Published:Updated:

`கிரெடிட்டில் குட்கா; அதிகாலையில் டெலிவரி' - ரகசிய பிசினஸ் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

எஸ்.மகேஷ்

சென்னை அபிராமபுரத்தில் அதிகாலை நேரத்தில் குட்காவை கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தவரை போலீஸார் ஸ்கெட்ச் போட்டு பிடித்தனர். அவர் அளித்த தகவலில் குட்கா குடோனிலிருந்து மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Gutka
Gutka

குட்கா ஊழலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இன்றுவரை காவல்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் குட்கா ஊழல் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. குட்கா, கஞ்சா, பான்மாசலா உட்பட போதைப் பொருள்களை விற்க தமிழகத்தில் தடை இருந்தபோதிலும் தங்கு தடையின்றி சென்னை முழுவதும் சப்ளை செய்யப்பட்டுவருகிறது.

DGP J.K. Tripathy  and A.K.Viswanathan
DGP J.K. Tripathy and A.K.Viswanathan

தமிழக டி.ஜி.பி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோரின் உத்தரவின்பேரில் தமிழகம், சென்னை முழுவதும் போதைப்பொருள்களை விற்பவர்களை போலீஸார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் 1,600 கிலோ எடையுள்ள குட்காவை அபிராமபுரம் போலீஸார் பிடித்துள்ளனர். குட்காவை சப்ளை செய்ததாக ராமநாதன், மதன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குட்கா கும்பலைப் பிடித்தது எப்படி என்று விசாரித்தோம். அபிராமபுரத்தில் குட்கா படுஜோராக விற்பனை நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், களமிறங்கியது கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சனின் தனிப்படை. அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, தலைமைக் காவலர் தங்கபாண்டி மற்றும் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் குட்காவை ஏற்றி வந்த லாரியுடன் ராமநாதன் சிக்கினார்.

Gutka
Gutka

இவர், குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். மணிமங்கலத்திலிருந்து குட்காவை சில்லறையாக வாங்கி வந்து அபிராமபுரம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ராமநாதன் சப்ளை செய்துவந்துள்ளார். அவரிடமிருந்து 200 கிலோ குட்கா மற்றும் லாரியைப் பறிமுதல் செய்தோம். அவர் அளித்த தகவலின்பேரில் சென்னைக்கு குட்கா சப்ளை செய்து வந்த மதனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ராமநாதன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குன்றத்தூர் சோமங்கலத்தைச் சேர்ந்த மதனை கைது செய்தோம். மதனுக்குத் தினமும் பெங்களூரிலிருந்து லாரி மூலம் குட்கா சப்ளை செய்யப்பட்டுவந்துள்ளது. குட்கா வைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அதை குடோனாக மதன் பயன்படுத்தி வந்துள்ளார். அங்கிருந்து 1,400 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

Gutka
Gutka

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அபிராமபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பதை உறுதி செய்ததும் அதை சப்ளை செய்பவர்களின் விவரங்களை ரகசியமாக சேகரித்தோம். அப்போதுதான் ராமநாதன் குறித்த தகவல் கிடைத்தது. தினமும் அதிகாலை நேரத்தில் ராமநாதன் குட்காவை கடைகளுக்கு டெலிவரி செய்ய மினிலாரியில் வரும் தகவல் தெரிந்தது. இதனால் தனிப்படை போலீஸார் ராமநாதன் வருகைக்காகக் காத்திருந்தனர். அப்போது ராமநாதன் சிக்கிக் கொண்டார்.

மேலும், மதனுக்கு குட்காவை பெங்களூரு போதைக் கும்பல் கடனுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெங்களூரு கும்பல் குறித்து விசாரணை நடந்துவருகிறது. இவர்கள் இருவர் மீதும் போதைத் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 70 மூட்டை, 2 அட்டைப் பெட்டிகள் அடங்கிய 1,600 கிலோ எடையுள்ள குட்கா, இரண்டு மினி லாரிகள், 75,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

"இன்னா  கலாய்க்கிறீயா... முகத்தைக் கிழிச்சிடுவேன்!'' - குட்கா 'ஸ்டிங் ஆபரேஷன்' அனுபவம்!

மதனும் ராமநாதனும் தங்களுக்கு உதவியாக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. ரகசியமாக குட்காவை கடைகளுக்கு சப்ளை செய்துவந்துள்ளனர். மினிலாரிகளை இவர்களே ஓட்டி வந்து குட்காவை கொடுத்துவிட்டு பணத்தையும் வாங்கிக் கொள்வார்கள். அபிராமபுரம் மட்டுமல்லாமல் சென்னையில் பல இடங்களுக்கும் மதன் குட்காவை சப்ளை செய்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே நேரத்தில் 1,600 கிலோ குட்கா சிக்கியுள்ளதால் மதனின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.