Published:Updated:

`5 நாளும் பானிபூரி, சமோசாதான்!' -பீகாரில் நிஜ தீரனாக மாறிய சென்னை போலீஸ் டீம்

சென்னை தொழிலதிபர் பிரபாகரன்
சென்னை தொழிலதிபர் பிரபாகரன்

அம்பத்தூரில் கொலை செய்துவிட்டு பீகாருக்குத் தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க சென்னை போலீஸார் சென்றனர். அங்கு தீரன் படம் போல நிஜ அனுபவத்தைச் சந்தித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி, பெரியார்நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். அ.தி.மு.க பிரமுகர். இவரின் மகன் பிரபாகரன் (27). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அத்திப்பட்டு, நடேசன் நகரில் மோல்டிங் கம்பெனியை நடத்திவந்தார். இவரின் கம்பெனியில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்துவந்தனர்.

இந்த நிலையில், பூட்டிய கம்பெனிக்குள் கடந்த 22-ம் தேதி பிரபாகரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் துணைக் கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர் முபாரக், ஏட்டுகள் சார்லஸ், அன்பழகன் சதீஷ்குமார் உள்ளிட்டோர் விசாரணையில் இறங்கினர்.

சென்னை போலீஸ் டீம்
சென்னை போலீஸ் டீம்

விசாரணையில் பிரபாகரனிடம் வேலை பார்த்த பீகாரைச் சேர்ந்த ரோசன் மற்றும் 17 வயதுச் சிறுவன் ஆகியோர், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும், கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், அவர்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஓடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். தப்பி ஓடியவர்கள், தங்களின் சொந்த மாநிலமான பீகாருக்கு ரயிலில் செல்லும் ரகசிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸார், விமானம் மூலம் பீகாருக்குச் சென்றனர். சுமார் 3 மணி நேரத்தில் பீகார், நாளந்தா மாவட்டத்துக்குள் நுழைந்தனர். அங்கு கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்காகக் காத்திருந்தனர். ஆனால், அவர்கள் வரவே இல்லை. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து விசாரித்தபோது, பீகாருக்கு போலீஸ் வந்ததை அறிந்த இருவரும் இடையில் பஸ்சில் ஏறி ஊருக்குள் சென்றுவிட்டனர். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீஸார் அவர்கள் இருவரையும் பிடிக்கப் பலவகைகளில் முயன்றனர்.

வேலைக்கு சேர்ந்த 5வது நாளில் முதலாளியைக் கொன்ற வடஇந்திய இளைஞர்கள்! - அம்பத்தூர் அதிர்ச்சி

இதன்பின்னர் பீகாரில் கிடைத்த நேரடி அனுபவத்தை நம்மிடம் விவரித்தனர் போலீஸ் டீமில் இருந்தவர்கள். `` பிரபாகரனைக் கொலை செய்த கையோடு அவரின் செல்போனைக் கொலையாளிகள் கொண்டு சென்றனர். செல்போன் சிக்னல் அடிப்படையில் அவர்கள் ரயிலில் செல்லும் தகவலை உறுதிப்படுத்தினோம். திடீரென அந்தச் செல்போன் சிக்னல் கிடைக்காமல் போனது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வருபவர்களின் சொந்தக் கிராமத்துக்குச் சென்றபோது தீரன் படத்தின் வரும் காட்சிகளைப் போல நிஜ சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தக் கிராமத்துக்கு செல்ல ஒரே ஒரு பஸ் மட்டுமே இருந்தது. 40 கி.மீட்டர் தூரத்துக்கு ஏடிஎம் கிடையாது. கடைகள் என்று குறிப்பிடும் வகையில் எதுவும் இல்லை. அங்கு சென்றபோது எங்களை அந்தக் கிராம மக்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். உடனே குதாகஞ்ச் போலீஸாரின் உதவியால் அங்கிருந்து திரும்பி வந்தோம்.

மாமனார், கொழுந்தன் கொலை; கணவர் மாயம்!- மாமியார் கடத்தலால் சென்னைப் போலீஸை மிரளவைத்த மேனகா

இதையடுத்து, அவர்கள் இருவரையும் தொடர்ந்து கண்காணித்துவந்தோம். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அந்த 2 பேரும் இரவு நேரத்தில் வேறு ஒரு கிராமத்துக்கு தப்பிச் செல்ல இருப்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் மடக்கிப்பிடித்து குதாகஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். இருவரையும் கைது செய்த தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் என்ன செய்வதென்று யோசித்தோம். அங்கு நடக்கும் ஒவ்வொரு தகவல்களையும் சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தோம்.

நிலைமை விபரீதமானதால், உயரதிகாரிகளின் கவனத்துக்குத் தகவல் கொண்டு செல்லப்பட்டது. உள்ளூர் போலீஸாரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்ததோடு, கிராம மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகே 2 பேரையும் சென்னைக்கு அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தனர். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் எந்தவித உணவும் கிடைக்கவில்லை. 5 நாள்களும் பானிபூரி, ஜிலேபி, சமோசா ஆகியவற்றை சாப்பிட்டு சமாளித்தோம். இந்தி தெரிந்த சப்-இன்ஸ்பெக்டர் முபாரக், திறம்படவும் சமயோசிதமாகவும் செயல்பட்டார்.

தீரன் படத்தின் வரும் காட்சிகளைப் போல நிஜ சம்பவங்களை சந்திக்க நேர்ந்தது. அந்தக் கிராமத்துக்கு ஒரே ஒரு பஸ் வசதி மட்டுமே இருந்தது. 40 கி.மீட்டர் தூரத்துக்கு எந்தக் கடையும் கிடையாது.
போலீஸ் டீம்

நாங்கள் பீகார் வந்த தகவலை சென்னையில் வேலை பார்க்கும் கொலையாளியின் உறவினர்தான் போன் மூலம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டோம். 2 பேரையும் பிடித்ததும் லோக்கல் போலீஸாரே ஒருகணம் ஆடிப்போய்விட்டார்கள். அந்தக் கிராமமே ஒருமாதிரி என்று கூறினார்கள். 5,000 ரூபாய் கொடுத்தால் அந்தக் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் சர்வசாதாரணமாகக் கிடைக்குமாம். முதலில் எங்களைத் துப்பாக்கி வாங்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் அந்தக் கிராம மக்கள் அணுகினார்கள். அதன்பிறகு தமிழ்நாட்டு போலீஸ் என்றதும் எஸ்கேப் ஆகி விட்டனர். கொஞ்சம் அசந்திருந்தால் அந்தக் கிராம மக்கள் எங்களைக் காலி செய்திருப்பார்கள்" என்கின்றனர்.

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட ரோசனும் 17 வயது சிறுவனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் ரோசனை நீதிமன்றத்துக்கும் 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

ரோசன்
ரோசன்

தீரன் படமும் ஒரு நிஜ சம்பவம்தான். அதைப்போல ஓர் அனுபவத்தை சென்னை போலீஸார் பீகாரில் சந்தித்துள்ளனர். 5 நாள்களாக மொழி தெரியாத இடத்தில் திறம்பட செயல்பட்டு பிரபாகரன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்களை போலீஸார் பிடித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை அறிந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு