Published:Updated:

`நம்பிவந்தேன்; சிக்கிக்கொண்டேன்!' - கடத்தல் வழக்கில் சிக்கிய `போலி இன்ஸ்பெக்டர்' முத்துலட்சுமி

`வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். வதனீயை நம்பிவந்து சிக்கலில் சிக்கிக் கொண்டேன்' என்று போலி இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.

`போலி இன்ஸ்பெக்டர்' முத்துலட்சுமி
`போலி இன்ஸ்பெக்டர்' முத்துலட்சுமி

சென்னை வேளச்சேரி, வெங்கடேஷ்வரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரின் மனைவி சுபாஷினி (42). இவர் கிண்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், கிண்டி ரயில் நிலையத்திலிருந்து கடந்த 5-ம் தேதி மாம்பலம் ரயில் நிலையத்துக்குச் செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது இளைஞர் ஒருவரும் முகத்தைத் துப்பட்டாவால் மூடியபடி பெண் ஒருவரும் என் அருகில் வந்தார்கள். அவர்கள், என்னை வழிமறித்து வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி, ` ஏய் இங்க வா..உன்னை இன்ஸ்பெக்டர் மேடம் கூப்பிடுறாங்க' என்று மிரட்டும் குரலில் கூறினர்.

போலீஸாக நடித்த பெண்கள்
போலீஸாக நடித்த பெண்கள்

அவர்களிடம், `நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது, நான் ஏன் வரவேண்டும்?' என்று கேட்டபடியே என் கணவருக்குப் போன் செய்ய முயன்றேன். அதற்கு என் செல்போனை அந்தப் பெண் பறித்தார். அவரிடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டு கிண்டி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையை நோக்கிச் சென்றேன். அப்போது என் கையைப்பிடித்து இழுத்தனர். அதற்குள் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிலர் வந்ததால் அந்தப் பெண் ஓடிவிட்டார். அந்த இளைஞர் சிக்கிக் கொண்டார். என்னைக் கடத்திக் கொலை செய்ய முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

கிண்டி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் துணை கமிஷனர் பகலவன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கிண்டி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீஸார் துரிதமாகச் செயல்பட்டனர். சிசிடிவி உதவி மற்றும் சிக்கிய இளைஞர் ஆகியோரிடம் விசாரித்த கிண்டி போலீஸார், வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி, வதனீ
தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி, வதனீ

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது வதனீ என்பவர். இவர், பெரம்பூர் பகுதியில் துணிக்கடை நடத்திவந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் டெய்லரிங் வேலையைச் செய்துவந்துள்ளார். வதனீக்கும் அவரின் கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரையும் சேர்த்து வைக்க வதனீயின் கணவரின் நண்பர் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கிஷோர், மாம்பலம் ரயில் நிலையத்தில் பணியாற்றிவருகிறார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வதனீக்கும் கிஷோருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. கிஷோருடன் வேலை பார்ப்பவர் சுபாஷினி. அவரிடமும் கிஷோர் நட்பாகப் பழகியுள்ளார். அது வதனீக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் சுபாஷினியை மிரட்டுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடைய தோழிகள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, ஆவடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் மூலம் சுபாஷினியைக் கடத்த முடிவு செய்துள்ளார். தன்னுடைய திட்டத்தை முத்துலட்சுமி, தமிழ்செல்வியிடம் கூறியதும் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

`நான் இன்ஸ்பெக்டர், நீங்கள் போலீஸ்'- சென்னைப் பெண் ரயில்வே ஊழியரைக் கடத்த ஸ்கெட்ச் போட்ட பெண்கள்

இதையடுத்து மூன்று பேரும் போலீஸ் சீருடையில் சென்று சுபாஷினியை மிரட்ட முடிவு செய்தனர். வில்லிவாக்கதைச் சேர்ந்த முத்துலட்சுமியை போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்குமாறு வதனீ கூறியுள்ளார். அதற்கு முதலில் மறுத்த முத்துலட்சுமி, தோழிக்காக ஒப்புக் கொண்டு இன்ஸ்பெக்டர் சீருடையை அணிந்துள்ளார்.

அதன்பிறகு மூன்றுபேரும் வாடகைக்கு காரை எடுத்துக் கொண்டு சுபாஷினியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து கணவரின் பைக்கில் புறப்பட்ட சுபாஷினி, கிண்டி ரயில் நிலையத்துக்கு இரவு 7 மணியளவில் வந்துள்ளார்.

அப்போதுதான் சுபாஷினியிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைப்பதாகக் கூறியுள்ளனர். முத்துலட்சுமி, போலீஸ் சீருடையில் காரில் இருந்துள்ளார். சுபாஷினி, சத்தம் போட்டதால் வதனீ, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால், கார் டிரைவர் சிக்கிக் கொண்டார். அவர் அளித்த தகவலின்படி மூன்று பெண்களையும் கைது செய்துள்ளோம்" என்றார்.

``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்!'' - மகாலட்சுமி

இன்ஸ்பெக்டராக நடித்த முத்துலட்சுமி, போலீஸ் விசாரணையில், ``நான் வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன். ஒரு நிகழ்ச்சியில்தான் வதனீயையும் தமிழ்ச்செல்வியையும் சந்தித்தேன். தமிழ்ச்செல்வி அழகு நிலையம் நடத்திவருகிறார். வதனீ, டெய்லரிங் வேலை செய்து வருகிறார். நாங்கள் மூன்று பேரும் நெருங்கிய தோழிகள். வதனீயின் குடும்பச் சூழல் எங்களுக்குத் தெரியும். அவரை நம்பித்தான் இன்ஸ்பெக்டராக நடிக்க வந்தேன். ஆனால் இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.