Published:Updated:

சென்னை: `8 மாத குழந்தை; ட்ரோன் மூலம் தேடிய காவல்துறை!' - சோகத்தில் மூழ்கிய குடும்பம்

ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை
ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

சென்னை ஆவடி அருகே உள்ள சேக்காடு ஏரியில் ஆசிரியை கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியையின் சடலம் 27-ம் தேதி மீட்கப்பட்ட நிலையில் இன்று குழந்தையின் சடலம் ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (30), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (25). இவர், குழந்தைகள் பள்ளியில் சில காலம் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். புவனேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாலாஜியை, 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இளவரசி என்கிற ஆரோக்கியா ( 5), நிக்கிதா (2) தபித்தால் (8 மாதம்) என மூன்று மகள்கள்.

பாலாஜி, புவனேஸ்வரி
பாலாஜி, புவனேஸ்வரி

திருமணமான சில மாதங்களிலேயே சில பிரச்னைகள் காரணமாக புவனேஸ்வரி தீக்குளித்தார். அப்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஸ்வரி உயிர்பிழைத்தார். அப்போது மருத்துவர்கள், தீக்காயங்கள் இருப்பதால் நீங்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வது சிரமம். அதனால் கவனமாக நடந்துக்கொள்ளுங்கள் என்று புவனேஸ்வரியிடம் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். ஆனால், அதன்பிறகும் புவனேஸ்வரி குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்.

சந்தோஷமாக வாழ்ந்த பாலாஜி, புவனேஸ்வரியின் வாழ்க்கையில் மது போதையால் பிரச்னை விஸ்ரூபமெடுத்தது. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் பாலாஜி, மனைவியை கெட்டவார்த்தைகளால் திட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதனால் மனமுடைந்து புவனேஸ்வரி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 23-ம் தேதி புவனேஸ்வரிக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தப் பெண்ணுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை அசிங்கமாக பாலாஜி திட்டியுள்ளார். அது, புவனேஸ்வரியின் மனதளவில் பாதித்தது.

ஆசிரியை புவனேஸ்வரி
ஆசிரியை புவனேஸ்வரி

இதையடுத்து கணவர் வேலைக்குச் சென்ற பிறகு தன்னுடைய கைக்குழந்தை தபித்தாலை மட்டும் தூக்கிக்கொண்டு புவனேஸ்வரி கடந்த 25-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கடந்த 27-ம் தேதி புவனேஸ்வரி, சேக்காடு பகுதியில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். தபித்தால் குறித்த தகவல் கிடைக்கவில்லை. அந்த ஏரியில் தபித்தாலை போலீஸார் தேடினர். ஆனால், மழையின் காரணமாக தபித்தாலை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் குழந்தை தபித்தால் உயிரோடு கிடைக்க வேண்டும் என சேக்காடு பகுதி மக்கள் பிராத்தனை செய்தனர். புவனேஸ்வரி, கைக்குழந்தையுடன் செல்லும் சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்தனர். மேலும் அவரின் செல்போன் கால் ஹிஸ்ட்ரி அடிப்படையிலும் விசாரணை நடந்தது. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு புவனேஸ்வரி செல்லும் காட்சிகள் மட்டுமே போலீஸாருக்கு கிடைத்தன. இந்தச் சமயத்தில் ட்ரோன் மூலம் ஏரியில் தபித்தாலை தேட போலீஸார் முடிவு செய்தனர்.

ட்ரோன் மூலம் தேடும் போலீஸ்
ட்ரோன் மூலம் தேடும் போலீஸ்

ஏரியின் மேலே ட்ரோன் பறந்தது. அந்தப் புகைப்படங்களை போலீஸார் கரையிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் தபித்தாலின் சடலம் கிடப்பதை போலீஸார் பார்த்தனர். உடனடியாக அந்த இடத்துக்கு மேலே ட்ரோனை பறக்க வைத்து அதை உறுதிப்படுத்தினர். பின்னர் தபித்தாலின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தபித்தாலின் சடலம் மீட்கப்பட்ட தகவல் சேக்காடு பகுதி மக்களிடையே காட்டு தீ போல பரவியது. அதனால் அனைவரும் கதறி அழுதனர்.

இதையடுத்து மகளை கொலை செய்து புவனேஸ்வரியும் ஏரியில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 25-ம் தேதி முதல் இன்று வரை 7 நாள்களாக புவனேஸ்வரி மற்றும் தபித்தாலை போலீஸாரும் அவரின் உறவினர்களும் தேடிவந்தனர். 27-ம் தேதி புவனேஸ்வரியின் சடலம் கிடைத்த நிலையில் தபித்தாலின் சடலம் 5 நாள்களுக்குப் பிறகு கிடைத்துள்ளது. அதனால் தபித்தாலின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சடலமாக தபித்தால்
சடலமாக தபித்தால்

இந்த வழக்கை ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ், எஸ்.ஐ கார்த்தி ஆகியோர் 7 நாள்களாக இரவு பகல் எனப் பாராமல் விசாரித்து வந்தனர்.

இதுகுறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``ஆசிரியை புவனேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றிய பிறகு அவரின் குழந்தை தபித்தாலை தேடி வந்தோம். ட்ரோன் மூலம் தேடியபோது குழந்தையின் சடலம் ஏரியில் மிதந்ததைப் பார்க்க முடிந்தது. குழந்தையை கொலை செய்துவிட்டு புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்க வேண்டும். அதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

சென்னை: `நான் சாகப் போகணும்; ஏனென்றால் நான் நல்லவள்!' - ஏரியில் சடலமாக மிதந்த ஆசிரியை
அடுத்த கட்டுரைக்கு