Election bannerElection banner
Published:Updated:

சென்னை: மார்க்கெட்டில், கூட்ட நெரிசலில் மாயமான குழந்தை! - 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது எப்படி?

மாயமான குழந்தையுடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
மாயமான குழந்தையுடன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

சென்னையில் மார்க்கெட்டுக்குச் சென்ற தாய், கூட்ட நெரிசலில் தன்னுடைய 5 வயது மகனைத் தவறவிட்டார். புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் குழந்தையை போலீஸார் கண்டுபிடித்தனர்.

சென்னை, ஓட்டேரி சந்தியப்பன் 5-வது தெருவில் வசித்துவருபவர் ராஜமாணிக்கம். இடியாப்பம் வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி பொன்னம்மாள் (37). இந்தத் தம்பதியருக்கு பழனி என்கிற 5 வயது குழந்தை உள்ளது. பழனிக்கு வாய் பேச முடியாது. பழனியை அழைத்துக்கொண்டு பொன்னம்மாள், ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட்டுக்குச் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில் பழனி திடீரென மாயமாகிவிட்டார்.

குழந்தை பழனியுடன் போலீஸார்
குழந்தை பழனியுடன் போலீஸார்

மார்க்கெட்டில் பல இடங்களில் தேடியும் பழனி கிடைக்கவில்லை. அதனால் பொன்னம்மாள் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் பழனியைத் தேடினர். காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் வாட்ஸ்அப் குழுவில் பழனியின் புகைப்படத்தைப் பகிர்ந்து தேடினர். மேலும் வாகனச் சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டனர்.

சென்னை: குழந்தை இல்லை; கொலையில் முடிந்த கொடூரம் - கணவரைத் தேடும் போலீஸ்!

இந்தச் சூழலில் ஓட்டேரி வரதம்மாள் கார்டன் 2-வது தெருவிலுள்ள மைதானம் அருகில் பழனி நிற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்கு சென்று, பழனியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் பொன்னம்மாள் கட்டியணைத்து முத்தமிட்டார். அதன் பிறகு போலீஸாருக்கு பொன்னம்மாள் கண்ணீர்மல்க நன்றி கூறினார். காவல் நிலையத்துக்கு வந்த பழனிக்கு ஸ்வீட்ஸ் மற்றும் உணவை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வாங்கிக் கொடுத்தனர். அதன் பிறகு பொன்னம்மாளிடம் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு போலீஸார் அறிவுரை கூறினர். பழனி, மாயமாகி மூன்று மணி நேரத்தில் போலீஸார் கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றனர். அதனால் போலீஸ் உயரதிகாரிகள் தலைமைச் செயலக போலீஸாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இது குறித்து தலைமைச் செயலக போலீஸார் கூறுகையில், ``மகனைக் காணவில்லை என்று பொன்னம்மாள் முற்பகலில் எங்களிடம் புகார் அளித்தார். உடனடியாக பழனி காணாமல்போன மார்க்கெட் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தேடினோம். இந்தச் சமயத்தில் பொன்னம்மாளிடம் பழனி எப்படி மாயமானான் என்று விசாரித்தபோது, மார்க்கெட்டில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஓடிவிட்டான் என்று கூறினார். அதனால் மார்க்கெட் முழுவதும் ஒவ்வோர் இடமாகத் தேடத் தொடங்கினோம். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தோம். மார்க்கெட்டிலிருந்து ஓடிய பழனி, அருகிலுள்ள மைதானத்திலிருக்கும் கோயில் ஒன்றில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றிருக்கிறான். பின்னர் அந்தக் குழந்தைகளோடு அவன் விளையாடியிருக்கிறான். பழனியைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்று பழனியை மீட்டு வந்தோம். அப்போது பழனி பசியோடு சோர்வடைந்திருந்ததால் அவனுக்கு உணவு வழங்கினோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு