சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், 14.1.2021-ம் தேதி முதல்நிலைக் காவலர் உத்திரகுமாரன் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராக கடந்த 1.2.2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்து, தற்போது கொடுங்கையூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு பிரிவில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறேன். 13.1.2021-ம் தேதி இரவு 9 மணி முதல் 14.1.2021-ம் தேதி காலை 7 மணி வரை எம்.ஆர்.நகர் சந்திப்பு என்ற இடத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அரசு பிறப்பித்துள்ள இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து, குற்றம் எதுவும் நடைபெறவாத வகையில் ரோந்து வாகனப் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனி, டிரைவர் சத்தியராஜ், ஆயுதப்படை காவலர்கள் லாவண்யா, நந்தினி ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம்.
அப்போது 13.1.2021-ம் தேதி இரவு 11:15 மணியளவில் முகக்கவசம் அணியாமல் எம்.ஆர்.நகர் சந்திப்பு வழியாக சைக்கிளில் வந்துகொண்டிருந்த, பின்னர் பெயர் விவரம் கேட்டுத் தெரிந்துகொண்ட அப்துல் ரஹீம் என்பவரை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி, முகக்கவசம் அணியாமலும், ஊரடங்கு நேரத்தில் சுற்றி வருவது பற்றியும் கேட்டபோது, அப்துல் ரஹீம் பெண் காவலர்களிடம் வாக்குவாதம் செய்ததைக் கண்ட நானும் சப் இன்ஸ்பெக்டர் பழனியும் அப்துல்ரஹீமிடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் உரிய காரணம் இன்றி முகக்கவசம் அணியாமல் சுற்றிவருவது குற்றம். எனவே, முகக்கவசம் அணியாமல் இருப்பதால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் மேற்படி பணத்தைக் கட்டிவிட்டு செல்லுமாறு சொன்னபோது, அப்துல் ரஹீம், `நான் ஜனங்க கூட்டம் இல்லை என்பதால்தான் மாஸ்க் போடாமல் வருகிறேன். நான் எதற்குப் பணம் கட்டணும்... நீங்க எல்லாம் படிச்சுட்டு வந்தாத்தானே உங்களுக்குத் தெரியும்... ஒரு குற்றவாளியைக்கூட பிடிக்க மாட்டீங்க... எங்களை மட்டும் உடனே பிடிச்சுடுவீங்க. நான் பணம் கட்ட முடியாது! மரியாதையா விடுங்கடா... இல்லை உங்கள சும்மா விட மாட்டேன்” என்று சொல்லி அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் அப்துல் ரஹீமை ரோந்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு 11:30 மணியளவில் கொண்டு வந்தபோது கீழே இறங்கிய அப்துல் ரஹீம் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது எதிர்பாராத வகையில் என் இடது பக்கம் கன்னம் மற்றும் காதிலும் சரமாரியாகக் கையால் தாக்கிவிட்டு, `என்னை விடலை... உங்கள சாவ அடிச்சுடுவேன்’ என்று சொல்லி ரகளையில் ஈடுபட்டார். உடனே அப்துல் ரஹீமை போலீஸார் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அப்துல் ரஹீம் தாக்கியதில் எனது இடது பக்கக் காது சரிவரக் கேட்காமலும், மேலும் தலைசுற்றலும், வாந்தியும் ஏற்பட்டதால் சப்இன்ஸ்பெக்டர் பழனிக்கு தகவல் தெரிவித்தேன். பின்னர் காவல் நிலையத்திலிருந்த காவலர் கலையரசன் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தேன்.
எனவே, என்னைத் தகாத வார்தைகளால் திட்டி, எனது அரசுப் பணியைச் சரிவரச் செய்யவிடாமல் தடுத்து, கையால் தாக்கி மிரட்டிய அப்துல் ரஹீம் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜன் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341, 294 பி, 353, 332, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அப்துல் ரஹீமைக் கைதுசெய்தார். விசாரணையில் அப்துல் ரஹீம் சட்டக் கல்லூரி மாணவன் என்று தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான அப்துல் ரஹீம், தன்னை விடிய விடிய சரமாரியாகத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், முகக்கவசம் அணிந்துவந்த தன்னை முகக்கவசம் அணியவில்லை எனக் கூறி அபராதம் கேட்டதாகவும் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தார். மேலும் காவலர்கள் பூட்ஸ் காலால் மோசமாகத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்த இணை கமிஷனர் ராஜேஸ்வரிக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து இணை கமிஷனர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். இதையடுத்து அப்துல் ரஹீமை தாக்கிய போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மாணவன் அப்துல் ரஹீம், போலீஸார் தன்னைக் கழிவறையைச் சுத்தம் செய்யக் கூறியதாகவும், காவலர்களின் ஷூவை சுத்தம் செய்யச் சொன்னதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை போலீஸ் உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.