Published:Updated:

`நகைகளை அடகு வைத்த திருவாரூர் முருகன்; மீட்கப்பட்ட ஒரு கிலோ தங்கம்!'- அதிரடி காட்டிய சென்னை போலீஸ்

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

சென்னையில் கொள்ளையடித்த தங்க நகைகளை புதுக்கோட்டை, மதுரையில் திருவாரூர் முருகன் அடகு வைத்துள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 60 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் மீது தமிழகம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் உள்ள பிரபலமான ஜூவல்லரியின் சுவரைத் துளையிட்டு 28 கிலோ தங்க நகையைக் கொள்ளையடித்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார். பெங்களூருவிலும் முருகன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரைக் காவலில் எடுத்த அந்தமாநில போலீஸார், விசாரணைக்குப்பிறகு மீண்டும் பெங்களூரு சிறையில் முருகனை அடைத்தனர்.

திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

இதையடுத்து திருச்சி போலீஸார், திருவாரூர் முருகனை போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் சிறையிலிருந்து திருச்சிக்கு அழைத்துவந்தனர். முருகனிடம் விசாரணை நடத்தி, கொள்ளையடித்த நகைகளைப் பறிமுதல் செய்தனர். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட திருவாரூர் முருகனை சென்னை அண்ணாநகர் போலீஸார் காவலில் எடுத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி ஒரு கிலோ, 60 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போலீஸார் கூறுகையில், ``சென்னை அண்ணாநகர் காவல் சரகத்தில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திருவாரூர் முருகனின் வலதுகையாகச் செயல்பட்ட தினகரன்(33), லோகநாதன் (52), மணிகண்டன், கோபால், காளிதாஸ்(36) ஆகிய 5 பேரைக் கைது செய்தோம். அவர்களிடமிருந்து 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி, 1,000 அமெரிக்க டாலர்கள், கார், 2 வாக்கி டாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

`7 நாள் கஸ்டடி; வளைந்து கொடுக்காத முருகன்!' -நகைக்கடை கொள்ளை வழக்கில் திணறும் திருச்சி போலீஸ்
திருவாரூர் முருகன்
திருவாரூர் முருகன்

இந்தக் கும்பல் 19 கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை வழக்கில் திருவாரூர் முருகன் கைது செய்யப்படவில்லை. அதனால்தான் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு சென்று நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம். போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முருகனுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு