பா.ஜ.க ஆதரவாளரான மாரிதாஸ் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர தொழில்நுட்ப குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். தகவல் தெரிந்து மாரிதாஸ் வீட்டின்முன் பா.ஜ.க நிர்வாகிகள் குவிந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்களை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டும் கருத்துகளைப் பதிவிட்டும் வருபவர் மாரிதாஸ். இவர் வீடு, மதுரை சூர்யா நகரில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர் மீது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சென்னை மாநகர் காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஏ.டி.எஸ்.பி தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.

சோதனை செய்வதற்கான அனுமதி உள்ளதா என்று வந்திருந்த காவல்துறை அதிகாரிகளிடம் மாரிதாஸ் கேட்க, உரிய விசாரணை ஆவணங்களை காண்பித்தபின் உள்ளே அனுமதித்தார். மாரிதாஸிடம் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்பு அவர் பயன்படுத்திய லேப்டாப், மொபைல், பென்டிரைவ் உள்ளிட்ட சாதனைங்களை சோதனை செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லேப்டாப்பில் பதிவு செய்து வைத்த ஆவணங்களை சேகரித்த அதிகாரிகளிடம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு சம்பந்தமில்லாத ஆவணங்களை எடுக்கக்கூடாது என மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. லேப்டாப்பில் உள்ள ஆவணங்களை மட்டும் காவல்துறை அதிகாரிகள் பென்டிரைவில் காப்பி செய்து எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து மாரிதாஸ் பயன்படுத்திய மற்றொரு லேப்டாப் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாரிதாஸிடம் விசாரணை நடத்திவரும் தகவல் பா.ஜ.க நிர்வாகிகளுக்கு தெரிந்ததால், மதுரை மாநகர பா.ஜ.க தலைவர் சீனிவாசன் உட்பட நிர்வாகிகள், கட்சி வழக்கறிஞர்கள் வீட்டிற்கு முன்பு குழுமியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.