சென்னை: தாய் ஓட்டுப்போடச் சென்ற நேரம்... விபரீத முடிவை எடுத்த கர்ப்பிணி மகள்!

சென்னை, வேளச்சேரியில் ஓட்டுப்போட தாய் சென்ற நேரத்தில் தனியாக இருந்த கர்ப்பிணி மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நீலவேணி (60) இவரின் கணவர் கார்த்திகேயன். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நீலவேணிக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். நீலவேணியின் மூன்றாவது மகள் ஷோபனா. இவருக்கும் வேளச்சேரி விஜயநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கும் 23.8.2020-ல் திருமணம் நடந்தது. தற்போது ஷோபனா, 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

அதனால் தாய் வீட்டிலும் கணவர் வீட்டிலும் மாறி, மாறி ஷோபனா தங்கியிருந்தார். இந்தச் சமயத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷோபனா, தாய் வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். அதைப் பார்த்த நீலவேணி, ஷோபனாவைக் கண்டித்ததோடு மகளுக்கு அறிவுரைகள் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு ஷோபனா அமைதியாக இருந்துவந்தார். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி நீலவேணி, ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது ஷோபனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
ஓட்டுப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்த நீலவேணி, நீண்டநேரம் கதவைத் தட்டியும் ஷோபனா திறக்கவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து நீலவேணி உள்ளே சென்றார். அப்போது படுக்கையறையில் ஷோபனா, துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீலவேணி கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ஷோபனாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஷோபனா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷோபனாவின் சடலத்தை மீட்ட வேளச்சேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக நீலவேணி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ கனகராஜ் வழக்கு பதிவு செய்து ஷோபனாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்துவருகிறார். நீலவேணியிடம் விசாரித்தபோது ஷோபனாவின் கணவர் வீட்டில் எந்தவிதக் கொடுமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதனால் ஷோபனாவின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
திருமணமாகி எட்டு மாதங்களுக்குள் கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.