தக் கால் சென்டர்களை நடத்தியது கோபிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. செல்போனில் பேசி, மக்களை நம்ப வைத்து பணத்தைப் பறிப்பதுதான் கோபிகிருஷ்ணன் மற்றும் அவரின் கூட்டாளிகளின் வேலை. அதனால் கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் மற்றும் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் சிக்காமலிருந்த போலி கால் சென்டர்களின் மாஸ்டர் மைண்ட் என்று அழைக்கப்படும் கோபிகிருஷ்ணன், 2019- ம் ஆண்டு பிப்ரவரியில்தான் போலீஸ் விரித்த வலையில் சிக்கிக் கொண்டார்.

கோபிகிருஷ்ணன்
கோபிகிருஷ்ணன்
`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்

கோபிகிருஷ்ணனிடம் விசாரித்தபோதுதான் சென்னையில் எங்கெல்லாம் போலி கால் சென்டர்கள் செயல்படும் ரகசிய தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. இதற்குள் இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அன்பு, செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மீனா பிரியா எனப் பலர் மாறுதலாகி விட்டனர். ஆனால், போலி கால் சென்டர் மோசடி குறித்த விசாரணை தொடர்ந்தது. கோபிகிருஷ்ணனின் வலது, இடது கரமாகச் செயல்பட்ட செல்வா என்கிற செல்வக்குமார், முனீர் உசேன் ஆகியோர், தனித்தனியாக போலி கால் சென்டர்களை நடத்திவரும் தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் செல்வா மற்றும் அவரின் கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். செல்வா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் சிக்கிய பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன், அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். செல்வாவிடம் விசாரித்தபோது அவர் உச்சரித்த பெயர் கோபிகிருஷ்ணன். `கோபி சார்தான் எங்களின் மாஸ்டர் மைண்ட் என்று போலீஸாரிடம் செல்வா' கூறியதாகச் சொல்கிறார்கள். கோபிகிருஷ்ணனிடமிருந்து பிரிந்த செல்வா, தனியாக இந்த மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். செல்வாவிடம் 100-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்துவந்துள்ளனர். அவர்களில் பலருக்கு இது ஒரு மோசடி வேலை என்பது தெரியாது.

செல்வாவின் கூட்டாளிகள் மிதுன், குமரன்
செல்வாவின் கூட்டாளிகள் மிதுன், குமரன்

கோபிகிருஷ்ணன், செல்வா ஆகிய இருவர் சிக்கிக் கொண்டனர். போலீஸ் பிடியில் சிக்காத முனீர் உசேன் நடத்திவரும் சென்னை அண்ணாசாலையில் உள்ள போலி கால் சென்டருக்குள் போலீஸ் டீம் நுழைந்தது. `அந்த அலுவலகத்தின் மாத வாடகை 50,000 ரூபாய். கார்ப்பரேட் அலுவலகத்தை விஞ்சும் வகையில் முனீர் உசேனின் அலுவலகம் செயல்பட்டுவந்துள்ளது. இந்த அலுவலகத்தில் டெலிகாலர்ஸ், டீம் லீடர்கள், டிவிஷனல் மேலாளர்கள், ஹெச்.ஆர், சட்டக்குழுவினர் என 27-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவந்துள்ளனர். முனீர் உசேனுக்கு அண்ணாசாலை அலுவலகம் போல சென்னையில் இன்னும் சில கிளைகள் உள்ளன. அங்கு விரைவில் போலீஸார் அதிரடி வேட்டை நடத்தவுள்ளனர்' என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``10 செல்போன்கள், ஒரு ஆபீஸ், டெலிகாலர் பணிக்குப் பட்டதாரிகள், அவர்களை மேற்பார்வையிட டீம் லீடர்கள் இருந்தால் போதும். கால் சென்டரை ஆரம்பித்துவிடலாம். பொதுமக்களின் செல்போன் நம்பர்கள், விவரங்களை இந்த கால் சென்டர்களை நடத்துபவர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட முகவரிகள் இல்லாதவர்களுக்கு டெலிகாலர்கள் போன் செய்து பேச வேண்டும். டெலிகாலர் பணியில் பெரும்பாலும் காந்தக் குரல் கொண்ட பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.

பென்ஸ் சரவணன்
பென்ஸ் சரவணன்

வெளியூர் நபர்களுக்கு போன் செய்யும் டெலிகாலர்ஸ் பெண்கள், முதலில் சார், உங்களுக்குக் குறைந்த வட்டியில் ஈஸியாக லோன் வேண்டுமா என்று பேசுவார்கள். பின்னர், பிரபலமான தனியார் நிறுவனத்தின் பெயரை அவர்கள் பயன்படுத்துவார்கள். லோன் வேண்டும் என்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையைச் சொல்வார்கள். அதற்கு சம்மதிப்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து சேவைக் கட்டண தொகையை அனுப்பும்படி மோசடிக் கும்பல் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு நம்பரைச் சொல்வார்கள். பணம் வந்ததும் அந்த செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிடும். இதுதான் மோசடி கால் சென்டர்களை நடத்தும் கும்பலின் ராஜதந்திரம், கோபி கிருஷ்ணன், செல்வாவைத் தொடர்ந்து முனீர் உசேனின் கூட்டாளிகளைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் முனீர் உசேனைத் தேடிவருகிறோம். போலி கால் சென்டர்களிலிருந்தது வரும் அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு