Published:Updated:

சென்னை: 3 கி.மீட்டர் பைக் சேஸிங்; செல்போன் திருடனைப் பிடித்த போலீஸ் எஸ்.ஐ! - என்ன நடந்தது?

செல்போன்கள்
செல்போன்கள்

சென்னையில் செல்போனைப் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய இளைஞர்களை, சினிமா படக் காட்சியைப்போல விரட்டிச் சென்று எஸ்.ஐ பிடித்தார்.

சென்னை மணலி புதுநகர், எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் ரவி (56). இவர் நேற்று காலை மாதவரம் மேம்பாலம் அருகில் பைக்கில் சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ரவியின் செல்போனை மின்னல் வேகத்தில் பறித்துக்கொண்டு தலைமறைவாகினர். செல்போனைப் பறித்துக்கொண்டு இளைஞர்கள் செல்வதை அதிர்ச்சியோடு பார்த்தபடி, `திருடன்... திருடன்’ என்று ரவி சத்தம் போட்டார்.

திருட்டு பைக்
திருட்டு பைக்

அதைக் கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்த மாதவரம் காவல் நிலைய எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷ், செல்போனைப் பறித்துவிட்டுச் சென்ற இளைஞர்களை பைக்கில் விரட்டினார். சாஸ்திரி நகர் மெயின் ரோட்டில் செல்போன் திருடர்களை மடக்கினார். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், பைக்கை ஓட்டிய இளைஞர், எஸ்.ஐ-யிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த அருண்ராஜ் (20) எனத் தெரிந்தது.

அவர் அளித்த தகவலின்படி தப்பி ஓடியவர் நவீன்குமார் (23), மார்த்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 11 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அருண்ராஜ், அவரின் கூட்டாளி நவீன்குமார் இருவருடனும் சேர்ந்து ராயபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்பவரும் செல்போன் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

கைதான அருண்ராஜ், நவீன்குமார் இருவரும் 27-ம் தேதி காலையில் வடக்குக் கடற்கரை காவல் நிலைய எல்லைப் பகுதியிலும், ராயபுரம் காவல் எல்லைப் பகுதியிலும், மாதவரம் பகுதியில் இரண்டு இடங்களிலும் என நான்கு பேரிடம் தொடர்ந்து ஒரே நாளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அருண்ராஜ் மீது வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட ஒன்பது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. செல்போனைப் பறித்துவிட்டுத் தப்பிய அருண்ராஜை துணிச்சலாகப் போராடிப் பிடித்த எஸ்.ஐ- ஆண்டலின் ரமேஷின் சிசிடிவி வீடியோ வைரலாகப் பரவியது. அதைப் பார்த்த சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதைப் பதிவு செய்து எஸ்.ஐ-க்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் கமிஷனர் தெரிவித்தார்.

எஸ்.ஐ ஆண்டலின் ரமேஷிடம் பேசினோம். ``சம்பவத்தன்று நான் பைக்கில் மாதவரம் காவல் நிலையப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வேகமாக பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றனர். அதைப் பார்த்ததும் எனக்குச் சந்தேகம் வந்தது. அந்தச் சமயத்தில் ஒருவர், `செல்போனை திருடிக்கொண்டு செல்கிறார்கள்’ என்று கூறியபடி இளைஞர்களை விரட்டிக்கொண்டு வந்தார். உடனே, நான் அந்த இளைஞர்களை பைக்கில் விரட்டினேன். 3 கி.மீட்டர் தூரம் அந்த பைக்கை விரட்டிப் பிடித்தேன்.

எஸ். ஐ - ரமேஷைப் பாராட்டும் கமிஷனர்
எஸ். ஐ - ரமேஷைப் பாராட்டும் கமிஷனர்
டெல்லி: `நம்பர் பிளேட் இல்லாத கார்; பெண்களிடம் அத்துமீறல்!’ போக்சோவில் கைதான போலீஸ் எஸ்.ஐ

அதை சிசிடிவியில் பார்த்திருப்பீர்கள். பைக்கை ஓட்டியவர் மட்டுமே என்னிடம் சிக்கினார். இன்னொருவர் தப்பிவிட்டார். செல்போன் திருடப்படுவது சாதாரண விஷயமல்ல. செல்போனுக்குள் தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். செல்போன் திருடன் சிக்கியதும் அவரிடம் விசாரித்தபோதுதான் செல்போன் திருட்டுக் கும்பல் குறித்த முழுத் தகவல்கள் தெரியவந்தன. என்னிடம் சிக்கிய செல்போன் திருடன் அருண்ராஜ், அந்தப் பகுதியிலுள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் டீம் அந்த லாட்ஜுக்குச் சென்றது. அப்போது தப்பி ஓடிய அருண்ராஜின் கூட்டாளி நவீன்குமார் அங்கு வந்தார். அப்போது அவரையும் பிடித்தோம்.

நவீன்குமார், கல்லூரியில் படித்துவருகிறார். இவர்களின் கூட்டாளி விக்னேஷையும் கைதுசெய்திருக்கிறோம். சிசிடிவி கேமரா மூலம் தங்களைப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி வந்திருக்கின்றனர். திருடிய செல்போன்களை நண்பர்களிடமே விற்றுவந்திருக்கின்றனர். அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் பூக்கடை ப்பகுதியில் திருடப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு