Published:Updated:

`ப்ளீஸ் அங்கிள்..விட்டுவிடுங்கள்!' - குடும்பத்தினரைக் கொல்ல வந்தவர்களின் காலில் விழுந்த சிறுமி

சென்னையில் குடும்பத்தினரைக் கொலை செய்ய வந்தவர்களின் காலில் விழுந்து சிறுமி கெஞ்சிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 காலில் விழுந்த சிறுமி
காலில் விழுந்த சிறுமி

சென்னை திருமங்கலம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் இதயசந்திரன் (43). இவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். கடந்த 27-ம் தேதி (தீபாவளி தினத்தன்று) இரவு 11.30 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த தீபக், கலையரசன், யாபேஷ், கோகுல்ராஜ், அப்பு, தினகரன், சூரியபிரகாஷ் மற்றும் சிலர் பெரியார் தெருவுக்குள் வந்தனர். அவர்களின் கைகளில் பெரிய கத்திகள் இருந்தன. அவர்கள் வீடுகளின் முன் நிறுத்தியிருந்த பைக், ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர்.

இந்தச் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த என் மனைவி கோமளா, அவரின் அக்கா ராஜேஸ்வரி மற்றும் ராதிகா ஆகியோர் வெளியில் வந்துள்ளனர். அவர்களை இந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன கோமளா, ராதிகா, ராஜேஸ்வரி ஆகியோர் அடுத்த தெருவுக்குள் ஓடி ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொலை வெறித்தாக்குதல்
கொலை வெறித்தாக்குதல்

இந்தச் சம்பவத்தைத் தட்டிக் கேட்ட உறவினர் சாய்குமாரை கத்தியால் வெட்டியுள்ளனர். ஆனால், குறிதவறி அருகில் உள்ள பைக்கில் வெட்டு விழுந்துள்ளது. அப்போது அங்கு வந்த என்னுடைய உறவினரின் மகளான 11 வயது சிறுமியை வெட்டப் பாய்ந்துள்ளனர். அப்போது அந்தச் சிறுமி அவர்களின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். ஆனால், மனம் இரங்காத அந்தக் கும்பல் சிறுமியின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளது.

பண்டிகை நாள் என்று பாராமல் என் வீட்டுக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய தீபக் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். அதன்அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் வழக்குப் பதிவு செய்து தீபக் மற்றும் அவரின் கூட்டாளிகளைத் தேடிவந்தார்.

இந்தநிலையில், பெரியார் தெருவில் தீபாவளி தினத்தன்று நடந்த சம்பவத்தை அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாடியில் இருந்தபடி செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோவில் பட்டாக்கத்தியுடன் வரும் தீபக் கும்பல் பைக், ஆட்டோக்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவ்வழியாக பைக்கில் வந்தவர்கள் கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடுகின்றனர். இந்த வீடியோ அடிப்படையில் போலீஸார் தீபக்கை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்தபோது தீபாவளி பட்டாசு வெடித்த தகராறில் இந்த மோதல் நடந்தது தெரியவந்தது.

வன்முறையில் ஈடுபடும் கும்பல்
வன்முறையில் ஈடுபடும் கும்பல்

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``தீபாவளியையொட்டி தெருவில் இதயசந்திரன் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அங்கு வந்த தீபக், `ஆள் வருவது தெரியாமல் இப்படி பட்டாசு வெடிக்கிறீர்களே?' என்று கேட்டுள்ளார். இதனால், தீபக்குக்கும் இதயசந்திரனின் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தீபக், இந்தத் தகவலை தன்னுடைய நண்பர்களிடம் கூறினார். உடனே அவர்கள் பட்டாக்கத்தியோடு இதயசந்திரன் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவு மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ அடிப்படையில் தீபக்கை கைது செய்துள்ளோம்.

தீபக், தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். அவருடன் வந்தவர்களை தேடிவருகிறோம். தீபக் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது 147, 148 (கலவரத்தை துாண்டுதல்), 336 (உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 தீபக்
தீபக்

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் நம்மிடம், ``தீபாவளியையொட்டி அனைவரும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தோம். திடீரென ஒரு கும்பல் பட்டாக்கத்தியோடு அங்கு வந்தது. அந்தக் கும்பல் தெருவில் உள்ள அனைவரையும் மிரட்டியது. இதனால் பயந்து போய் கதவை மூடிக்கொண்டோம். இந்தச் சமயத்தில் இதயசந்திரனின் குடும்பத்தினரைக் குறி வைத்து அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது பட்டாக்கத்தியுடன் வலம் வந்தவர்களின் காலில் விழுந்த 11 வயது சிறுமி, `ப்ளீஸ்... அங்கிள் என்னையும் என் குடும்பத்தையும் விட்டு விடுங்கள்' என்று கண்ணீர்மல்க கெஞ்சினார். ஆனால், போதையில் இருந்த அந்தக் கும்பல் சிறுமியை வெட்ட முயன்றது. அதைப்பார்த்த நாங்கள் மாடியிலிருந்து சத்தம் போட்டோம். பிரச்னை பெரிதானதும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தோம். உடனடியாக போலீஸார் வந்ததால் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது" என்றார்.

`ப்ளீஸ் அங்கிள்..விட்டுவிடுங்கள்!' - குடும்பத்தினரைக் கொல்ல வந்தவர்களின் காலில் விழுந்த சிறுமி #Chennai #Shocking http://bit.ly/2N3ZS2h

Posted by Junior Vikatan on Thursday, October 31, 2019