Published:Updated:

`நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்தினார்!' - சாப்பிடும்போது கொல்லப்பட்ட சென்னை ரவுடி

வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ரவுடி அறிவழகனை 2 பேர் சரமாரியாகக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

அறிவழகன்
அறிவழகன்

சென்னை, திருவல்லிக்கேணி, பாரதி சாலை, மாட்டான்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மகன் அறிவழகன் (24). இவரின் பெயர் ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டில் உள்ளது. வேலைக்கு எங்கும் செல்லாமல் அந்தப் பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார் அறிவழகன். ரவுடி `பல்பு' குமார் கொலையில் அறிவழகன் முக்கிய நபர்கிறது.

இந்தநிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக அமர்ந்து அறிவழகன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் கத்தி, அரிவாளுடன் 2 பேர் உள்ளே நுழைந்தனர். சாப்பிட்டுக் கொண்டிருந்த அறிவழகனின் கை, கால், தலை, முகம் என உடல் முழுவதையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். சிறிய வீடு என்பதால் அறிவழகனால் தப்பிச் செல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

`நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்தினார்!' - சாப்பிடும்போது கொல்லப்பட்ட சென்னை ரவுடி

அறிவழகனின் அலறல் சத்தம் கேட்டு அவரின் உறவினர்கள் வந்தனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு, அறிவழகனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரத்தில், கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அறிவழகன் கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு அறிவழகனுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் ஆடையை அறிவழகன் கிழித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

murder
murder

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் மகன்கள்தான் அறிவழகனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. தற்போது அந்தப் பெண் மற்றும் அவரின் மகன்கள் தலைமறைவாகிவிட்டதால் அவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் மட்டுமே அறிவழகன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``ரவுடி அறிவழகன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரவுடி பல்பு குமார் கொலை வழக்கில் அறிவழகனை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் பழிக்குப்பழிவாங்க அறிவழகனை பல்பு குமாரின் கூட்டாளிகள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆரம்பத்தில் விசாரணை நடத்தினோம். தற்போது பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் அறிவழகன் கொலை செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். விரைவில் அறிவழகனை கொலை செய்தவர்களைப் பிடித்துவிடுவோம்" என்றார்.

`நடுரோட்டில் பெண்ணை அவமானப்படுத்தினார்!' - சாப்பிடும்போது கொல்லப்பட்ட சென்னை ரவுடி

ரவுடி அறிவழகன் கொலை செய்யப்படும்போது அவரின் குடும்பத்தினர் அருகில்தான் இருந்துள்ளனர். அறிவழகனின் சத்தம் கேட்டு அவர்கள் வீட்டுக்குள் வருவதற்குள் கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டதாக போலீஸாரிடம் அறிவழகனின் உறவினர்கள் கூறியுள்ளனர்.