Published:Updated:

`டிபன் கடை' நட்பு; மனைவிக்குத் தொந்தரவு! -டிரைவர் கொலையில் சிக்கிய தனியார் நிறுவன மேலாளர்

மனைவிக்குத் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரின் தலையைத் துண்டித்த தனியார் நிறுவனத்தின் மேலாளர், அவரின் மனைவி மற்றும் நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுரேஷ்
சுரேஷ்

சென்னை பாடி கலைவாணர் நகரில் தனது தாயார் கலாவுடன் வசித்து வந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவரான இவர் மீது கொலை உட்பட சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுரேஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. `சவாரிக்கு மகன் சென்றிருக்கலாம்' என்று நினைத்த அவரது தாயார், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மகனைக் காணவில்லை என்று கொரட்டூர் காவல்நிலையில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கொரட்டூர் காவல் நிலையம்
கொரட்டூர் காவல் நிலையம்

அப்போது, சுரேஷ் கடைசியாக பாடி கலைவாணர் நகரில் வசித்து வரும் ஜெயக்கொடி என்பவரின் வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்துப் போலீஸார் விசாரணை செய்தபோது, சுரேஷின் தலையைத் துண்டித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஜெயக்கொடி, அவரின் மனைவி மற்றும் நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுரேஷின் தலை மற்றும் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ் கொல்லப்பட்டது குறித்து போலீஸார் கூறுகையில், ``பாடி கலைவாணர் நகரில் வசித்து வரும் ஜெயக்கொடி என்பவர், கார்த்திகாவை காதல் திருமணம் செய்துள்ளார். தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ஜெயக்கொடி. இவரின் மனைவி கார்த்திகா அங்குள்ள பகுதியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். அதன் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட்டில் தான் சுரேஷ் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கார்த்திகா கடையில் அடிக்கடி டிபன் சாப்பிட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

இந்தப் பழக்கம் நீண்ட நாள்களாக தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் சுரேஷின் உறவைத் துண்டித்துள்ளார் கார்த்திகா. ஆனால், சுரேஷ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து தனது கணவர் ஜெயக்கொடியிடம் கார்த்திகா கூறியுள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் சுரேஷ், கார்த்திகா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது கையைப் பிடித்து தவறான முறையில் நடக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்து வீட்டில் இருந்த ஜெயக்கொடி அதிர்ச்சியடைந்ததோடு, ஆவேசத்தில் சுரேஷைத் தடியால் அடித்துள்ளார்.

மயங்கி விழுந்த சுரேஷை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளார். ஏற்கெனவே சுரேஷைக் கொல்வதற்கும் ஜெயக்கொடி திட்டம் போட்டுள்ளார். இதற்காக அவரின் நண்பர்களான காவாங்கரையைச் சேர்ந்த ராஜா (23), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரகாண்டன் (21) ஆகியோரை காரில் வரவழைத்துள்ளார். மயக்க நிலையில் ஆட்டோவில் இருந்த சுரேஷை காரில் ஏற்றி செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மயக்க நிலையிலேயே சுரேஷை கடுமையாகத் தாக்கியதோடு, அவரது தலையைக் கத்தியால் துண்டித்துள்ளனர்.

`காதல் ஜோடிகள்தான் எங்களின் டார்கெட்'- அதிரவைக்கும் கொள்ளைக் கும்பல் தலைவனின் வாக்குமூலம்!

உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசியுள்ளனர். தலையை அங்குள்ள கால்வாயில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். உடலை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றினோம். தலையை நேற்று காலை கண்டுபிடித்தோம். உடல் பாகங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளோம். இந்தக் கொலை வழக்கில் ஜெயக்கொடி, அவரின் மனைவி கார்த்திகா, உடந்தையாக இருந்த நண்பர்கள் என 4 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்கின்றனர்.