Published:Updated:

இட்லி, சாம்பார் நட்பு; 100 தடவை போன் கால்!-தலையைத் துண்டித்துக் கொல்லப்பட்ட ரவுடியின் பகீர் பின்னணி

ரவுடி கொலை வழக்கில் கைதான அம்மு என்கிற கார்த்திகா
ரவுடி கொலை வழக்கில் கைதான அம்மு என்கிற கார்த்திகா

சென்னையில் ரவுடி சுரேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் குறித்து வெளிவராத பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கொளத்தூர் ரெட்டேரியைச் சேர்ந்தவர் கலா. இவரின் மகன் சுரேஷ். கொரட்டூர் காவல் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் சுரேஷின் பெயர் இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர். அதன்பிறகு அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து வெளியில் வந்த அவர், சுசீந்திரம் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார். அப்போது ஒருவரை கொலை முயற்சி செய்த வழக்கில் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

ஜெயகொடி
ஜெயகொடி

இதையடுத்து அடிதடி, ரவுடியிஸம் என சுரேஷ் வாழ்ந்துவந்தார். இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சுரேஷ், திருந்திவாழ்வதாக போலீஸாரிடம் கூறினார். அதன்பிறகு ஆட்டோ ஓட்டிவந்தார். இவரின் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் டிபன் கடை நடத்தி வந்தவர் பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்மு என்கிற கார்த்திகா (29). அந்தக் கடைக்கு அடிக்கடி சென்ற சுரேஷுக்கும் கார்த்திகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில்தான் கடந்த 14-ம் தேதி முதல் சுரேஷைக் காணவில்லை என்று அவரின் அம்மா கலா, கொட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ், ரமேஷ், சீதாராமன் ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் விசாரணை நடத்தியது.

ரவுடி சுரேஷ்
ரவுடி சுரேஷ்

சுரேஷின் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே விசாரித்தனர். அப்போது டிபன் கடை நடத்திவரும் கார்த்திகாவுடன் சுரேஷின் நட்பு குறித்த தகவல் கிடைத்தது. உடனே கார்த்திகாவிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் சுரேஷ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவல் வெளியில் தெரிந்தது. சுரேஷின் தலையைத் தனியாகத் துண்டித்து அதை செங்குன்றத்தை அடுத்த பாலவாயல் என்ற பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ரவுடி க்ரைம் சுரேஷ் மாயமான தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதன்பேரில் பாடி, கலைவாணர்நகர் பகுதிக்குச் சென்று கொரட்டூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது ஆட்டோவில் சுரேஷ் மயக்க நிலையில் இருந்தார். அவரை கார்த்திகாவின் கணவர் ஜெயக்கொடி, அவரின் நண்பர் புழல் காவாங்கரையைச் சேர்ந்த ராஜா (22), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரகாண்டன் (22) ஆகியோர் ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது `சுரேஷ், எங்களுக்கு உறவினர். வீட்டுக்கு வந்து தகராறு செய்தபோது நடந்த தகராறில் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்' என்று கூறினர்.

ராஜா
ராஜா

இதனால் கொரட்டூர் போலீஸாரும் `ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டு தகவலைத் தெரிவியுங்கள்' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். ஆட்டோவில் சுரேஷை ஏற்றிக் கொண்டு சென்ற ஜெயக்கொடி மற்றும் ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோர் சுரேஷின் எதிரியான மணிகண்டனுக்கு போனில் தகவலைத் தெரிவித்துள்ளனர். உடனே சுரேஷைத் தீர்த்துக்கட்ட மணிகண்டன் திட்டம் வகுத்தார்.

ஆட்டோவில் சென்றால் சிக்கல், அதனால் என்னுடைய காரை அனுப்பிவைக்கிறேன் என்று மணிகண்டன் கூறியதோடு காரோடு அங்கு சென்றார். ஆட்டோவிலிருந்து சுரேஷை காருக்கு மாற்றிய டீம், அங்கிருந்து செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதிக்குச் சென்றுள்ளனர். காரில் வைத்தே சுரேஷின் கழுத்தை அந்த டீம் அறுத்தபோது மயக்கம் தெளிந்த சுரேஷ், என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், சுரேஷின் தலையை அந்த டீம் துண்டித்தது. வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் சுரேஷின் சடலத்தை வீசிய அந்தக் கும்பல், தலையைமட்டும் அங்கிருந்து 3 கி.மீட்டர் தூரம் உள்ள பாலவாயல் பகுதியில் உள்ள கழிவு நீர்க் கால்வாயில் தூக்கி போட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

சுந்தரகாண்டன்
சுந்தரகாண்டன்

சுரேஷ் கொலை செய்யப்பட்ட தகவலை கார்த்திகாவுக்குத் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து, கார்த்திகாவிடம் விசாரணை நடந்த சமயத்தில் சுரேஷின் சடலத்தை மட்டும் வடபெரும்பாக்கம் பகுதியிலிருந்து மீட்டோம். அவரின் தலையை 12 மணி நேரமாகத் தேடினோம். இதற்கிடையில் கார்த்திகா அவரின் கணவர் ஜெயக்கொடி மற்றும் கூட்டாளிகள் ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தபோதுதான் பாலவாயல் பகுதி கால்வாயில் சுரேஷின் தலை கிடந்த தகவல் கிடைத்தது.

உடனே அங்கு ஜே.சி.பியுடன் போலீஸார் சென்றனர். தண்ணீரில் சுரேஷின் தலையைத் தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜே.சி.பி உதவியுடன் தண்ணீரில் சுரேஷின் தலை தேடப்பட்டது. அப்போது பிரபலமான ஜவுளிக்கடையின் பேக்கில் சுரேஷ் தலை சுற்றி வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்தோம்.

இதையடுத்து சுரேஷ் குறித்து கார்த்திகாவிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களை வாக்குமூலமாகப் பதிவு செய்தோம். ஜெயக்கொடியிடம் விசாரித்தபோது ``கார்த்திகாவின் கையைப்பிடித்து இழுத்ததால்தான் சுரேஷை கொலை செய்தேன்"என்பதை ஒப்புக் கொண்டார். சுரேஷை கொலை செய்யும் எண்ணம் ஜெயக்கொடிக்கு ஆரம்பத்தில் இல்லை. ஆனால் மணிகண்டனுக்கு வேண்டப்பட்ட பெண்ணை சுரேஷ் மிரட்டியதால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால்தான் சுரேஷை அவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்" என்றார்.

ஜெயக்கொடி,
ஜெயக்கொடி,

``சம்பவத்தன்று கார்த்திகாவின் வீட்டுக்கு வந்த சுரேஷ் அவருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் கார்த்திகாவின் பின்பகுதியில் குத்தியுள்ளார். இதனால்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அங்கிருந்தவர்கள் போன் செய்து தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஜெயக்கொடி வீட்டுக்கு வந்துள்ளார். மனைவியிடம் இப்படி நடந்த சுரேஷின் தலையைக் கட்டையால் தாக்கியுள்ளார். இதனால்தான் சுரேஷ் மயங்கிவிழுந்துள்ளார். அதன்பிறகுதான் கொலை நடந்துள்ளது. கார்த்திகாவின் செல்போனை ஆய்வு செய்த போலீஸார், தினமும் 100 தடவை சுரேஷின் நம்பருக்கு அழைப்பு சென்றது தெரியவந்துள்ளது" என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

சுரேஷுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் குழந்தைக்கும் தனக்கு வேண்டப்பட்ட பெண்ணின் பெயரைத்தான் வைத்திருக்கிறார். கார்த்திகா சமைக்கும் இட்லியும், சாம்பாரும் சுரேஷுக்கு ரொம்பவே பிடிக்கும். இதில் ஏற்பட்ட நட்பு கொலையில் முடிந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு