Published:Updated:

`செல்போனில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார்!' -ஆவடி ரவுடிக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்

புஜ்ஜி என்கிற ராஜேஷ்
புஜ்ஜி என்கிற ராஜேஷ்

ஆவடியில் உள்ள டாஸ்மாக் கடையில் அமர்ந்திருந்த ரவுடி புஜ்ஜி, செல்போனில் யாருடனோ ஆவேசமாகப் பேசினார். அடுத்த சில மணி நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பூம்பொழில் நகரைச் சேர்ந்தவர் நாகராணி. இதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் புஜ்ஜி என்கிற ராஜேஷ் (36). இவர் மீது ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ரவுடியாக வலம் வந்த புஜ்ஜி, தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில், நாகராணி நடத்திவரும் கறிக்கடையின் அருகே புஜ்ஜி, ரத்த வெள்ளத்தில் நேற்றிரவு இறந்து கிடப்பதாகத் தகவல் வெளியானது.

புஜ்ஜி என்கிற ராஜேஷ்
புஜ்ஜி என்கிற ராஜேஷ்

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜேஷின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷ் சடலமாக கிடந்த இடத்தின் பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைப் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். ராஜேஷைக் கொலை செய்தது யார் என்று விசாரணை நடந்துவருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` வீட்டிலிருந்த ராஜேஷ் என்கிற புஜ்ஜிக்கு நேற்றிரவு செல்போனில் ஒர் அழைப்பு வந்துள்ளது. செல்போனில் பேசியபடி வீட்டிலிருந்து அவர் வெளியில் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று புஜ்ஜியின் அம்மா நாகராணியிடம் விசாரித்தபோது தகவல் கிடைத்தது. அதனால் புஜ்ஜியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது ஆவடி கோவில்பதாகை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் புஜ்ஜி மது அருந்தியுள்ளார். அப்போது அவர், செல்போனில் யாருடனோ ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

கொலை
கொலை
மாதிரி படம்

டாஸ்மாக் கடையில் கிடைத்த தகவலின்படி புஜ்ஜி யாருடன் செல்போனில் பேசினார் என்று அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது, புஜ்ஜியின் நண்பர் ஒருவர், அவரிடம் போனில் பேசிய தகவல் தெரியவந்தது. சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் புஜ்ஜி மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட மோதலில் புஜ்ஜியை சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். தலையில் காயமடைந்த புஜ்ஜி, டாஸ்மாக் கடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து, புஜ்ஜியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு கறிக்கடைப் பகுதியில் போட்டுவிட்டு நண்பர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே புஜ்ஜி இறந்துள்ளார். விரைவில் ரவுடி புஜ்ஜியைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம்
ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம்

கொலை செய்யப்பட்ட புஜ்ஜிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், புஜ்ஜி சரியாக வேலைக்குச் செல்லாததால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனர். தாயுடன் வசித்துவந்த புஜ்ஜி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி புஜ்ஜிக்கும் அவருடைய நண்பர்களுக்கும் என்னதான் பிரச்னை என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதுதொடர்பாக புஜ்ஜியின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு