Published:Updated:

சென்னை: நகைக்கடையில் ரூ.5 லட்சத்தைத் திருடிய காவலர்கள்! - சிக்கவைத்த சிசிடிவி

பணம்
பணம்

சென்னை பூக்கடைப் பகுதியில் நகைக்கடையில் விசாரணை நடத்தச் சென்ற போலீஸ்காரர்கள், அங்கிருந்து ரூ.5 லட்சத்தைத் திருடியது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டதால், அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது, கொரோனா ஊரடங்கையொட்டி நகைக்கடைகள் திறக்க அனுமதியில்லை. சென்னை பூக்கடை என்.எஸ்.சி.போஸ் சாலையிலுள்ள நகைக்கடை திறந்திருப்பதாக பூக்கடை காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாக காவலர்கள் சர்ஜுன், முஜிப்ரகுமான் ஆகியோர் சம்பந்தப்பட்ட நகைக்கடைக்குச் சென்றனர். அங்கு நகைக்கடையின் கதவு பாதி திறக்கப்பட்டிருந்தது. உடனே காவலர்கள், நகைக்கடைக்குள் சென்றனர். அப்போது கடைக்குள் ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர்.

போலீஸ்
போலீஸ்

அதைப் பார்த்த காவலர்கள், `ஊரடங்கு நேரத்தில் எப்படி நீங்கள் கடையைத் திறக்கலாம்?’ எனக் கேள்வி கேட்டனர். அதற்குக் கடை ஊழியர்கள், `விற்பனை செய்யவில்லை, பணத்தை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்’ என்று பதிலளித்தனர். கடையை மூடும்படி காவலர்கள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். காவலர்கள் சென்ற பிறகு ஊழியர்கள் பணத்தை எண்ணிப் பார்த்தபோது 5 லட்சம் ரூபாய் மாயமாகியிருப்பது தெரியவந்தது. அது குறித்து கடையின் உரிமையாளரிடம் ஊழியர்கள் கூறினர்.

சென்னை: சிறார் வன்கொடுமை... 14 வயது சிறுமியைத் தாயாக்கிய இளைஞர்; போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது காவலர்கள் இருவரும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுக்களில் சிலவற்றைத் தங்களின் பேன்ட் பாக்கெட்களில் வைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக கடையின் உரிமையாளரிடம் இந்தத் தகவலை ஊழியர்கள் தெரிவித்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர், சிசிடிவி பதிவுகளோடு போலீஸ் உயரதிகாரிகளைச் சந்தித்து விவரத்தைக் கூறினார்.

சிசிடிவி
சிசிடிவி
representational image

சிசிடிவி காட்சிகளைப் பார்த்த உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட பூக்கடை காவல் நிலைய காவலர்கள் சர்ஜுன், முஜிப் ரகுமான் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். முதலில் பணத்தை எடுக்கவில்லை என அவர்கள் இருவரும் கூறினர். சிசிடிவி காட்சிகளைக் காண்பித்த பிறகு பணத்தைத் திருடியதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

விசாரணைக்குச் சென்ற இடத்தில் காவலர்கள் பணத்தைத் திருடிய சம்பவம் பூக்கடைப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு