Published:Updated:

` என்னைக் கொன்றது பாம்பே சசி ஆட்கள்தான்!' - திருந்தி வாழ்ந்த ரவுடிக்கு முடிவுரை எழுதிய 21 ஆண்டு பகை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பழைய ரவுடி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

tamilarasan
tamilarasan

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். 38 வயதாகும் இவர் பிரபல ரவுடி எனக் கூறப்படுகிறது. தற்போது ரவுடி தொழிலில் இருந்து விலகி பெயின்டர் வேலை செய்துவந்துள்ளார். இதற்கிடையே, தமிழரசன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அவரை திடீரென சுற்றிவளைத்து, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டினர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த தமிழரசனை அந்தக் கும்பல் வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.

murder
murder

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியநிலையில், தமிழரசனின் கதறல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள், மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் தமிழரசன் இறந்துவிட்டார். இந்த வழக்கை சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

21 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப் பழி!

தமிழரசன் இருந்த அதே சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்தான் பாம்பே சசி. முன்விரோதம் ஒன்றில் பாம்பே சசி 21 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்தாறு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்தக் கும்பலில் ஒருவராக இருந்தவர்தான் தமிழரசன் எனக் கூறப்படுகிறது. இந்தக் கொலைக்குப் பின்னர் பாம்பே சசியின் உறவினர்களுக்கும் தமிழரசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதில், சசியின் கொலைக்குப் பழிக்குப்பழி வாங்கும்விதமாக 21 வருடங்களுக்குப் பிறகு தற்போது தமிழரசனை கொன்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Crime
Crime

சம்பவத்தன்று தமிழரசனை வெட்டிய பிறகு கொலைக் கும்பல் அவரை வீட்டிலிருந்து வெளியே போட்டுவிட்டுத் தப்பியுள்ளது. அப்போது வெட்டுக் காயங்களுடன் இருந்த தமிழரசன், ``என்னை வெட்டியது சசியின் உறவினர்கள் தான்'' எனக் கூறிவிட்டு, பாம்பே சசியின் மகன் நவீன், உறவினர் இமான், கூட்டாளிகள் அஜய், விவேக், தாவீது ஆகிய ஐந்து பேர் பெயரையும் சத்தமாகச் சொல்லிவிட்டு, பின்னர் ``நான் மீண்டும் உயிர் பிழைத்து உங்களைப் பழிவாங்குவேன்'' எனக் கூறியவாறே மயங்கிவிட்டார். இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார். இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த நவீன், இமான் உட்பட கொலையாளிகள் 5 பேரும் நேற்று மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருந்திவாழ்ந்தபோது நடந்த சோகம்!

தமிழரசன் ரவுடியாக இருந்தவர் என்றாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருந்திவாழ்ந்துள்ளார். எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் கிடைத்த பெயின்டர் வேலையை செய்துகொண்டு இருந்துள்ளார். இருப்பினும் பழைய பகை, அவரைத் துரத்திவந்து கொன்றுள்ளது சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.