Published:Updated:

ஜன்னல் வழியே டார்ச் வெளிச்சம்... திசை மாறும் கேமரா!- சென்னைவாசிகளை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்

சென்னையில் போரூர் பகுதியில் சுற்றித் திரியும் முகமூடிக் கொள்ளையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் கடந்த சில நாள்களாக திசை மாறி இருந்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள் காலை இதைச் சரிசெய்து வைத்தால் மீண்டும் அடுத்தநாள் காலையில் திசை மாறி கேமராக்கள் இருந்துள்ளது. இது தொடர்ந்ததால் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமராவில் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நள்ளிரவில் முகத்தை மறைத்தபடி அரை நிர்வாண ஆடையில் மர்ம நபர் ஒருவர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வரும் நபர் கையில் இருக்கும் டார்ச் லைட்டைக் கொண்டு வீட்டினுள் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை நோட்டமிடுகிறார். குடியிருப்புகளுக்குள் நுழைந்ததும் சிசிடிவி கேமராவைதான் அவரது கண்கள் தேடுகிறது. தன்னுடன் கொண்டுவந்த கட்டையைக் கொண்டு சிசிடிவி கேமராவை மேல் நோக்கி பார்க்கும்படி திருப்பிவிடுகிறார். கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடியிருப்புகளுக்குள் சுற்றுகிறார். வீட்டின் ஜன்னல் கதவுகள் வழியாக டார்ச்லைட் அடித்து ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை சோதனை செய்கிறார்.

அவரின் இரு கைகளிலும் கையுறை அணிந்துள்ளார். கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒருவர் நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள் வரும் காட்சிகளைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி கேமரா பதிவில் தாங்கள் கண்ட காட்சிகளை வளசரவாக்கம் போலீஸாரிடம் விவரித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

மேலும், இந்தப் பகுதி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடாததே இதுபோன்ற மர்மநபர் நோட்டம் விடுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தங்கள் பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள் நுழையும் கொள்ளையனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.