Published:Updated:

ஹரியானாவில் தமிழக தனிப்படை போலீஸாரின் ஸ்கெட்ச்! -ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் சிக்கியது எப்படி?

எஸ்.பி.ஐ ஏடிஎம்
எஸ்.பி.ஐ ஏடிஎம்

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பலின் தலைவன் சௌகத்அலி எப்படி சிக்கினான் என்ற தகவலை தனிப்படை போலீஸார் நம்மிடம் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ, ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளை நடந்தது. இதுதொடர்பாக வங்கியின் மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து புகாரளித்தார். அதன்அடிப்படையில் கூடுதல் கமிஷனர் (தெற்கு) கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் நரேந்திரநாயர், துணை கமிஷனர் ஹரிகிரன்பிரசாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் குறித்து தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். செல்போன் சிக்னல், வாகன நம்பர்களின் பதிவு, சென்னையில் தங்கியிருந்த இடம் ஆகியவை அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் உள்ள பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

வீரேந்திர ராவத்
வீரேந்திர ராவத்

கடந்த 23.6.2021-ம் தேதி ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லப்கர்க் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷை போலீஸார் கைது செய்தனர். அவன் அளித்த தகவலின்படி 27.6.2021-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (23) என்பவனை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நஜிம் உசேனை கடந்த 29.6.2021-ம் தேதி கைது செய்தனர். அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத் ஆகியோரை போலீஸார், காவலில் எடுத்து விசாரித்தபோது கொள்ளைக் கும்பலின் தலைவன் சௌகத் அலி என்பவனைப் பற்றிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சௌகத் அலியைப் பிடிக்க போலீஸார் ஹரியானாவிலேயே முகாமிட்டனர். பல்லப்கர்க் பகுதியில் குடியிருக்கும் பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதுண்டு. அதனால் அந்தப்பகுதிக்கு உள்ளூர் போலீஸார் கூட செல்ல தயக்கம் காட்டுவதுண்டு. அதனால் சென்னைப் போலீஸார், பல்லப்கர்க் பகுதிக்குள் செல்லாமல் பானிபூரி வியாபாரிகளைப் போல அங்கேயே காத்திருந்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கொள்ளைக் கும்பலின் தலைவன் சௌகத் அலி தலைமறைவாகவே இருந்தான். இதையடுத்து தனிப்படை போலீஸார் அவனை பிடிக்க வியூகம் அமைத்தனர்.

சென்னை: `ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார்?!’ - நடித்துக் காட்டியதை வீடியோ எடுத்த போலீஸ்
ஏடிஎம்  கொள்ளை
ஏடிஎம் கொள்ளை

ஹரியானாவிலிருந்து சென்னைப் போலீஸார் தமிழகத்துக்கு திரும்பிச் சென்று விட்டதாக பொய்யான தகவலைப் பல்லப்கர்க் பகுதியில் பரப்பினர். அதைப்போல ஒரு சில போலீஸார் அங்கிருந்து புறப்பட்டு தமிழகத்துக்கு வந்தனர். ஆனால் தனிப்படையில் உள்ள சில போலீஸார் ஹரியானா, பல்லப்கர்க் பகுதியில் மப்டியில் கண்காணித்தனர். தனிப்படை போலீஸாரின் தகவலை உண்மையென நம்பிய சௌகத் அலி, பல்லப்கர்க் பகுதியிலிருந்து வெளியில் வந்தான். அதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்த போலீஸார் லோக்கல் போலீஸாரின் உதவியோடு சௌகத் அலியைப் பிடித்தனர். அவனிடம் விசாரித்தபோது சௌகத் அலி தலைமையில்தான் தமிழகத்துக்கு கொள்ளைக் கும்பல் வந்தது தெரியவந்தது.

சௌகத் அலி தலைமையில் சென்னைக்கு விமானம், காரில் வந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தைக் கொள்ளையடித்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுள்ளனர். சௌகத்அலிதான் நூதன முறையில் எஸ்.பி.ஐ வங்கியில் உள்ள பணம் டெபாசிட் இயந்திரத்தில் உள்ள குறைப்பாட்டை தெரிந்துக் கொண்டு கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறான். இவன்தான் இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு பணத்தை எப்படி எடுப்பது என பயிற்சி அளித்திருக்கிறான். படித்தவர்கள் மட்டுமே பணத்தைக் கொள்ளையடிப்பார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இதற்காக குழுக்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் இருந்திருக்கின்றனர்.

கமிஷனர் சங்கர் ஜிவால்
கமிஷனர் சங்கர் ஜிவால்

பிளம்பர் வேலைப்பார்த்த வீரேந்திர ராவத்தை பைக் ஓட்ட சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறது கொள்ளைக் கும்பல். இதற்காக அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என பேரம் பேசப்பட்டிருக்கிறது. பைக் ஓட்டுவதில் கில்லாடியான வீரேந்திர ராவத்தும் சென்னையில் உள்ள முட்டுச்சந்துக்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் அசூர வேகத்தில் பைக்கை ஓட்டியிருக்கிறான். அதற்காக அவனுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பணத்தை எடுப்பவர்களுக்கு மட்டும் சௌகத்அலி கொள்ளையடித்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கிறான். சௌகத்அலியை போலீஸ் காவலில் எடுத்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர். சௌகத் அலியிடம் வழக்கு தொடர்பாக விசாரித்தபோது `குற்றச் செயலில் ஈடுபட்டு போலீஸார் பிடித்தால் ஒரு சில மாதங்கள் ஜெயிலில் இருப்போம். அடுத்து வக்கீல் மூலம் பெயில் வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றுவிடுவோம்' என கூலாக பதிலளித்தாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வழக்கை திறம்பட விசாரித்த கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையிலான டீம்மை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு