Published:Updated:

சென்னை: `நான் தற்கொலை செய்யப்போகிறேன்' - மனைவிக்கு போன் செய்துவிட்டு உயிரை மாய்த்த போலீஸ் எஸ்.ஐ

தற்கொலை செய்த எஸ்.ஐ நரசிம்மமூர்த்தி
தற்கொலை செய்த எஸ்.ஐ நரசிம்மமூர்த்தி

சென்னையில் மனைவிக்கு போன் செய்த சப்-இன்ஸ்பெக்டர், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு தூக்கில் தொங்கியிருக்கிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்திலுள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி (58). இவரின் மனைவியும் குடும்பத்தினரும் சென்னை, அயப்பாக்கத்தில் தங்கியிருக்கிறார்கள். மனைவியிடம் செல்போனில் பேசிய நரசிம்மமூர்த்தி, நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மனைவி, உறவினர்களோடு அயப்பாக்கத்திலிருந்து கீழ்ப்பாக்கத்துக்கு வந்திருக்கிறர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. பின்னர், இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை
தற்கொலை
representational image

போலீஸார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது நரசிம்மமூர்த்தி, தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அவரைக் கீழே இறக்கிய போலீஸார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

நரசிம்மமூர்த்தி, சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்திருக்கிறார். இவரின் குடும்பம் சென்னை அயப்பாக்கத்தில் குடியிருந்தது. கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் நரசிம்மமூர்த்திக்கு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக நரசிம்மமூர்த்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். உடல்நலம் பாதிப்பு காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

தற்கொலை
தற்கொலை
Vikatan

இதற்கிடையில் நரசிம்மமூர்த்தி மரணத்துக்கு இன்னொரு காரணம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நரசிம்மமூர்த்தி சிகிச்சை பெற்றபோது, இனிமேல் மது அருந்தாதீர்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், நரசிம்மமூர்த்தி, மீண்டும் மது அருந்தியிருக்கிறார். அதைக் குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். அதுவும் அவரின் தற்கொலை முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு