Election bannerElection banner
Published:Updated:

சென்னை: அருள்வாக்கு சாமியாருக்குக் கத்திக்குத்து; மனைவி மாயமானதால் கணவர் வெறிச்செயல்!

சாமியார் ராஜேந்திரன்
சாமியார் ராஜேந்திரன்

சென்னையில் மனைவி மாயமானதால், அருள்வாக்கு சாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை அருகேயுள்ள மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி என்ற பெயரில் கோயில்வைத்து பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லிவருகிறார். சாமியார் ராஜேந்திரனிடம் அருள்வாக்குப் பெற ஏராளமானவர்கள் வந்து செல்வதுண்டு. இந்தநிலையில் ராஜேந்திரனை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருமலை (38) என்பவர் கத்தியால் குத்தினார்.

சாமியார் ராஜேந்திரன்
சாமியார் ராஜேந்திரன்

ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திருமலை ஆத்திரத்தோடு மறுபடியும் ராஜேந்திரனைக் கத்தியால் குத்த முயன்றார். அதைப் பார்த்த பொதுமக்கள் திருமலையை மடக்கிப் பிடித்தனர். அவரின் கையிலிருந்த கத்தியையும் பறித்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து திருமலைக்கு தர்ம அடி கொடுத்து, அவரை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காயமடைந்த சாமியார் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. `ராஜேந்திரனை ஏன் கத்தியால் குத்தினாய்?’ என மதுரவாயல் போலீஸார் திருமலையிடம் விசாரித்தபோது அவர் கூறிய பதிலைக் கேட்டு போலீஸார் திகைத்துப்போனார்கள்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த திருமலை, டைல்ஸ் ஓட்டும் வேலை செய்துவருகிறார். மதுவுக்கு அடிமையான திருமலை, அவரின் மனைவியை அடித்துத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

திருமலை
திருமலை

அதனால் திருமலையிடம் கோபித்துக்கொண்ட அவரின் மனைவி வீட்டைவிட்டு வெளியில் சென்று உறவினர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். அப்போது திருமலையின் மனைவியிடம், `உன்னோட குடும்ப பிரச்னைக்கு சாமியார் ராஜேந்திரனிடம் அருள்வாக்கு கேட்கலாம்’ என ஓர் உறவினர் கூறியிருக்கிறார். அதன்படி திருமலையின் மனைவியும், அவரின் உறவினரும் சாமியார் ராஜேந்திரனைச் சந்தித்து பிரச்னைகளைக் கூறியிருக்கின்றனர். அப்போது ராஜேந்திரன் திருமலையின் மனைவிக்கு அருள்வாக்கு கூறியிருக்கிறார். சாமியார் ராஜேந்திரனின் அருள்வாக்கு காரணமாகத்தான் மனைவி தன்னைப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கருதிய திருமலை, ஆத்திரத்தில் ராஜேந்திரனைக் கத்தியால் குத்தியிருக்கிறார். அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு