Published:Updated:

`திருடுவது யாருக்குமே தெரியாது; ஆனால்?!'-57 வழக்குகளில் சிக்கிய இளம்பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருட்டு வழக்கில் சிக்கிய இளம்பெண்  தேவி
திருட்டு வழக்கில் சிக்கிய இளம்பெண் தேவி

`நான் திருடி என்பது என்னுடைய சொந்த ஊரில் யாருக்கும் தெரியாது' என்று 57 திருட்டு வழக்கில் சிக்கிய இளம்பெண் தேவி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்துவந்தன. இதுகுறித்து எழும்பூர் ரயில்வே போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. டி.எஸ்.பி. எட்வர்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மகுமாரி, கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணிகண்டன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் உட்பட முக்கிய ரயில்நிலையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்
பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்

எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக போலீஸார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்தான் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர் என்று தெரிந்தது. அவரைப் பிடித்த போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``எங்களிடம் சிக்கிய பெண்ணின் பெயர் தேவி (24). வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பாபுநகரைச் சேர்ந்தவர். இவர் மீது எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் 17 வழக்குகளும் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் 16 வழக்குகளும் செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் உள்ளன. இவை தவிர மேலும் இரண்டு முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கு உட்பட மொத்தம் 57 திருட்டு வழக்குகள் உள்ளன. இதில் 43 வழக்குகள் நகை திருட்டு வழக்குகள். தேவியிடமிருந்து 70 சவரன் தங்க நகைகள், 77,500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

தேவி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ``என்னுடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை. கணவர் பெயர் ஏழுமலை. எனக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. என் கணவர் வேலைக்குச் செல்ல மாட்டார். இதனால் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் தவித்தேன். நான் படிக்கவில்லை. கையெழுத்துகூட போடத் தெரியாது. இதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை தேடி பல இடங்களுக்குச் சென்றேன்.

பறிமுதல் செய்த நகைகளை அடுக்கி வைக்கும் போலீஸார்
பறிமுதல் செய்த நகைகளை அடுக்கி வைக்கும் போலீஸார்

இந்தச் சமயத்தில்தான் வறுமை காரணமாக வேலூரிலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி ரயிலில் வந்தேன். அப்போது, நான் வந்த ரயிலில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் அணிந்த தங்க நகைகளைக் கழற்றினேன். அந்த நகைகளை விற்று சாப்பிட்டோம். அதன்பிறகு ரயிலில் திருட ஆரம்பித்தேன். தினமும் வேலைக்குச் செல்வது போல வீட்டிலிருந்து ரயிலில் சென்னைக்கு வருவேன். கூட்டமாக இருக்கும் ரயில் பெட்டியில்தான் ஏறுவேன். பயணிகள் பேசுவதை கவனமாகக் கேட்பேன். அதை வைத்தே அவர்களின் பொருளாதாரத்தைக் கணக்கிட்டுத் திருடுவேன்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் நகை, பணம், செல்போன் எனத் திருடி அதை உடனே விற்றுவிடுவேன். சில நேரங்களில் திருடும்போது சிக்கியிருக்கிறேன். முதல்தடவை காவல் நிலையத்துக்குச் சென்றபோதுதான் அவமானமாக இருந்தது. அதன்பிறகு அந்த வாழ்க்கை எனக்குப் பழகிபோய்விட்டது. திருட்டு வழக்கில் சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வந்து திருடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

திருடிய நகை, பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்தேன். குழந்தையை என் கணவர் கவனித்துக் கொள்வார். காலையில் டிப்டாப்பாக வேலூரிலிருந்து புறப்பட்டு சென்னை மாம்பலத்துக்கு ரயிலில் செல்வேன். ரயிலில் வரும்போதே அன்றைக்கு யாரிடம் திருட வேண்டும் என்பதை டார்கெட் செய்துவிடுவேன். அவர்களைப்பின் தொடர்ந்துசென்று கைவரிசை காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். இரவு நேரமானால் அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கிவிடுவேன்.

தேவி
தேவி

கையில் பணம் வந்ததும் என் வாழ்க்கையும் மாறிவிட்டது. வித விதமாக டிரஸ் போடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் டி.வி சீரியல்கள், சினிமா நடிகைகள் அணியும் டிரஸ்களை எவ்வளவு விலை என்றாலும் வாங்கிவிடுவேன். அந்த டிரஸ் போட்டுக்கொண்டு வரும்போது என் மீது யாருக்கும் சந்தேகம் வராது. நான் திருட்டுத் தொழில் செய்வது எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது. சென்னையில் வேலை பார்ப்பதால் கைநிறைய சம்பளம் என்றுதான் அவர்கள் நம்பி வந்தனர். ஆனால், போலீஸார் என்னைப் பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.

சொந்த ஊரில் பங்களா டைப் கொண்ட வீட்டில் தேவி குடியிருந்துவருகிறார். அந்த வீடு தொடர்பாகவும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் ரயில்வே தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு