Published:Updated:

`என் அன்பைப் புரியவைக்க இப்படிச் செய்துவிட்டேன்!’- கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை மாணவர்

கடத்தல் வழக்கில் சிக்கிய இன்ஜினீயரிங் மாணவர்
கடத்தல் வழக்கில் சிக்கிய இன்ஜினீயரிங் மாணவர்

கல்லூரிக்குச் செல்ல, ஐபி இன்ஸ்பெக்டரின் மகள் பஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல், காரில் கடத்தியது. காதல் விவகாரத்தால் நடந்த இச்சம்பவத்தில், சென்னை இன்ஜினீயரிங் மாணவர் சிக்கியுள்ளார்.

சென்னை போரூர், கிருகம்பாக்கம் பகுதியில் சென்ற காரிலிருந்து இளம்பெண்ணின் அபயக்குரல் கேட்டது. உடனே அந்தக் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்தனர். அதனால், கார் இன்னும் வேகமாகச் செல்லத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100-க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ்
போலீஸ்

இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றனர். அப்போது வேகமாகச் சென்ற கார், அந்தப் பகுதியிலிருந்த கால்வாயில் சிக்கியது. அதனால் காருக்குள் இருந்தவர்கள் இளம்பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களில் இருவரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய இன்னொருவரை போலீஸார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்தனர். காருக்குள் இருந்த இளம்பெண்ணையும் போலீஸார் மீட்டனர். பின்னர், அனைவரையும் மாங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது மூன்று பேர் இளம்பெண்ணை காரில் கடத்தியது தெரியவந்தது. அந்த இளம்பெண்ணின் அப்பா, மத்திய உளவுப்பிரிவான ஐபி -யில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். அந்தப் பெண், தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். கல்லூரிக்குச் செல்ல அந்தப் பெண் சென்ற சமயத்தில்தான் காரில் கடத்தப்பட்டுள்ளார்.

மாங்காடு காவல் நிலையம்
மாங்காடு காவல் நிலையம்

கடத்தியவர்களில் ஒருவரின் பெயர் அரவிந்தகுமார். இவர், போரூர் மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர். இவர், சென்னையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவருகிறார். இவரும், அந்தக் கல்லூரி மாணவியும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். அப்போது, மாணவியை அரவிந்தகுமார் காதலிப்பதாகச் சொல்லி தொல்லைகொடுத்ததாக மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அப்போது, போலீஸார் விசாரணை நடத்தி, அறிவுரை மற்றும் எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்துள்ளனர். அதன்பிறகு, அரவிந்தகுமார் தரப்பிலிருந்து மாணவிக்கு எந்தவித தொல்லையும் இல்லை.

கடந்த சில நாள்களாக அரவிந்தகுமாரிடமிருந்து மாணவிக்கு போன் அழைப்புகள் வந்துள்ளன. அதுகுறித்து மாணவி, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்த நிலையில்தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். மாணவியைக் கடத்திய குற்றத்துக்காக இன்ஜினீயரிங் மாணவர் அரவிந்தகுமார் மற்றும் அவருக்கு உதவிய 2 சிறுவர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அரவிந்தகுமாரை புழல் சிறையிலும் 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் சேர்த்துள்ளோம்" என்றார்.

Vikatan

போலீஸாரிடம் அரவிந்தகுமார், ``பள்ளியில் படிக்கும்போதே அந்த மாணவியைக் காதலித்தேன். அப்போது எனக்குத் திருமண வயதில்லை என்றும், படிப்பில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினர். அதனால் அவளுக்காக நான் காத்திருந்தேன். தற்போது, இருவரும் கல்லூரியில் படிக்கிறோம். என் காதலையும் அன்பையும் புரியவைக்கத் திட்டமிட்டேன். இதற்காக, எங்கள் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை உதவிக்கு அழைத்துச் சென்றேன். கல்லூரிக்குச் செல்ல அவள் (மாணவி) பஸ்நிறுத்தத்துக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆள்நடமாட்டம் இல்லை. அதனால், காரை அவளின் அருகில் நிறுத்தினேன். பின்னர், அவளை வலுகட்டாயமாக காருக்குள் ஏற்றினோம். நான்தான் காரை ஓட்டினேன். பின்இருக்கையில் அவளை 2 பேரும் பிடித்துக்கொண்டனர். மெயின் ரோடு வழியாகச் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்றுதான் தெரு வழியாகச் சென்றேன். ஆனால், காருக்குள் இருந்து அவள் சத்தம் போட்டதால் வேகமாக காரை ஒட்டினேன். அதனால் கார், கால்வாய்க்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறியுள்ளார்.

பொதுமக்களிடம் சிக்கிய இன்ஜினீயரிங் மாணவர், அவருக்கு உதவிய 2 சிறுவர்களுக்கு தர்மஅடி விழுந்ததாகத் தகவல் உள்ளது. போலீஸாரும் பொதுமக்களும் துரிதமாகச் செயல்பட்டதால், கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பின் செல்ல