Published:Updated:

கல்லூரிக்கே செல்லாமல் வழக்கறிஞரான ரயில்வே ஊழியர்! - சட்டக்கல்லூரி முதல்வர் சிக்கிய பின்னணி

சட்டக்கல்லூரி முதல்வர்
சட்டக்கல்லூரி முதல்வர்

கல்லூரிக்கே வராத சட்டக்கல்லூரி மாணவனான ரயில்வே ஊழியர் விபினுக்குப் போலி வருகைப்பதிவு சான்றிதழ் வழங்கிய குற்றச்சாட்டில் ஆந்திரச் சட்டக்கல்லுாரி முதல்வரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கழகத்தின் செயலாளர் ராஜா குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ``சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் விபின் (59). இவர் ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். பணியில் இருக்கும்போதே ரயில்வே துறையின் அனுமதியின்றி ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள `ஸ்ரீமதி பாசவா ராமா தரகம் மெமோரியல் சட்டக் கல்லூரியில்’ 2015-ம் ஆண்டு முதல் 2018- ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் எல்எல்பி படித்துள்ளார்.

representational image
representational image

சட்டக்கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், ரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் விபின் கல்லூரிக்குப் போகாமலேயே வகுப்புக்களுக்குச் சென்றதுபோல போலியான வருகைப் பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார். பின்னர் அவர் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரின் விண்ணப்பம் சில காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் விபின், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பார்கவுன்சில் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியில் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முயற்சி செய்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்

இந்தப் புகாரின் பேரில் சென்னை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர், விபினை 11.6.2019 அன்று போலீஸார் கைது செய்தனர். விபினுக்கு உதவிய வழக்கறிஞர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கௌதமனை விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த வழக்கில் விபின், படித்த சட்டக்கல்லூரியில் அவருக்கு போலியான வருகைப்பதிவைக் கொடுத்த குற்றத்துக்காக சட்டக் கல்லூரியில் முதல்வர் ஹிமவந்த குமார் கைது செய்யப்பட்டார்

சட்டக்கல்லுாரி தேர்வு எழுதுவதற்குக் குறைந்த பட்சம் 70 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், ரயில்வே துறையில் பணியிலிருந்த காரணத்தினால் விபின் கல்லூரிக்குப் போகாமலேயே வகுப்புக்களுக்குச் சென்றது போல போலியான வருகைப் பதிவு பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார்.
ராஜா குமார்

இதுகுறித்து ராஜா குமாரிடம் பேசினோம். ``விபினின் விண்ணப்பத்தை நிராகரித்த பிறகும் அவர் பார் கவுன்சிலில் பதிவு செய்யப் பல்வேறு வகையில் முயற்சி செய்தார். அவர் சட்டம் படித்தது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்தோம். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்றார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``ரயில்வே பணியிலிருந்து 2017 மே மாதம் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் விபின். ஆனால், அவர் சட்டக்கல்லூரிக்குச் செல்லாமல் வருகைப்பதிவை முதல்வர் ஹிமவந்த குமார் மூலம் பெற்றுள்ளார். தேர்வையும் எழுதி தேர்ச்சியும் பெற்றுள்ளார். விபின் மீது பார் கவுன்சில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் பல தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் முழுமையான தகவல்கள் வெளியாகும். தற்போது கைதான சட்டக்கல்லூரி முதல்வர் ஹிமவந்த குமார் பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதுவரை நடந்த விசாரணையில் விபின் போல பலருக்கு இவர் உதவியது தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்துவருகிறோம் " என்றனர்

அடுத்த கட்டுரைக்கு